புனித பவுல் பெண்கள் துறவு சபையினர் சந்திப்பு புனித பவுல் பெண்கள் துறவு சபையினர் சந்திப்பு 

இன்றைய உலகின் சவால்களை துணிவுடன் எதிர்கொள்ளுங்கள்

புனித பவுல் பெண்கள் துறவு சபையின் 11வது பொதுப் பேரவையில் கலந்துகொள்ளும் 68 பிரதிநிதிகள், இவ்வெள்ளியன்று திருத்தந்தையை திருப்பீடத்தில் சந்தித்தனர்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

காலத்தை வீணாக்க நேரமில்லை என்ற உணர்வில், அன்னை மரியா மற்றும், புனித பவுலடிகளார் போன்று, திருத்தூது வாழ்வு மற்றும், பணியின் வழியாக, இக்கால மக்களுக்கு நற்செய்தியை அறிவிக்க விரைந்து செல்லுங்கள் என்று, பெண் துறவு சபை ஒன்றிடம் இவ்வெள்ளியன்று கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

புனித பவுல் பெண்கள் துறவு சபையின் 11வது பொதுப் பேரவையில் கலந்துகொள்ளும் பிரதிநிதிகள் ஏறத்தாழ 68 பேரை, அக்டோபர் 4, இவ்வெள்ளியன்று திருப்பீடத்தில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இறைவனில் நம்பிக்கை வைத்து, “நீ எழுந்து புறப்பட்டுச் செல்” என்ற விவிலிய திருச்சொற்களை மையப்படுத்தி பேரவையை நடத்தும் இச்சகோதரிகளை ஊக்கப்படுத்தினார்.

இறையழைத்தல் குறைவு, வயதான சகோதரிகளின் எண்ணிக்கை உயர்வு போன்ற காரணங்களால், இக்காலத்தில் துறவு சபைகளிலும், ஏன் திருஅவையிலும்கூட நிலவும் மந்தமான நிலை, சவாலாகவே உள்ளது என்று குறிப்பிட்ட திருத்தந்தை, அதை, நமது இன்றியமையாத கூறுகளில் கவனம் செலுத்த வேண்டிய சாதகமான காலமாக நோக்க வேண்டும் என்று கூறினார்.

இயேசு கிறிஸ்துவின் நற்செய்தியை சுடர்விடும் வழியில் அறிவிப்பதை, உங்கள் சபையின் மரபணுவிலேயே கொண்டிருக்கின்றீர்கள், இத்தூதுரைப் பணியில் முக்கிய கிரியாஊக்கியாக இருப்பவர் தூய ஆவியார் என்பதை மனதில் இருத்தி, இந்த  திருத்தூதுரைப் பணி ஆர்வம் உங்களில் அணைந்துவிடாமல் பார்த்துக்கொள்ளுங்கள் என்றும், பவுல் துறவு சபை சகோதரிகளிடம் திருத்தந்தை கூறினார்.

இந்தப் பணிகள் அனைத்தும் விசுவாசம் இன்றி இயலாதது என்பதையும் வலியுறுத்திப் பேசிய திருத்தந்தை, மனத்தளர்ச்சி மற்றும், பின்வாங்குதலால் பணிகள் தடைபட அனுமதிக்காதீர்கள் எனவும் கூறினார்.

இறைவார்த்தையால் எப்போதும் ஊட்டம் பெறவும், சமூகத்தொடர்பு வழியாக, கடவுள் மீதும், நற்செய்தி மீதும் தாகம் கொண்டுள்ளவர்களுக்கு அவற்றை எடுத்துச் சொல்லவும் அழைப்பு விடுத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தனக்காகச் செபிக்க மறக்க வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

04 October 2019, 15:27