தேடுதல்

Vatican News
நிஸாமி கஞ்சாவி அறக்கட்டளை பிரதிநிதிகளுடன் திருத்தந்தை நிஸாமி கஞ்சாவி அறக்கட்டளை பிரதிநிதிகளுடன் திருத்தந்தை 

நிஸாமி கஞ்சாவி அறக்கட்டளை பிரதிநிதிகளுடன் திருத்தந்தை

பாரசீகப் புலவர், நிஸாமி கஞ்சாவி அவர்களின் பெயரால் நிறுவப்பட்டுள்ள ஓர் அறக்கட்டளையைச் சேர்ந்த பிரதிநிதிகளை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் சந்தித்தார்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

பாரசீகப் புலவர், நிஸாமி கஞ்சாவி (Nizami Ganjavi) அவர்களின் பெயரால் நிறுவப்பட்டுள்ள ஓர் அறக்கட்டளையைச் சேர்ந்த பிரதிநிதிகளை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நவம்பர் 27, இப்புதன் காலையில், திருப்பீடத்தில் சந்தித்து, தன் வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

மதங்களுக்கிடையே உரையாடல், மற்றும், உண்மையான மதிப்பு வளரவேண்டும் என்று, புலவர் கஞ்சாவி அவர்கள் கொண்டிருந்த எண்ணங்களை நடைமுறைப்படுத்தும் நோக்கத்துடன் நிறுவப்பட்டுள்ள அறக்கட்டளையின் பணிகளை தான் பாராட்டுவதாக திருத்தந்தை கூறினார்.

"வன்முறையிலிருந்து விடுதலை" என்ற மையக்கருத்துடன், இவ்வறக்கட்டளையைச் சேர்ந்தவர்கள், உரோம் நகரில் நடத்தும் சந்திப்பில், பருவநிலை மாற்றங்களின் சவால்கள் குறித்தும் விவாதிக்கவிருப்பது, தனக்கு மகிழ்வளிக்கிறது என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தெரிவித்தார்.

இவ்வாண்டு பிப்ரவரி மாதம் அபுதாபியில் உருவாக்கப்பட்ட ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ள கருத்துக்களை மனதில் கொண்டு, நிஸாமி கஞ்சாவி அறக்கட்டளையைச் சேர்ந்தவர்கள், பல்சமய உரையாடலையும், சுற்றுச்சூழல் பாதுகாப்பையும் முன்னெடுத்துச் செல்வர் என்று தான் நம்புவதாக திருத்தந்தை எடுத்துரைத்தார்.

நிஸாமி கஞ்சாவி பன்னாட்டு மையமும், இராபர்ட் கென்னெடி மனித உரிமை அறக்கட்டளையும் இணைந்து, "வன்முறையிலிருந்து விடுதலை: 2030 முன்னேற்ற திட்டத்தில், அமைதி, பாதுகாப்பு மற்றும் மோதல்களை தடுத்தல்" என்ற தலைப்பில் நவம்பர் 27, 28 ஆகிய இரு நாள்கள், உரோம் நகரில் தங்கள் 19வது உயர்மட்ட கூட்டத்தை நடத்துகின்றனர்.

27 November 2019, 15:16