Halle நகரில் யூத மத தொழுகைக்கூடத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்களுக்கு மலர் அஞ்சலி Halle நகரில் யூத மத தொழுகைக்கூடத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்களுக்கு மலர் அஞ்சலி 

யூத தொழுகைக்கூடத்தில் பலியானவர்களுக்கு திருத்தந்தை செபம்

Halle தொழுகைக்கூடத்தில், யூதமத விரோதி ஒருவர், துப்பாக்கியால் சுட்டதில் இருவர் உயிரிழந்தனர் மற்றும், அதற்கு வெளியே நின்ற பலர் காயமடைந்தனர்.

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

"நாம் எல்லாரும், தம் கண்களில் எவ்வளவு விலைமதிப்பற்றவர்கள் என்பதை ஆண்டவர் எப்போதும் நமக்கு நினைவுபடுத்தி வருகிறார் மற்றும், அவர் நம்மிடம் ஒரு திருத்தூதுப் பணியையும் ஒப்படைத்துள்ளார்" என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அக்டோபர் 11, இவ்வெள்ளியன்று தன் டுவிட்டர் செய்தியில் கூறியுள்ளார்.

கத்தோலிக்கத் திருஅவையில், இந்த அக்டோபர் மாதம், சிறப்பு திருத்தூதுப் பணி மாதமாகச் சிறப்பிக்கப்பட்டு வருவதையொட்டி, இம்மாதத்தில், தன் டுவிட்டர் செய்தியிலும், திருத்தூதுப் பணியை மையப்படுத்தி எழுதி வருகிறார் திருத்தந்தை பிரான்சிஸ்.

Halle தொழுகைக்கூடத்தில் துப்பாக்கிச்சூடு

மேலும், ஜெர்மனியின் Halle நகரில் யூத மத தொழுகைக்கூடத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்களுக்காகச் செபித்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

வத்திக்கானில் நடைபெற்றுவரும் அமேசான் பற்றிய சிறப்பு உலக ஆயர்கள் மாமன்றத்தின் ஆறாவது பொது அமர்வை, அக்டோபர் 9, இப்புதன் மாலையில் நிறைவுசெய்த திருத்தந்தை பிரான்சிஸ் பிரான்சிஸ் அவர்கள், ஜெர்மனியில் வன்முறையில் உயிரிழந்தவர்கள் மற்றும், காயமுற்றோருக்காகச் செபித்தார்,.

அக்டோபர் 9, இப்புதனன்று, Yom Kippur யூத மத புனித நாளைச் சிறப்பிப்பதற்காக, Halle  தொழுகைக்கூடத்தில், சிறார் உட்பட எழுபதுக்கும் அதிகமான யூதர்கள் கூடியிருந்தவேளை, 27 வயது நிரம்பிய யூதமத விரோதி ஒருவர், துப்பாக்கியால் சுட்டதில் இருவர் உயிரிழந்தனர் மற்றும், அதற்கு வெளியே நின்ற பலர் காயமடைந்தனர்.

துப்பாக்கிச் சப்தம் கேட்டு சுதாரித்துக்கொண்ட ஒரு குழு, தொழுகைக்கூடத்தின் கதவுகளை மூடியதால் பெருமளவில் உயிர்ச்சேதங்கள் தவிர்க்கப்பட்டன என்று செய்திகள் கூறுகின்றன.

மௌன அஞ்சலி

இதற்கிடையே, பெர்லினில் நடைபெற்ற நினைவு செப வழிபாட்டில், ஜெர்மன் சான்சிலர் ஆஞ்சலா மெர்க்கெல் அவர்கள் கலந்துகொண்டு, தனது அனுதாபங்களைத் தெரிவித்தார்.

ஐரோப்பாவில் அதிகரித்துவரும் யூதமத விரோதப்போக்கிற்கெதிரான நடவடிக்கைகளை மேலும் புதுப்பிக்குமாறு, சமய மற்றும், அரசியல் தலைவர்கள் அழைப்பு விடுத்துவரும்வேளை, Brussels நகரில் ஐரோப்பிய பாராளுமன்றத்தினர், அந்த வன்முறையில் பலியானவர்களுக்காக ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தினர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

11 October 2019, 15:21