தேடுதல்

Vatican News
அர்ஜென்டினா பல்சமய உரையாடல் கருத்தரங்கு அர்ஜென்டினா பல்சமய உரையாடல் கருத்தரங்கு   (Vatican Media)

ஒன்றிணைந்து வருங்காலத்தை கட்டியெழுப்புதல்

நல்மனம் கொண்ட மக்களோடு, அவர்கள் மத நம்பிக்கையற்றவர்களாக இருந்தாலும், பொதுநல நோக்கில் அவர்களோடு இணைந்து, மத நம்பிக்கையுடைய அனைவரும் பணியாற்ற வேண்டிய தேவை

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

மதங்களிடையேயே உரையாடலை ஊக்குவிக்கும் நோக்கத்தில், திருப்பீடத்திற்கான அர்ஜென்டினா தூதரகத்தால் ஏற்பாடு செய்த கருத்தரங்கில் கலந்துகொண்டோரை இத்திங்களன்று திருப்பீடத்தில் சந்தித்து உரையாடினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

'உலக அமைதிக்கும் ஒன்றிணைந்த வாழ்வுக்கும் மனித குல உடன்பிறந்த உணர்வு’ என்ற தலைப்பில் அபுதாபியில் கையெழுத்திடப்பட்ட ஏட்டை மையமாக வைத்து நடத்தப்பட்ட இக்கருத்தரங்கை, திருப்பீடத்திற்கான அர்ஜென்டினா தூதரகத்துடன் இணைந்து, மதங்களிடையேயே உரையாடலை ஊக்குவிக்கும் Buenos Aires நிறுவனமும், பல்சமய உரையாடல் திருப்பீட அவையும் ஏற்பாடு செய்திருந்தன.

மக்களுக்கும் கலாச்சாரங்களுக்கும் இடையே  பாலங்களை கட்டுவதற்குரிய தேவையை வலியுறுத்திப் பேசியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நாம் ஒன்றிணைந்து வருங்காலத்தை கட்டியெழுப்பவில்லையெனில், வருங்காலம் என்ற ஒன்றே இருக்காது என்பதை சுட்டிக்காட்டினார்.

இவ்வுலகில் போர், பசி, பஞ்சம், சுற்றுச்சூழல் நெருக்கடி, வன்முறை, இலஞ்ச ஊழல், அறநெறிகள் சரிவு, குடும்ப வீழ்ச்சி, பொருளாதார நெருக்கடி, நம்பிக்கையிழப்புக்கள் போன்றவைகளுக்கு தீர்வு காண, நல்மனம் கொண்ட மக்களோடு, அவர்கள் மத நம்பிக்கையற்றவர்களாக இருந்தாலும், பொதுநல நோக்கத்துடன் அவர்களோடு இணைந்து, மத நம்பிக்கையுடைய அனைவரும் பணியாற்ற வேண்டிய அவசியத்தையும் சுட்டிக்காட்டினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

18 November 2019, 16:37