Vatican News
பாங்காக் விண்ணேற்பு பேராலயத்தில் திருப்பலி பாங்காக் விண்ணேற்பு பேராலயத்தில் திருப்பலி  (Vatican Media)

பாங்காக் விண்ணேற்பு பேராலயத்தில் திருப்பலி

தாய்லாந்தில் இனிய வரவேற்பளித்த தாய்லாந்து அரசர் 10ம் இராமா, அரசு, அதிகாரிகள், இன்னும், ஆயர்கள், அருள்பணியாளர்கள், இருபால் துறவியர், இளையோர், மற்றும், தன்னார்வலர்களுக்கு நன்றி

கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான்

நவம்பர் 22, இவ்வெள்ளி, பாடகர்களின் பாதுகாவலர் புனித செசீலியா விழா. எனவே,  இன்று உள்ளூர் நேரம் மாலை ஐந்து மணியளவில், பாங்காக் விண்ணேற்பு பேராலயத்தில், கன்னியும், மறைசாட்சியுமான புனித செசீலியா நினைவாக, திருப்பலி நிறைவேற்றினார் திருத்தந்தை பிரான்சிஸ். இதில் பெருமளவான இளையோர் உட்பட, ஏறத்தாழ பத்தாயிரம் விசுவாசிகள், பேராலயத்திற்குள்ளேயும், வளாகத்திலும் இருந்து கலந்துகொண்டனர். இதுவே தாய்லாந்தில் திருத்தந்தை நிறைவேற்றிய இறுதி திருப்பலியாகும். இலத்தீனில் திருப்பலியை நிறைவேற்றிய திருத்தந்தை, மறையுரையும் வழங்கினார். இயேசுவோடு நட்புறவு கொள்வதன் வழியாக, விசுவாசத்தில் வேரூன்றி இருங்கள் என்று, இளையோரிடம் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை. இத்திருப்பலியின் இறுதியில், பெரிய நடனக்குழு ஒன்றின் அழகிய நடனமும் நடைபெற்றது. தாய்லாந்தில் புதிய ஆலயங்கள் எழுப்பப்படுவதற்கென 25 அடிக்கற்களையும் ஆசீர்வதித்தார் திருத்தந்தை பிரான்சிஸ். இத்திருப்பலியின் இறுதியில், தாய்லாந்து திருத்தூதுப் பயணம் பலனுள்ள முறையில் அமைவதற்குப் பணியாற்றிய எல்லாருக்கும் நன்றி கூறினார் திருத்தந்தை.

தாய்லாந்து நாட்டினருக்கு நன்றி

இனிய வரவேற்பளித்த தாய்லாந்து அரசர் 10ம் இராமா, அரசு, அதிகாரிகள், இன்னும், சகோதரர் ஆயர்கள், குறிப்பாக கர்தினால் பிரான்சிஸ் சேவியர், அருள்பணியாளர்கள், இருபால் துறவியர், அன்பு இளையோர், தன்னார்வலர்கள் என, அனைவருக்கும், திருத்தந்தை இதயங்கனிந்த நன்றி கூறினார். தங்களின் செபங்கள் மற்றும், தியாகங்களால், இப்பயணத்தில் உடன்வந்தவர்கள், குறிப்பாக, நோயளிகள், கைதிகள் அனைவருக்கும் நன்றி. ஆண்டவர் மட்டுமே அளிக்கக்கூடிய ஆறுதல் மற்றும் அமைதியை, இவற்றிற்கு நீங்கள் பிரதிபலனாகப் பெறுவீர்களாக. உங்களைவிட்டுப் பிரியும் இந்நேரத்தில், எனக்காகச் செபிக்க மறக்க வேண்டாம் என்ற ஒரு வேலையை விட்டுச் செல்கிறேன் என்று திருத்தந்தை கூறினார்.

இத்திருப்பலியே இவ்வெள்ளியன்று நடைபெற்ற இறுதி நிகழ்வாகும். நவம்பர் 23, இச்சனிக்கிழமை காலை 7 மணிக்கு பாங்காக் திருப்பீட தூதரகத்தில் தனியே திருப்பலி நிறைவேற்றியபின், அங்கிருந்து விடைபெற்று, விமான நிலையம் சென்று ஜப்பான் நாட்டிற்குப் புறப்படுவார்  திருத்தந்தை பிரான்சிஸ்.

தாய்லாந்து

தாய்லாந்து என்றால் “அயலவர் ஆட்சிக்கு உட்படாத நிலம்”, தன்னுரிமையுடைய நிலம் என்று பொருள். தென்கிழக்கு ஆசியாவில், சியாம் வளைகுடா என ஒருகாலத்தில் அழைக்கப்பட்ட தாய்லாந்து வளைகுடாவில் அமைந்துள்ள இந்நாடு, 13ம் நூற்றாண்டிலிருந்து பல்வேறு மன்னர்களால் உருவாக்கப்பட்டது. அண்டை நாடுகளான மியான்மார் மற்றும், கம்போடிய வல்லசுகளால் அடிக்கடி தாக்கப்பட்டது தாய்லாந்து. அரசர், அரசியலமைப்பை ஏற்க வேண்டுமென கட்டாயப்படுத்தப்பட்ட 1932ம் ஆண்டுவரை இந்நாட்டில் முடியாட்சியே நிலவியது. சியாம் என அழைக்கப்பட்டுவந்த இந்நாடு, 1939ம் ஆண்டு ஜூன் மாதம் 23ம் தேதி தாய்லாந்து என பெயர் சூட்டப்பட்டது. இரண்டாம் உலகப் போரில் ஜப்பானால் ஆக்ரமிக்கப்பட்டிருந்த தாய்லாந்து, 1946ம் ஆண்டு முதல், 1948ம் ஆண்டு வரை, மீண்டும், சியாம் எனவும், அதற்குப்பின் தாய்லாந்து எனவும் பெயர் மாற்றப்பட்டது. அழகிய வெப்பமண்டல கடற்கரைகளையும், செல்வமிக்க அரண்மனைகளையும், சிதைவுற்ற பழங்கால கட்டடங்களையும், புத்தர் திருவுருவத்தைக் கொண்ட பகட்டான கோவில்களையும் தாய்லாந்தில் காணலாம். தலைநகர் பாங்காக்கின் அடையாளங்களாக, Wat Arun, Wat Pho உட்பட பச்சைக்கல் மரகத (Wat Phra Kaew) புத்தமத கோவில்கள் கவினுற காட்சி தருகின்றன. இத்தகைய அழகான தாய்லாந்தில் மூன்று நாள்கள் திருத்தூதுப் பயணத்தை மேற்கொண்டு, சிறுபான்மை கத்தோலிக்க சமுதாயத்தை விசுவாசத்தில் ஆழப்படுத்தினார், திருத்தந்தை பிரான்சிஸ்

22 November 2019, 14:40