தேடுதல்

Vatican News
பூர்வீக இன மக்கள் பிரதிநிதிகள் சந்திப்பு பூர்வீக இன மக்கள் பிரதிநிதிகள் சந்திப்பு  (Vatican Media)

திருத்தந்தை: பூர்வீக இன மக்கள் பிரதிநிதிகள் சந்திப்பு

கிறிஸ்தவம், யூத உலகில் பிறந்து, கிரேக்க-இலத்தீன் உலகில் வளர்ந்து, பின்னர், ஸ்லாவிய, கீழை மற்றும், அமெரிக்காவுக்குப் பரவியது

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

நற்செய்தி, விதை போன்றது, அது விழுகின்ற மண்ணிற்கேற்ற பண்புகளுடன் வளர்கின்றது என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பூர்வீக இனங்களின் பிரதிநிதிகளிடம், இவ்வியாழனன்று கூறினார்.

அக்டோபர் 17, இவ்வியாழன் மாலை 3.30 மணியளவில், பூர்வீக இனங்களின் ஏறத்தாழ நாற்பது பிரதிநிதிகளைச் சந்தித்துப் பேசிய, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், காலனி ஆதிக்கத்தின் புதிய வடிவங்களின் ஆபத்துக்கள் பற்றி எச்சரித்தார்.

கிறிஸ்தவத்தின் துவக்கம் பற்றிக் கூறியத் திருத்தந்தை, கிறிஸ்தவம், யூத உலகில் பிறந்து, கிரேக்க-இலத்தீன் உலகில் வளர்ந்து, பின்னர், ஸ்லாவிய, கீழை மற்றும், அமெரிக்காவுக்குப் பரவியது என்றும், மக்கள், தங்களின் கலாச்சாரத்தோடு இயேசுவின் நற்செய்தியைப் பெறுவதற்கு, நற்செய்தி, பண்பாட்டுமயமாக்கப்பட வேண்டும் என்றும் கூறினார்.

இந்த சந்திப்பு பற்றி செய்தியாளர்களிடம் அறிவித்த, திருப்பீட தகவல் தொடர்பகத்தின் இயக்குனர் மத்தேயோ புரூனி அவர்கள், அமேசான் உலக ஆயர்கள் மாமன்றத்தில் கலந்துகொள்ளும் பூர்வீக இனங்களின் பிரதிநிதிகள் உட்பட, தற்போது உரோம் நகரில், அமேசான் பற்றிய பல்வேறு நிகழ்வுகளை நடத்திவருபவர்கள் இதில் கலந்துகொண்டனர் என்று கூறினார்.

இக்குழுவினரை, பிரேசில் நாட்டு கர்தினால் Claudio Hummes, அந்நாட்டின் Porto Velho பேராயர் Roque Paloschi ஆகிய இருவரும், திருத்தந்தையிடம் அழைத்துச் சென்றனர் எனவும், பூர்வீக இனங்களைச் சேர்ந்த ஓர் ஆண் மற்றும், ஒரு பெண் ஆகிய இருவரும், இம்மாமன்றத்திற்காக, திருத்தந்தைக்கு நன்றி தெரிவித்தனர் எனவும், புரூனி அவர்கள் கூறினார்.

அமேசானில் தங்களின் நிலமும், தண்ணீரும் பாதுகாக்கப்படவும், தங்களின் மக்கள் அமைதியுடனும், மகிழ்வுடனும் வாழவும், தங்களின் தலைமுறைகள் மகிழ்வாக வாழ்கின்ற முறையில், இந்தப் பூமியை விட்டுச் செல்லவும் உதவுமாறு, அவ்விருவரும் திருத்தந்தையை கேட்டுக்கொண்டனர்.

18 October 2019, 15:10