தேடுதல்

Vatican News
டோக்கியோ விமானத்தளத்தில் திருத்தந்தை டோக்கியோ விமானத்தளத்தில் திருத்தந்தை  (Vatican Media)

திருத்தூதுப் பயணம்: நாகசாகியில் சூரியனின் புதுமை

ஜப்பானில் கூறப்படும் வானிலை அறிக்கை, துல்லியமாக, நம்பத்தகுந்ததாக இருக்கும். ஆயினும், 24ம் தேதி முழுவதும் மழை பெய்யும் என்று கூறியிருந்த வேளையில், அன்று திருப்பலிக்கு முன், சூரிய ஒளி வீசியது, ஒரு புதுமையைப் போல் தெரிந்தது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான்

ஜப்பான் நாட்டில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மேற்கொண்ட திருத்தூதுப் பயணம் பற்றி பலர் சான்று பகர்ந்துள்ளனர். நான்கு வயதிலிருந்தே கண்பார்வையை இழந்திருக்கும் Mayuko Baba என்பவர், திருத்தந்தை சோஃபியா பல்கலைக்கழக நிகழ்வை நிறைவுசெய்து திரும்புகையில் அவரது கையைத் தொட்டேன், நான் அவரை, கண்களின்றி கண்டேன், நன்றி, நன்றி என, ராய்ட்டர் செய்திகளிடம் கூறியுள்ளார்.

அருள்பணி மனெர்பா

இத்திருத்தூதுப் பயணத்தில் கலந்துகொண்ட அருள்பணி லொரென்சோ மனெர்பா (Lorenzo Manerba) அவர்கள், தன் கருத்துக்களை ஆசிய செய்தியில் பதிவு செய்துள்ளார். PIME துறவு சபையின் மறைப்பணியாளராக, ஜப்பான் நாட்டில் 46 ஆண்டுகளாகப் பணியாற்றும் 74 வயது நிறைந்த மனெர்பா அவர்கள், தன் எண்ணங்களை இவ்வாறு வெளிப்படுத்தியுள்ளார்:

"நாகசாகி நகருக்கு திருத்தந்தை வருகை தந்த நாளில், மழை பெய்யும் என்று வானிலை அறிக்கை கூறியிருந்தது. ஆனால், திருத்தந்தை, அந்நகரில் திருப்பலி நிறைவேற்ற வந்த வேளையில், சூரிய ஒளி அங்கு நிறைந்திருந்தது. இத்திருப்பலியில் கலந்துகொள்ள வந்திருந்த 30,000த்திற்கும் அதிகமான மக்களுக்கும், 300க்கும் அதிகமான அருள்பணியாளர்களுக்கும் இது மகிழ்வைத் தந்தது. 24ம் தேதி ஞாயிறன்று காலை முதல் மழை பெய்துகொண்டிருந்தது. நடுப்பகலில், நாகசாகி விளையாட்டு அரங்கத்தில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் திறந்த வாகனத்தில் நுழைந்ததும், மழை நின்று, சூரிய ஒளி வீசியது. ஜப்பானில் கூறப்படும் வானிலை அறிக்கை, துல்லியமாக, நம்பத்தகுந்ததாக இருக்கும். 24ம் தேதி முழுவதும் மழை பெய்யும் என்று கூறியிருந்த வேளையில், திருப்பலிக்கு முன், சூரிய ஒளி வீசியது, ஒரு புதுமையைப் போல் தெரிந்தது" என்று அருள்பணி மனெர்பா அவர்கள், கூறினார்.

26 November 2019, 14:42