தேடுதல்

புனித ஊர்சுலா சபையின் சகோதரிகளுடன் புனித ஊர்சுலா சபையின் சகோதரிகளுடன் 

திருத்தூதுப் பணியை துணிச்சலுடன் தேர்ந்துகொள்ளுங்கள்

ஊர்சுலா சபையின் பொதுப் பேரவை பிரதிநிதிகளிடம், கிறிஸ்துவுக்குக் கதவுகளைத் திறந்து புதிய வாழ்வைக் கொணருங்கள் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான் செய்திகள்

“உலகளாவிய குழுமம், புதிய வாழ்வை நோக்கிச் செல்கிறோம்” என்ற தலைப்பில், பொதுப்பேரவையை நடத்திவரும், புனித ஊர்சுலா சபையின் 90 பிரதிநிதிகளை, அக்டோபர் 3, இவ்வியாழனன்று, திருப்பீடத்தில் சந்தித்து உரையாற்றிய, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருத்தூதுப் பணியைத் துணிச்சலுடன் தேர்ந்துகொள்ளுங்கள் என்று கேட்டுக்கொண்டார்.

குழுமம், உலகளாவிய ஆகிய இரு சொற்களும், ஒன்றுக்கொன்று முரண்படுவதுபோல் தெரிகின்றது, ஆயினும், இத்தகைய எதார்த்த சூழலில் நாம் வாழ்கிறோம் மற்றும், அதில் வாழ வேண்டியவர்களாகவும் இருக்கிறோம் என்றுரைத்த திருத்தந்தை, இக்காலத்தில் உலகளாவிய குழுமத்தில், ஒன்றோடொன்று தொடர்புடைய சூழலில் நாம் வாழவேண்டியவர்கள் மற்றும், பெரும் சவால்களை எதிர்கொள்ள வேண்டியநிலையிலும் உள்ளோம் என்றும் கூறினார்.

இக்காலத்தில் எவருமே, இந்த விவகாரம் என்னைச் சார்ந்தது அல்ல என, எதையும் சொல்ல முடியாது என்றுரைத்த திருத்தந்தை, மனித உரிமைகள், கருத்துச் சுதந்திரம், சமய சுதந்திரம் ஆகியவற்றைப் பாதுகாத்தல், தொலைவில் மற்றும் அருகில் உள்ளவர்களுக்கு நற்செய்தி அறிவித்தல்,  சமுதாய நீதி, சூழலியலைப் பாதுகாத்தல், நீடித்த நிலையான வளர்ச்சிக்கு வழிகளைத் தேடல், மனிதாபிமானம் நிறைந்த பொருளாதார விடியல் போன்றவை, உலகினர் அனைவரையும் ஈடுபடுத்துகின்றது என்று கூறினார்

அமேசான் மழைக்காடுகள்

எடுத்துக்காட்டாக, எரிந்துகொண்டிருக்கும் அமேசான் மழைக்காடுகள் அப்பகுதி பிரச்சனை மட்டுமல்ல, உலகளாவிய பிரச்சனையுமாகும், அதேபோல் மக்களின் புலம்பெயர்வு, சில நாடுகளை மட்டும் சார்ந்தது அல்ல, பன்னாட்டு சமுதாயத்தையும் சார்ந்தது என்றும் திருத்தந்தை கூறினார்.

அடுத்து, புதிய வாழ்வை நோக்கிச் செல்வோம் என்ற இப்பேரவைத் தலைப்பின் இரண்டாவது பகுதி பற்றிய எண்ணங்களைப் பகிர்ந்துகொண்ட திருத்தந்தை, புதிய வாழ்வை அமைத்துக்கொள்ளுங்கள் என்று, உங்கள் சபையை ஆரம்பித்த புனித Angela Merici அவர்கள் சொன்னார், கிறிஸ்துவுக்குக் கதவுகளைத் திறந்து, பிறரன்பில் அவரைப் பின்பற்றினால் மட்டுமே, இது இயலக் கூடியது என்றும் கூறினார்.

பல்வேறு நாடுகள், மக்கள் மற்றும் கலாச்சாரங்கள் மத்தியில், உலகின் எல்லைவரை சென்று, புதிய வாழ்வின் உயிர்மூச்சைக் கொணருங்கள் என்றும், ஊர்சுலா சபையின் உரோம் கழகத்தினரிடம் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கேட்டுக்கொண்டார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

03 October 2019, 15:39