தேடுதல்

Vatican News
திருப்பீட செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் திருப்பீட செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் 

தாய்லாந்து, ஜப்பானில் வாழ்வு, அமைதியை ஊக்குவிப்பதற்காக..

350 ஆண்டுகளுக்குமுன், தாய்லாந்தில் முதலில் நற்செய்தி அறிவித்த இயேசு சபை மறைப்பணியாளர்களின் அடிச்சுவடுகளின் வழி செல்கிறார், திருத்தந்தை பிரான்சிஸ்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான் செய்திகள்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தாய்லாந்து மற்றும், ஜப்பான் நாடுகளுக்கு மேற்கொள்ளும் திருத்தூதுப் பயணம் பற்றி, வத்திக்கான் செய்திகளுக்குப் பேட்டியளித்த, திருப்பீட செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், வாழ்வு மற்றும், அமைதியை ஊக்குவிப்பதற்காக, திருத்தந்தை அந்நாடுகளுக்குச் செல்கிறார் என்று கூறினார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இப்பயணத்தில், தூதுரைப்பணி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, அமைதி ஆகிய தலைப்புக்களில், தனது எண்ணங்களைப் பகிர்ந்துகொள்வார் என்று கூறிய கர்தினால் பரோலின் அவர்கள், புனித திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்கள், 1984ம் ஆண்டு மே மாதத்தில் தாய்லாந்திலும், 1981ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் ஜப்பானிலும் திருத்தூதுப் பயணம் மேற்கொண்டதற்குப்பின், உலகம் மாபெரும் மாற்றங்களைக் கண்டுள்ளது என்று தெரிவித்தார்.

தாராளமயமாக்கல், உலகை மிகச் சிறியதாக அமைத்துள்ளது என்றும், இது, உடலளவில் மக்கள் தொலை தூரத்தில் இருந்தாலும், முகம் முகமாய் பேசுவதற்கு அனுமதித்துள்ளது என்று கூறிய, கர்தினால் பரோலின் அவர்கள், வெகு தூரத்திலுள்ள மக்களை நேருக்கு நேர் சந்திப்பதற்கு திருத்தந்தை விரும்புகிறார் என்று கூறினார்.

திருஅவையின் அக்கறையில் மனிதர் மைய இடத்தில் உள்ளதால் இவ்வாறு திருத்தந்தை பயணம் மேற்கொள்கிறார் என்று கூறிய கர்தினால் பரோலின் அவர்கள், திருஅவை, நற்செய்தியை, ஒவ்வொரு மனிதருக்கும் அறிவிக்க வேண்டும், வாழ்வின் கடினமான கேள்விகளுக்குப் பதிலளித்து, வாழ்வின் பொருளைக் கண்டுணர திருஅவை உதவ வேண்டும் என்றும் கூறினார்.

தாய்லாந்து

தாய்லாந்து பற்றிச் சொல்ல வேண்டுமெனில், 350 ஆண்டுகளுக்குமுன், தாய்லாந்தில் முதலில் நற்செய்தி அறிவித்த இயேசு சபை மறைப்பணியாளர்களின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அந்நாடு செல்கிறார் என்று பகிர்ந்துகொண்டார், கர்தினால் பரோலின்.

தாய்லாந்திலுள்ள 4 இலட்சத்திற்கு அதிகமான கத்தோலிக்கர், தூய ஆவியாருக்குத் திறந்தமனம் உள்ளவர்களாய், உண்மையான மறைப்பணியாளர்களாக மாறுமாறு திருத்தந்தை ஊக்குவிப்பார் என்றும் திருப்பீடச் செயலர் கூறினார்.

ஜப்பான்

ஜப்பானில் மேற்கொள்ளும் திருத்தூதுப் பயணத்தில், உலகில் அணு ஆயுத ஒழிப்புக்கும், அமைதிக்கும் திருத்தந்தை அழைப்பு விடுப்பார் என்றுரைத்த கர்தினால் பரோலின் அவர்கள், பாரம்பரியம் மற்றும், நவீன முறைகளுக்கு இடையே வாழும் ஜப்பானைக் காண்பார் என்று கூறினார். திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தனது 32வது வெளிநாட்டுத் திருத்தூதுப் பயணத்தில், நவம்பர் 20-23 வரை தாய்லாந்திலும், நவம்பர் 23-26 வரை ஜப்பானிலும் திருத்தூதுப் பயணம் மேற்கொள்கிறார். இப்பயணம், திருத்தந்தை, ஆசியாவுக்கு மேற்கொள்ளும் நான்காவது திருத்தூதுப் பயணமாகும்.

19 November 2019, 14:43