தேடுதல்

Vatican News
இத்தாலியின் Loppiano எனுமிடத்திலுள்ள 'சோஃபியா' பல்கலைக்கழக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுடன் திருத்தந்தை இத்தாலியின் Loppiano எனுமிடத்திலுள்ள 'சோஃபியா' பல்கலைக்கழக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுடன் திருத்தந்தை  (Vatican Media)

'சோஃபியா' பல்கலைக்கழக நிறுவனத்தினருடன் திருத்தந்தை

'சோஃபியா' பல்கலைக்கழக நிறுவனத்தைச் சார்ந்த ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களைச் சந்தித்த திருத்தந்தை, மெய்யறிவு, ஒப்பந்தம், மற்றும் வெளியேச் செல்லுதல் என்ற மூன்று கருத்துக்களை அவர்களுடன் பகிர்ந்துகொண்டார்.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

'ஞானம்' அல்லது 'மெய்யறிவு' என்ற பொருள்படும் "Sophia" என்ற பெயருடன் இயங்கிவரும் பல்கலைக் கழக நிறுவனம், தன் பெயருக்கேற்ப, அனைத்து துறைகளிலும் மெய்யறிவை வளர்க்க வேண்டும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன்னைச் சந்திக்க வந்திருந்த இப்பல்கலைக் கழக நிறுவனத்தினரிடம் கூறினார்.

இத்தாலியின் Loppiano எனுமிடத்தில் 2007ம் ஆண்டு நிறுவப்பட்ட 'சோஃபியா' பல்கலைக்கழக நிறுவனத்தைச் சார்ந்த ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை, நவம்பர் 14 இவ்வியாழனன்று சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மெய்யறிவு, ஒப்பந்தம், மற்றும் வெளியேச் செல்லுதல் என்ற மூன்று கருத்துக்களை அவர்களுடன் பகிர்ந்துகொண்டார்.

மெய்யறிவு மட்டுமே, இறைவனின் முகத்தை வெளிச்சமிட்டு காட்டுவதோடு, மனிதர்கள் சந்திக்கும் கேள்விகள், துன்பங்கள் மற்றும் இலக்கு ஆகியவை குறித்த விளக்கங்களையும் வழங்குகிறது என்று திருத்தந்தை எடுத்துரைத்தார்.

ஒப்பந்தம் என்று கூறும்போது, அது, மனிதருக்கும், இறைவனுக்கும் இடையே நிகழும் ஒப்பந்தமாகவும், மனிதர்கள் தங்களுக்குள்ளும், இந்த படைப்பு அனைத்தோடும் கொள்ளும் ஒப்பந்தத்தையும் நினைவுறுத்துகிறது என்று தன் உரையில் விளக்கிக் கூறினார் திருத்தந்தை.

நம் சுயநலத்தையும், குறுகிய வட்டங்களையும் விட்டு வெளியேச் செல்லும்போதுதான் நாம் உண்மையான மெய்யறிவைப் பெற முடியும் என்பதை தன் உரையில் வலியுறுத்திக் கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நம்மைச் சுற்றியுள்ள அனைத்திலும் உறவு என்ற வலையைக் காண்பது நமக்கு தரப்பட்டுள்ள அழைப்பு என்று எடுத்துரைத்தார்.

Focolare இயக்கத்தை உருவாக்கிய Chiara Lubich என்ற சமுதாய ஆர்வலர் உருவாக்கிய ஒரு கல்வி நிறுவனத்திலிருந்து, 2007ம் ஆண்டு, உருவாக்கப்பட்ட 'சோஃபியா' பல்கலைக்கழக நிறுவனம், இவ்வாண்டு, தன் 12வது ஆண்டு நிறைவைச் சிறப்பிக்கிறது.

14 November 2019, 15:05