திருத்தந்தையின் நவம்பர் மாத செபக் கருத்து திருத்தந்தையின் நவம்பர் மாத செபக் கருத்து 

மத்திய கிழக்குப் பகுதியில் உரையாடல் இடம்பெறுமாறு செபம்

மத்திய கிழக்கு நாடுகளில், முஸ்லிம்கள் 93 விழுக்காட்டிற்கும் அதிகம். கிறிஸ்தவர்கள் ஏறத்தாழ 5 விழுக்காடு. மற்றும், யூதர்கள் ஏறத்தாழ 2 விழுக்காடு

கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான் செய்திகள்

மத்திய கிழக்கு நாடுகளில், சமயக் குழுக்கள் மத்தியில், உண்மையான உரையாடல் இடம்பெற இறைவனிடம் மன்றாடுமாறு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தனது நவம்பர் மாதச் செபக் கருத்து வழியாக, கத்தோலிக்கர் எல்லாரையும் கேட்டுக்கொண்டுள்ளார்.

வேறுபட்ட சமயக் குழுக்கள், தங்கள் வாழ்வை ஒன்றிணைந்து பகிர்ந்துகொள்ளும் மத்திய கிழக்கு நாடுகளில், உரையாடல், சந்திப்பு, ஒப்புரவு ஆகியவற்றின் ஆற்றல் மேலோங்கும்படியாக, இம்மாதத்தில் கத்தோலிக்கர் செபிக்குமாறு அழைப்பு விடுத்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இச்செபக் கருத்து குறித்த சிந்தனைகளை காணொளி வழியாகப் பகிர்ந்துகொண்டுள்ள திருத்தந்தை, மத்திய கிழக்கில், அருகருகே வாழ்கின்ற சமயக் குழுக்கள் மத்தியில், உரையாடல், சந்திப்பு மற்றும் ஒப்புரவு உணர்வு வெளிப்படுவதற்காக, இறைவேண்டல் செய்யுமாறு விண்ணப்பித்துள்ளார்.

மத்திய கிழக்கில், ஆன்மீக மற்றும், வரலாற்று முறையில் பிணைப்பைக் கொண்டிருக்கும், கிறிஸ்தவர்கள், யூதர்கள், மற்றும் முஸ்லிம்கள் மத்தியில் ஓர் இணக்கமான வாழ்வு உருவாக வேண்டும் என்ற தன் ஆவலையும், திருத்தந்தை வெளியிட்டுள்ளார்.

புவியியலில் மத்தியதரைக் கடலுக்கு கிழக்கில் அமைந்துள்ள பகுதிகளில் வாழ்கின்ற பல கிறிஸ்தவ, யூத, மற்றும் முஸ்லிம் குழுமங்கள், அமைதி, ஒப்புரவு மற்றும், மன்னிப்புக்காக உழைத்து வருகின்றன என்று, காணொளியில் குறிப்பிட்டுள்ள திருத்தந்தை, வேறுபாடுகள் என்ற அச்சமின்றி, இந்தக் குழுமங்கள், உரையாடல் மற்றும், ஒற்றுமைக்கான வழிகளைத் தேடுமாறும் கூறியுள்ளார்.

மத்திய கிழக்கு நாடுகள்

பஹ்ரைன், எகிப்து, சைப்ரஸ், ஈரான், ஈராக், இஸ்ரேல், ஜோர்டன், குவைத், லெபனான், ஓமன், கத்தார், சவுதி அரேபியா, சிரியா, துருக்கி, ஐக்கிய அரபு அமீரகம், ஏமன், பாலஸ்தீனம் ஆகியவை, மத்திய கிழக்கு நாடுகளாகும். அண்மையில் வெளியான அறிக்கையின்படி, இப்பகுதியில் வாழும் மக்களில் முஸ்லிம்கள் 93 விழுக்காட்டிற்கும் அதிகம். கிறிஸ்தவர்கள் ஏறத்தாழ 5 விழுக்காடு. மற்றும், யூதர்கள் ஏறத்தாழ 2 விழுக்காடு ஆகும்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

05 November 2019, 14:56