தேடுதல்

Vatican News
அருளாளர் Nicholas itbamrung திருத்தலத்தில் தாய்லாந்து ஆயர்களைச் சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ் அருளாளர் Nicholas itbamrung திருத்தலத்தில் தாய்லாந்து ஆயர்களைச் சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ் 

தாய்லாந்து ஆயர்களுக்கு திருத்தந்தை வழங்கிய உரை

FABC உருவாக்கப்பட்டதன் 50ம் ஆண்டு, சிறப்பிக்கப்படும். 2020ம் ஆண்டில், ஆசியாவில் அமைந்துள்ள திருத்தலங்களை நினைவில் கொண்டு, இங்கு பணியாற்றிய மறைப்பணியாளர்களின் அடிச்சுவடுகளைப் பின்பற்ற முனைவோம்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

அன்பு சகோதரர்களே, நற்செய்திப் பணியையும், மறைக்கல்விப் பணியையும் திறம்படச் செய்து, மறைசாட்சியாக உயிர் துறந்த அருளாளர் Nicholas Bunkerd Kitbamrung அவர்களின் திருத்தலத்தில் கூடியிருக்கும் நாம், அவரது பரிந்துரையால், ஆசிய நாடுகளில், நற்செய்தியின் நலம் தரும் மணம் பரவவேண்டுமென்று செபிப்போம்.

FABCன் 50ம் ஆண்டு நிறைவு

ஆசிய ஆயர் பேரவைகளின் கூட்டமைப்பு (FABC) உருவாக்கப்பட்ட 50ம் ஆண்டு, 2020ம் ஆண்டு, சிறப்பிக்கப்படும். இவ்வேளையில், ஆசியாவில் அமைந்துள்ள திருத்தலங்களை நினைவில் கொண்டு, இங்கு பணியாற்றிய மறைப்பணியாளர்களின் அடிச்சுவடுகளைப் பின்பற்ற முனைவோம்.

மக்களின் போராட்டங்களில் பங்கேற்கும் மேய்ப்பர்

பன்முகக் கலாச்சாரம், பல்சமயம் என்ற அழகு நிறைந்த சூழலில் நீங்கள் வாழ்கிறீர்கள். அதே வேளையில், இங்கு வறுமையும், பல்வேறு நிலைகளில் சுரண்டல்களும் நிறைந்துள்ளன. தொழில்நுட்பங்களின் வளர்ச்சி, பல்வேறு வாய்ப்புக்களை உருவாக்கித் தந்தாலும், அது, இளையோரிடையே நுகர்வுக் கலாச்சாரத்தை வளர்த்து வருகிறது. இவ்வேளையில், நீங்கள் உங்கள் மக்களைப் பாதிக்கும், மனித வர்த்தகம், போதைப்பொருள் பயன்பாடு, பாதுகாப்பாற்ற பணிச்சூழல், மற்றும் பொருளாதார ஏற்றத்தாழ்வு என்ற பிரச்சனைகளில் கவனம் செலுத்தி வருகிறீர்கள். இத்தகையைச் சூழலில், ஒரு மேய்ப்பராக நீங்கள் உங்கள் மக்களின் போராட்டங்களில் பங்கேற்று, அவர்கள் சார்பில் பரிந்துரை செய்ய அழைக்கப்பட்டுள்ளீர்கள்.

மறைப்பணியாற்றும் திருஅவை

இந்நாட்டில் நிலவிய மறைபரப்புப் பணியைக் குறித்து தியானம் செய்யும்போது, தூய ஆவியார் தன் சக்தியைக் கொண்டு, இப்பணியை வழிநடத்தினார், இன்னும், தொடர்ந்து வழிநடத்துகிறார் என்பதை உணரவேண்டும். வெற்றி பெறுவோம் என்ற உறுதிப்பாட்டுடன் நம் முன்னோர்கள் மறைப்பணி ஆற்றவில்லை, மாறாக, தேவை உள்ள இடத்தில் அவர்கள் பணியாற்றினர். நற்செய்தி அறிமுகமாகாத ஒரு புதிய நாட்டில், கலாச்சாரத்தில் மறைப்பணியாற்றுவது கடினம் என்று தெரிந்தும், அவர்கள் பணியாற்றியதுபோலவே, நாமும் துணிவுடன் பணியாற்றவேண்டும்.

மறைப்பணியாற்றும் திருஅவை, இறைவார்த்தை, வாழ்வாக மாறுவதை தன் தனித்துவமிக்க அடையாளமாகக் கொண்டுள்ளது. இந்தப் பணியின் பொறுப்பாளர்கள் நாம் அல்ல, மாறாக, நம்மில் செயலாற்றும் தூய ஆவியார். பல ஆசிய நாடுகளில், பொதுநிலையினர் நற்செய்தியை பறைசாற்றி வந்தனர் என்ற வரலாற்றை நாம் மறக்கக்கூடாது. மக்களில் ஒருவராக மாறிய அவர்கள், பொறுமையுடன், கருணையுடன், மக்கள் பேசும் மொழியிலேயே நற்செய்தியை அறிவித்து வந்தனர். இறைவன் இன்றும் சாதாரண, எளிய மக்களின் வழியே செயலாற்றிவருவதை நாம் உணரவேண்டும். ஆயர்களாகிய நாம், மறைப்பணி தளங்களில், முதலாளிகளாக, மேற்பார்வையாளர்களாக செயலாற்ற அழைக்கப்படவில்லை என்பதை உணரவேண்டும்.

அருள்பணியாளர்களுக்கு நெருக்கமாக...

உங்கள் பொறுப்பில் பணியாற்றும் அருள்பணியாளர்களுக்கு உங்கள் கதவுகளை என்றும் திறந்து வைத்திருங்கள். அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள், சோதனைகள், துயரங்கள் ஆகியவற்றை உங்களுடன் பகிர்ந்துகொள்ள வாய்ப்பையும், சூழலையும் உருவாக்கித் தாருங்கள். நேர்மையான, திறந்த உரையாடல் இடம்பெறுவதற்கு ஏற்ற சூழலை அருள்பணியாளர்களுக்கு உருவாக்குங்கள்.

இன்றைய, மற்றும் எதிர்காலப் பிரச்சனைகளில், இறைவன் நம்மோடு இருக்கிறார் என்ற நம்பிக்கையுடன் பயணம் மேற்கொள்ளுங்கள். அருளாளர் நிக்கோலஸ் மற்றும், ஆசியாவில் மறைபரப்புப்பணியாற்றிய பல புனிதர்களின் பரிந்துரையை நாடுவோம்.

ஆசிய ஆயர்கள் வழியே...

ஆசியாவின் பல நாடுகளிலிருந்து ஆயர்கள் இங்கு வந்திருப்பதால், இவ்வேளையில், என் அன்பையும், ஆசீரையும் உங்கள் நாடுகளுக்கும், உங்கள் சமுதாயங்களுக்கும் நான் வழங்குகிறேன். குறிப்பாக, உங்கள் நாடுகளில், நோயாலும், இன்னும் பல துயரங்களாலும் பாதிக்கப்பட்டோருக்கு, என் சிறப்பான ஆசீர். ஆண்டவர் உங்களுடன் என்றும் துணையிருப்பாராக. எனக்காக செபிக்க மறவாதீர்கள், உங்கள் மக்களிடமும் எனக்காகச் செபிக்கும்படி கேட்டுக்கொள்ளுங்கள்.

22 November 2019, 14:41