தேடுதல்

தாய்லாந்து விமான நிலையத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை வரவேற்ற ஆயர்கள் தாய்லாந்து விமான நிலையத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை வரவேற்ற ஆயர்கள் 

தாய்லாந்து பயணம் குறித்து, கர்தினால் Kovithavanij

தாய்லாந்து நாட்டில், கத்தோலிக்கர்கள் சிறுபான்மையினர்தான் என்றாலும், திருத்தந்தையின் வருகையால், கத்தோலிக்கர்களின் தாக்கம் இன்னும் அதிகரிக்கும் என்று தான் நம்புவதாக, கர்தினால் Kovithavanij அவர்கள் கூறினார்.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

இறைவனின் அன்பு அனைவருக்கும் உரியது என்பதை தாய்லாந்து மக்கள் உணரும்வண்ணம், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் திருத்தூதுப் பயணம் அந்நாட்டில் அமையும் என்று, தாய்லாந்து ஆயர் பேரவையின் தலைவர், கர்தினால், Francis Xavier Kriengsak Kovithavanij அவர்கள் கூறியுள்ளார்.

நவம்பர் 19ம் தேதி மாலை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தாய்லாந்து நாட்டிற்கு திருத்தூதுப் பயணம் மேற்கொண்ட வேளையில், அதே விமானத்தில் பயணம் செய்த பாங்காக் பேராயர், கர்தினால் Kovithavanij அவர்கள், Zenit கத்தோலிக்கச் செய்திக்கு அளித்த பேட்டியில், திருத்தந்தையின் பயணம், தங்கள் நாட்டில் வாழும் வறியோருக்கு பெரும் ஆறுதலாகவும், உந்து சக்தியாகவும் அமையும் என்று கூறினார்.

தாய்லாந்து நாட்டில், கத்தோலிக்கத் திருஅவை நிறுவப்பட்டதன் 350ம் ஆண்டு நிறைவைச் சிறப்பிக்கும் இவ்வேளையில், தாய்லாந்து நாட்டில், சிறுபான்மையினராக வாழும் கத்தோலிக்கர்களுக்கு, திருத்தந்தையின் வருகை, பெரும் தூண்டுதலாக விளங்கும் என்று, கர்தினால் Kovithavanij அவர்கள், தன் பேட்டியில் குறிப்பிட்டார்.

6 கோடியே 70 இலட்சம் மக்கள் வாழும் தாய்லாந்து நாட்டில், கத்தோலிக்கர்களின் எண்ணிக்கை, ஏறத்தாழ 3,50,000தான் என்றாலும், திருத்தந்தையின் வருகையால், தங்கள் நாட்டில், கத்தோலிக்கர்களின் தாக்கம் இன்னும் அதிகரிக்கும் என்று தான் நம்புவதாக, கர்தினால் Kovithavanij அவர்கள், தன் பேட்டியில் எடுத்துரைத்தார். (Zenit)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

20 November 2019, 14:30