Vatican News
ஜப்பானிய திருப்பீடத் தூதரகத்தில், ஆயர்களுக்கு உரை வழங்கிய திருத்தந்தை ஜப்பானிய திருப்பீடத் தூதரகத்தில், ஆயர்களுக்கு உரை வழங்கிய திருத்தந்தை   (AFP or licensors)

ஜப்பானிய ஆயர்களுக்கு திருத்தந்தை வழங்கிய உரை

இந்நாட்டில் பணியாற்றவேண்டும் என்ற ஆவல், என் இளமையிலிருந்தே என்னுடன் இருந்து வந்தது. தற்போது, இந்நாட்டிற்கு, ஒரு மறைப்பணி திருப்பயணியாக வருவதற்கு, இறைவன் வாய்ப்பளித்துள்ளார் – திருத்தந்தை பிரான்சிஸ்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

அன்பு சகோதரர்களே, ஜப்பானில் நான் மேற்கொள்ளும் முதல் சந்திப்பில், ஆயர்களாகிய உங்கள் வழியே, இந்நாட்டில் உள்ள பொதுநிலையினர், மறைக்கல்வி ஆசிரியர்கள், அருள்பணியாளர்கள், துறவியர், துறவு மற்றும் அருள்பணி வாழ்வு பயிற்சியில் இருப்போர் அனைவருக்கும் என் வணக்கத்தைக் கூறிக்கொள்கிறேன். ஜப்பானில் புதிய மன்னர் பொறுப்பேற்றுள்ள இவ்வேளையில், அனைத்து மக்களுக்கும் என் வாழ்த்துக்கள்.

இந்நாட்டில் பணியாற்றவேண்டும் என்ற ஆவல், என் இளமையிலிருந்தே என்னுடன் இருந்து வந்தது. தற்போது, இந்நாட்டிற்கு, ஒரு மறைப்பணி திருப்பயணியாக வருவதற்கு, இறைவன் வாய்ப்பளித்துள்ளார்.

புனித பிரான்சிஸ் சேவியர் வழியில்...

புனித பிரான்சிஸ் சேவியர், ஜப்பானுக்கு வருகை தந்து, 470 ஆண்டுகள் கடந்துவிட்டன. இம்மண்ணில் கிறிஸ்தவத்தை வளர்த்த அனைவருக்காகவும், இப்புனிதரின் நினைவாக, இறைவனுக்கு நன்றி கூறவிழைகிறேன். மறைப்பணியாளர்களின் அர்ப்பணத்தால், ஜப்பான் தலத்திருஅவை, தனிப்பட்டதோர் அடையாளத்தைக் கொண்டுள்ளது. புனித பால் மீகி (Paul Miki) மற்றும் அவரது தோழர்கள், அருளாளர் ஜுஸ்தோ தக்கயாமா ஊகோன் (Justo Takayama Ukon) ஆகியோரை எண்ணிப்பார்க்கிறேன். நாகசாகி பகுதியில் வாழ்ந்த 'மறைந்த கிறிஸ்தவர்களையும்', இவ்வேளையில், நன்றியோடு நினைத்துப் பார்க்கிறேன்.

இரண்டு அல்லது மூன்று பேர் தன் பெயரின் பொருட்டு கூடியிருக்கும்போது அங்கு தான் இருப்பதாக (காண்க மத். 18:20) வாக்களித்த இறைவன், ஜப்பான் நாட்டில் கிறிஸ்தவர்கள் கூடிவந்த நேரங்களில் அவர்கள் நடுவே இருந்தார். பல்வேறு பெரும் இன்னல்களுக்கு நடுவிலும், இறைவனின் பெயரை தியானித்து வாழ்ந்ததால், இந்நாட்டில் திருஅவை வாழ்ந்தது. கிறிஸ்தவ மறையை, ஜப்பானிய கலாச்சாரத்துடன் இணைந்து செல்லும் வகையில் வளர்க்க, நீங்கள் மேற்கொண்டுள்ள முயற்சியாலும், ஜப்பான் நாட்டின் வளர்ச்சியில் கிறிஸ்தவர்கள் காட்டிவரும் ஆர்வத்தாலும், கிறிஸ்தவம் இந்நாட்டில் பெருமதிப்பு பெற்றுள்ளது.

"அனைத்து உயிர்களையும் பாதுகாக்க"

"அனைத்து உயிர்களையும் பாதுகாக்க" என்பதே, என் திருத்தூதுப் பயணத்தின் விருதுவாக்கு. ஆயர்களாகிய நமது பணிக்கு, இது ஓர் அழகிய அடையாளம். மக்களிடமிருந்து தெரிந்துகொள்ளப்படும் ஆயர், மீண்டும், மக்களிடம் வழங்கப்பட்டு, அனைத்து உயிர்களையும் பாதுகாக்கும் அழைப்பை பெற்றுள்ளார். இந்த கருத்து, நம் நோக்கங்களையும், இலக்குகளையும் பெருமளவு தீர்மானிக்கின்றது.

ஐரோப்பிய வடிவங்களுக்கு மாற்றாக...

இந்நாட்டில் மேற்கொள்ளப்பட்ட மறைப்பணி, உரையாடல், கலாச்சார மயமாதல் போன்ற வழிகளில் ஆழ்ந்த தேடல்களை மேற்கொண்டதால், ஐரோப்பாவில் உருவான வடிவங்களுக்குப் பதிலாக, புதிய வடிவங்களை உருவாக்கமுடிந்தது. துவக்கத்திலிருந்தே, கிறிஸ்தவப் பாரம்பரியத்தில், இலக்கியம், நாடகம், இசை என்ற பல வடிவங்களில், ஜப்பானிய மொழியே பயன்படுத்தப்பட்டது. துவக்கத்தில் பணியாற்றிய மறைபரப்புப் பணியாளர்கள், இந்நாட்டின் மீது கொண்டிருந்த ஆழ்ந்த அன்பை இது காட்டுகிறது.

அனைத்து உயிர்களையும் பாதுகாப்பது என்பதன் முதல் பொருள், அனைத்து மக்களின் வாழ்வை, ஆழ்நிலை தியானமாக, அன்புடன் நோக்குவதிலும், அவர்கள் இறைவன் வழங்கிய கொடைகள் என்று காண்பதிலும் அடங்கியுள்ளது. மனுவுருவெடுத்தல் என்ற கருத்தில் சிந்திக்கும்போது, ஒவ்வொரு உயிரும் இறைவனின் கொடை என்பது தெளிவாகிறது. அனைத்து உயிர்களைக் காப்பதும், நற்செய்தியைப் பறைசாற்றுவதும் ஒன்றுக்கொன்று முரணானவை அல்ல, மாறாக, இரண்டுமே, ஒன்றையொன்று சார்ந்துள்ளன.

பணிவோடு மேற்கொள்ளப்படும் உரையாடல்

ஜப்பான் தலத்திருஅவை சிறியது, மற்றும், இங்குள்ள கத்தோலிக்கர், சிறுபான்மையினர், என்ற எண்ணங்கள், நற்செய்தி அறிவிப்புப்பணியில், உங்கள் அர்ப்பணிப்பை, எவ்வகையிலும் குறைக்கக்கூடாது. நீங்கள் இருக்கும் சூழலில், ஒவ்வொருநாள் வாழ்வில், ஏனைய சமயங்களோடு, பணிவோடு நீங்கள் மேற்கொள்ளும் உரையாடலே, நீங்கள் ஆற்றக்கூடிய நற்செய்திப் பணி. இந்நாட்டில் உள்ள கத்தோலிக்கர்களில், பாதிக்கும் மேற்பட்டோர், பிற நாடுகளிலிருந்து வந்திருக்கும் தொழிலாளிகள் என்பதால், அவர்கள்மீது நீங்கள் காட்டும் அக்கறையும், விருந்தோம்பலும், ஜப்பான் சமுதாயத்திற்கு, நற்செய்தியின் சான்றாக விளங்கும்.

தயக்கமின்றி நீதிக்கு குரல்கொடுக்க...

சாட்சியம் வழங்கும் திருஅவை, அமைதி, நீதி ஆகிய தளங்களில், உலகம் சந்திக்கும் நெருக்கடிகளுக்கு உள்ளார்ந்த சுதந்திரத்துடன் தீர்வுகள் வழங்க இயலும். விரைவில் நான், நாகசாகி, ஹிரோஷிமா நகரங்களுக்குச் சென்று, அணுகுண்டு தாக்குதல்களால் பாதிக்கப்பட்டோருக்காக செபங்களை எழுப்புவேன். அப்போது, அணு ஆயுத களைவுக்காக நீங்கள் விடுத்துவரும் விண்ணப்பங்களையும் எதிரொலிப்பேன். இந்த தாக்குதல்களின் விளைவுகளை தங்கள் உடலில் இன்னும் சுமந்திருப்போரை நான் சந்திக்க விழைகிறேன்.

தீமையின் சக்தி, மக்களின் அடையாளம், பின்னணி ஆகிய எதையும் காணாமல், அனைத்தையும், அனைவரையும் அழிக்கிறது. அணு ஆயுதத் தாக்குதல்களில் இறந்தோரையும், அவர்களது குடும்பத்தினரையும், இந்தத் தாக்குதல்களில் அனைத்தையும் இழந்தோரையும், இறைவனின் கருணையில் ஒப்படைப்போம். ஜப்பானிலும், இன்னும் உலகெங்கும், உயிர்களைக் காப்பது குறித்த கருத்துக்களை துணிவுடன் வெளியிடுவதை, நம் பணியாக ஏற்றுக்கொள்ள தயங்கக்கூடாது.

கத்தோலிக்க கல்வி நிறுவனங்கள்

ஜப்பான் கத்தோலிக்க சமுதாயம், நற்செய்திக்கு மிகத் தெளிவான சான்று பகர்வதை உறுதி செய்யவேண்டும். இந்நாட்டில் கத்தோலிக்கர் நடத்திவரும் கல்வி நிறுவனங்கள் வழியே, தரம் வாய்ந்த குடிமக்களை உருவாக்குவது நம் கடமை.

இந்நாட்டில், தனிமை, மனத்தளர்ச்சி ஆகிய ஆழ்ந்த பிரச்சனைகள் நிலவுவதை நாம் அறிவோம். தற்கொலைகளின் எண்ணிக்கை கூடுதல், எளியோரை வலியோர் பல வழிகளில் தாக்குதல் (ijime) போன்ற பிரச்சனைகள், குறிப்பாக, இளையோரிடையே அதிகம் பரவியுள்ளதை கருத்தில் கொள்ளவேண்டும். இத்தகையப் பிரச்சனைகளுக்கு உள்ளாகும் இளையோர், மனம் திறந்து பேசுவதற்கும், உரையாடுவதற்கும் ஏற்ற சூழலை உருவாக்கவேண்டும்.

மிகுதியான அறுவடையை மேற்கொள்ள...

அறுவடையோ மிகுதி, பணியாளரோ குறைவு என்பதை நான் அறிவேன். எனவே, பல்வேறு வழிகளில், பல்வேறு நிலைகளில் பணியாளரை உருவாக்கும் முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும். மக்களை, அவர்கள் வாழும் இடங்களில், பணியாற்றும் இடங்களில் சந்திக்கும் வழிமுறைகளை உருவாக்க வேண்டும்.

உங்களை நம்பிக்கையில் உறுதி செய்ய பேதுரு விரும்புகிறார், அதே வேளையில், இந்நாட்டில் நம்பிக்கைக்கு சாட்சிகளாக வாழ்ந்தோரின் பரிந்துரையால், அவரும் உறுதி பெற விழைகிறார். நான் இவ்வருளைப் பெறுவதற்கு செபியுங்கள். இறைவன் உங்களையும், உங்கள் வழியே, உங்கள் சமுதாயத்தையும் ஆசீர்வதிக்க, நான் இறைவனை இறைஞ்சுகிறேன்.

23 November 2019, 11:48