தேடுதல்

புனித ஜான் இலாத்தரன் பசிலிக்காவில் திருத்தந்தை திருப்பலி புனித ஜான் இலாத்தரன் பசிலிக்காவில் திருத்தந்தை திருப்பலி  

சந்தியுங்கள், உரையாடுங்கள், மற்றவர்களுக்கு செவிசாயுங்கள்

'நம் நடவடிக்கைகள் குறித்த தவிப்பில் நாம் மாட்டிக்கொள்ளாமல், ஆன்மீக உதவியுடன், இறைவனின் இருப்பு மற்றும் நடவடிக்கைகள் குறித்து புரிந்து கொள்ள முயல்வோம் – திருத்தந்தையின் மறையுரை

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள் 

மக்களைச் சென்று சந்தியுங்கள், அவர்களோடு உரையாடலை மேற்கொள்ளுங்கள், தாழ்ச்சி, நன்றி, இதய ஏழ்மை ஆகிய உணர்வுகளுடன் மற்றவர்களுக்கு செவிசாயுங்கள் என இச்சனிக்கிழமையன்று  மறையுரையாற்றினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

உரோம் நகரின் புனித ஜான் இலாத்தரன் பசிலிக்கா நேர்ந்தளிப்புத் திருவிழாவை சிறப்பிக்கும் விதமாக, அப்பசிலிக்காவில் இச்சனிக்கிழமையன்று மாலை திருப்பலி நிறைவேற்றி மறையுரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பிறரைச் சென்று சந்திப்பது, அவர்களோடு உரையாடுவது, அவர்களுக்கு தாழ்மையுடன் செவிமடுப்பது என்ற மூன்று வாக்கியங்களை உரோம் நகர் கிறிஸ்தவர்களுக்கு, ஒரு கொடையாக, தான் வழங்குவதாகத் தெரிவித்தார்.

'நம் நடவடிக்கைகள் குறித்த தவிப்பில் நாம் மாட்டிக்கொள்ளாமல், ஆன்மீக உதவியுடன், இந்நகரில் இறைவனின் இருப்பு மற்றும் நடவடிக்கைகள் குறித்து புரிந்துகொள்ள முயல்வோம் என்ற விண்ணப்பத்தையும் முன்வைத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

மக்களை நோக்கிச் சென்று அவர்களுக்காகப் பணிபுரியும்போது, அவர்களில் ஒரு விடயம் குறித்த நம்பிக்கையையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்துவது அவசியம் என்றுரைத்தத் திருத்தந்தை, கிறிஸ்துவுக்கு விருப்பமில்லாத, மற்றும், அவரால் மீண்டும் பிறப்பெடுக்க முடியாத இதயம் என்று எதுவும் இல்லை, ஏனெனில், நம்  உறவுகள் எவ்வளவு இடிபாடுகளுக்கு உள்ளாக்கப்பட்டிருந்தாலும் மூன்று நாட்களில் அவற்றை மீண்டும் கட்டியெழுப்பி விடுவார் இயேசு என்பதே அவ்விடயம்,  என மேலும் உரைத்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

11 November 2019, 15:46