மறைபரப்பு ஞாயிறு திருப்பலி - 201019 மறைபரப்பு ஞாயிறு திருப்பலி - 201019 

நாம் எந்த சிகரத்தை எட்டிப்பிடிக்க ஆவல் கொள்கிறோம்?

நீங்கள் நீங்களாகவே இருந்துகொண்டு, உங்களை சுற்றியிருப்போருக்கு உங்களை வழங்கவேண்டும் என இறைவன் அழைப்பு விடுக்கிறார்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் : வத்திக்கான் செய்திகள்

நாம் இருக்கும் இடத்தில் நாம் நாமாகவே இருந்துகொண்டு, நம்மை பிறருக்கு வழங்க வேண்டும் என இறைவன் நம்மிடம் அதிகம் அதிகமாக எதிர்பார்க்கிறார் என, இத்திங்களன்று, தன் டுவிட்டர் செய்தி வழியே அழைப்பு விடுத்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

'இந்த மறைபரப்புப்பணி மாதத்தில், நீங்கள் இருக்கும் இடத்தில், நீங்களாகவே இருந்துகொண்டு, உங்களை சுற்றியிருப்போருக்கு உங்களை வழங்கவேண்டும் என இறைவன் அழைப்பு விடுக்கிறார். கடவுள் உங்களிடமிருந்து அதிகம் அதிகமாக எதிர்பார்க்கிறார்’, என்ற சொற்கள், திருத்தந்தையின் டுவிட்டர் செய்தியில் இடம் பெற்றன.

மறைப்பரப்புப்பணி - மூன்று டுவிட்டர் செய்திகள்

இம்மாதம் மறைப்பரப்புப்பணி மாதமாக சிறப்பிக்கப்படுவதையொட்டியும், இஞ்ஞாயிறு மறைபரப்புப்பணி ஞாயிறாக கொண்டாடப்பட்டதையொட்டியும் மையப்படுத்தி, இஞ்ஞாயிறன்று மறைபரப்புப்பணியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, மூன்று டுவிட்டர் செய்திகளை வெளியிட்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

'மறைபரப்புப்பணி மாதத்தின் மத்தியிலிருக்கும் நாம், நம்மையே நோக்கி ஒரு கேள்வியை கேட்போம், நம் வாழ்வில் முக்கியத்துவம் வாய்ந்தது எது? நாம் எந்த சிகரத்தை எட்டிப்பிடிக்க ஆவல் கொள்கிறோம்?' என்ற கேள்வியை தன் முதல் டுவிட்டரில் எழுப்பியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ''கடவுள் நம்மை அன்புகூர்கிறார், அவர் எவராலும் அயர்வடைவதில்லை என்பதை நம் வாழ்வாலும், நம் வார்த்தையாலும்கூட காண்பிப்போம்'' என தன் இரண்டாவது டுவிட்டரில் எழுதியுள்ளார்.

இஞ்ஞாயிறன்று திருத்தந்தை வெளியிட்ட மூன்றாவது டுவிட்டரோ, 'சென்று அவனைவரையும் அன்புகூருங்கள். ஏனெனில், உங்கள் வாழ்வு விலைமதிக்கப்பட முடியாத மறைப்பணியாகும். அது, தாங்கமுடியாத சுமையல்ல, மாறாக, வழங்கப்படவேண்டிய கொடையாகும்'' என உரைக்கிறது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

21 October 2019, 13:50