தேடுதல்

Vatican News
வறியோரின் 2வது உலக நாளன்று வறியோருடன் உணவருந்திய திருத்தந்தை பிரான்சிஸ் - கோப்புப் படம் வறியோரின் 2வது உலக நாளன்று வறியோருடன் உணவருந்திய திருத்தந்தை பிரான்சிஸ் - கோப்புப் படம்  (ANSA)

வறியோரின் மூன்றாவது உலக நாள் - திருத்தந்தையின் செய்தி

இயேசுவின் தாயான அன்னை மரியா, வறுமையை தன் வாழ்வில் உணர்ந்தவர் என்பதால், தன்னை நாடிவரும் அனைத்து வறியோரையும் அவர் அரவணைத்து காப்பார் - திருத்தந்தை பிரான்சிஸ்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

நவம்பர் 17ம் தேதி, ஞாயிறன்று சிறப்பிக்கப்படவிருக்கும் வறியோரின் மூன்றாவது உலக நாளுக்கென திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கியுள்ள ஒரு காணொளிச் செய்தியை, "உடன்பிறந்தோர் சந்திப்பு 2019" என்ற நிகழ்வை, பிரான்ஸ் நாட்டின் லூர்து நகர் மரியன்னை திருத்தலத்தில் ஏற்பாடு செய்துவரும் 'சகோதரர்கள் கழகம்' என்ற அமைப்பு, தன் முகநூலில், அக்டோபர் 16 இப்புதனன்று வெளியிட்டுள்ளது.

வறுமை என்ற அனுபவத்தை இயேசுவும் அடைந்தார், ஆனால், அதை அவர் போக்குவதற்கு முயற்சிகள் மேற்கொண்டார் என்று, திருத்தந்தை, இச்செய்தியில் கூறியுள்ளார்.

இயேசுவின் தாயான அன்னை மரியா, வறுமையை தன் வாழ்வில் உணர்ந்தவர் என்பதால், தன்னை நாடிவரும் அனைத்து வறியோரையும் அவர் அரவணைத்து காப்பார் என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இச்செய்தியில் கூறியுள்ளார்.

வறியோரின் நம்பிக்கை ஒருநாளும் ஏமாற்றம் அடையாது என்ற மையக்கருத்துடன் இவ்வாண்டு சிறப்பிக்கப்படும் வறியோரின் மூன்றாவது உலக நாளன்று, லூர்து நகரில் கூடிவரும் அனைவரையும் தான் வாழ்த்தி, ஆசீர் வழங்குவதாக திருத்தந்தை இக்காணொளிச் செய்தியில் கூறியுள்ளார்.

நவம்பர் 14ம் தேதி முதல் 17ம் தேதி முடிய லூர்து நகர் அன்னை மரியாவின் திருத்தலத்தில், "உடன்பிறந்தோர் சந்திப்பு 2019" என்ற நிகழ்வு நடைபெறும் என்றும், இந்நிகழ்வின் இறுதி நாளான நவம்பர் 17ம் தேதி ஞாயிறு, வறியோரின் மூன்றாவது உலக நாள் சிறப்பிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

17 October 2019, 14:37