அல்பேனிய திருப்பயணிகளுடன் திருத்தந்தை அல்பேனிய திருப்பயணிகளுடன் திருத்தந்தை 

அல்பேனியாவிற்கு திருத்தந்தை நிதியுதவி

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள அல்பேனியாவிற்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் முதல்கட்ட உதவியாக, ஒரு இலட்சம் யூரோக்களை அனுப்பியுள்ளார்.

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள அல்பேனியாவிற்கு, முதல்கட்ட உதவியாக, ஒரு இலட்சம் யூரோக்களை அனுப்பியுள்ளார்.

ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற திருப்பீட அவை வழியாக அனுப்பப்பட்டுள்ள, இந்த அவசரகால நிதியுதவி, நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள அல்பேனியாவின் மறைமாவட்டங்களுக்குப் பகிர்ந்தளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  

இதற்கிடையே, நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள அல்பேனியா நாட்டில், ஏறத்தாழ ஒன்பதாயிரம் சிறார்க்கு மனிதாபிமான உதவிகள் தேவைப்படுகின்றன என்று, Save the Children என்ற அமைப்பு அறிவித்துள்ளது.

அல்பேனியாவில், நவம்பர் 26 இச்செவ்வாய் அதிகாலையில் இடம்பெற்ற நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, இவ்வெள்ளி காலை வரை, இடம்பெற்றுள்ள பத்து நிலநடுக்கங்களில், சிறார் உட்பட 49 பேர் இறந்துள்ளனர், 600க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர் மற்றும், ஏறத்தாழ 157 கட்டடங்கள் சேதமாகியுள்ளன.

இவற்றில் இறந்தவர்கள் மற்றும், காயமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் நிலவும்வேளை, இதில் பாதிக்கப்பட்டுள்ள சிறார்க்கு உடனடி உதவிகள் தேவைப்படுகின்றன என்று, அல்பேனியாவில் இயங்கும் Save the Children அமைப்பின் இயக்குனர் Anila Meco அவர்கள் கூறினார்.

நவம்பர் 26, இச்செவ்வாய் அதிகாலையில் அல்பேனியாவின் தலைநகர் Tiranaவுக்கு அருகேயுள்ள ஓரிடத்தில் 6.4 ரிக்டர் அளவு நிலநடுக்கம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து, அந்நாட்டில் பத்து நிலநடுக்கங்கள் இடம்பெற்றுள்ளன என்று ஊடகங்கள் கூறுகின்றன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

29 November 2019, 14:54