புனித லூயிஸ் மருத்துவமனையில் திருத்தந்தை உரை வழங்குதல் புனித லூயிஸ் மருத்துவமனையில் திருத்தந்தை உரை வழங்குதல் 

புனித லூயிஸ் மருத்துவமனையில் திருத்தந்தையின் உரை

அவசரத் தேவைகளுடன் மருத்துவமனைக்குள் வருவோரின் உயிர்களை கருணையுடன் பேணிக்காத்து வருகிறீர்கள். அவர்களுக்கு குணமளிக்கும் வேளையில், அவர்களுடைய மனித மாண்பை நீங்கள் மீண்டும் வழங்குகிறீர்கள்.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

அன்பு நண்பர்களே, புனித லூயிஸ் மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்கள், தாதியர், உதவியாளர்கள் அனைவரையும் சந்திப்பதில் எனக்கு மகிழ்ச்சி. தாய்லாந்தின் தலத்திருஅவை, இந்நாட்டு மக்களுக்கு, குறிப்பாக, அதிகத் தேவையில் இருப்போருக்கு ஆற்றும் பணிகளை நேரில் காண்பதை, நான் பெற்ற ஆசீராகக் கருதுகிறேன்.

"அன்பு எங்கே உள்ளதோ, அங்கே இறைவன் இருக்கிறார்" என்ற கொள்கையுடன் இம்மருத்துவமனை செயலாற்றிவருகிறது. "மிகச் சிறியோராகிய என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவருக்கு நீங்கள் செய்ததையெல்லாம் எனக்கே செய்தீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்" (மத். 25:40). நலவாழ்வளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள நீங்கள் அனைவரும், மறைப்பணியாற்றும் சீடர்கள்.

நலவாழ்வு வழங்க, நீங்கள் மேற்கொள்ளும் பணி, வெறும் மருத்துவப் பணி மட்டுமல்ல; அது, கருணையின் தலைசிறந்த பணி. அவசரத் தேவைகளுடன் மருத்துவமனைக்குள் வருவோரின் உயிர்களை கருணையுடன் பேணிக்காத்து வருகிறீர்கள். அவர்களுக்கு குணமளிக்கும் வேளையில், அவர்களுடைய மனித மாண்பை நீங்கள் மீண்டும் வழங்குகிறீர்கள். உங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நோயாளிகளை, நீங்கள் பெயர்சொல்லி அழைக்கும்போது, உண்மையானச் சீடர்களாக மாறுகிறீர்கள். இப்பணி, மிகக் கடினமானது. எனவே, உங்கள் பணியில் ஒருவருக்கொருவர் உறுதுணையாக இருங்கள்.

இவ்வாண்டு, புனித லூயிஸ் மருத்துவமனை, தன் 120வது ஆண்டைச் சிறப்பிக்கின்றது. எத்தனையோ மக்கள் இம்மருத்துவமனை வழியே, உதவிகள் பெற்றுள்ளனர். உங்கள் பணிக்கென நான் இறைவனுக்கு நன்றி கூறும் அதே வேளையில், இம்மருத்துவமனை, கிறிஸ்துவின் குணமளிக்கும் அன்பை, இன்னும் அதிகமாகக் கொணரவேண்டும் என்று வேண்டுகிறேன்.

எந்த ஒரு நோயும், ஆழமானக் கேள்விகளைக் கொணர்கிறது. நோயுற்றதும், அதை எதிர்ப்பதும், அதனால் மனம் தளர்ந்து போவதும் நாம் தரும் பதிலிறுப்பு. வேதனையில் நாம் கலங்குகிறோம். இயேசுவும் வேதனையுற்றார். நம் வேதனையில் பங்கேற்கிறார்.

இயேசுவின் பாடுகளில் பங்கேற்பதன் வழியே, அவரது அருகாமையை அதிகம் உணர்கிறோம். நாம் மேற்கொண்டுள்ள இச்சந்திப்பை, அன்னை மரியாவின் பாதுகாக்கும் மேல் போர்வையின் கீழ் வைப்போம். காயப்பட்ட தன் மகன் வழியே, நாமும், நம் காயங்கள் வழியே அருள்பெறுவதற்கு, அன்னை மரியா உதவி செய்வாராக!

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

21 November 2019, 13:15