தேடுதல்

Vatican News
அருளாளர் அன்னை மரியம் தெரேசியா அருளாளர் அன்னை மரியம் தெரேசியா 

மரியம் தெரேசியா உட்பட 5 அருளாளர்களுக்கு புனிதர் பட்டம்

அருளாளர் மரியம் தெரேசியா அவர்கள், 1909ம் ஆண்டில் ஐந்துகாய வரம் பெற்றிருந்தார். இவர், 1914ம் ஆண்டு மே மாதம் 14ம் தேதி, திருக்குடும்ப அருள்சகோதரிகள் சபையை ஆரம்பித்தார்.

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

“மகிழ்வான கிறிஸ்தவ வாழ்விற்குச் சான்று பகர்வதன் வழியாக, நம் சமுதாயங்கள் புனிதர்நிலைக்கு அழைக்கப்பட்டிருப்பதைக் கண்டுணருமாறு செபிப்போம்” என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இச்சனிக்கிழமையன்று கூறினார்.

அக்டோபர் 13, இஞ்ஞாயிறன்று இந்தியாவின் மரியம் தெரேசியா,  உட்பட ஐந்து அருளாளர்களை புனிதர்களாக அறிவிக்கவிருக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அக்டோபர் 12, இச்சனிக்கிழமையன்று, தன் டுவிட்டர் செய்தியில் கிறிஸ்தவ சமுதாயங்கள், சாட்சிய வாழ்வு வழியாக, புனிதராக வாழ்வதற்கு அழைக்கப்பட்டுள்ளனர் என்று பதிவுசெய்துள்ளார்.  

இஞ்ஞாயிறு காலை 10.15 மணிக்கு, வத்திக்கான் புனித பேதுரு வளாகத்தில் நிறைவேற்றும் திருப்பலியில், கேரளாவின் மரியம் தெரேசியா, பிரித்தானியாவின் கர்தினால் John Henry Newman,  சுவிட்சர்லாந்து பொதுநிலை விசுவாசி Marguerite Bays, இத்தாலியின் Giuseppina Vannini, பிரேசில் நாட்டு Dulce Lopes ஆகிய ஐந்து அருளாளர்களை, புனிதர்களாக அறிவிப்பார்,  திருத்தந்தை பிரான்சிஸ்.

இத்தாலிய அரசுத்தலைவர் செர்ஜோ மத்தரெல்லா, பிரித்தானியாவின் Galles இளவரசர் கார்லோ, பிரேசில் நாட்டு உதவி அரசுத்தலைவர் Hamilton Martins Mourao, தாய்வான் குடியரசின் உதவி அரசுத்தலைவர் Chen Chien-Jen, அயர்லாந்து நாட்டின் கல்வி அமைச்சர் Joe McHugh, சுவிட்சர்லாந்து கூட்டுக்குடியரசின் நீதி மற்றும், கொள்கைத் துறை தலைவர் Karin Keller-Sutter ஆகிய முக்கிய தலைவர்கள், இத்திருப்பலியில் கலந்துகொள்வார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அருளாளர் அன்னை மரியம் தெரேசியா

1876ம் ஆண்டு ஏப்ரல் 26ம் தேதி கேரளாவின் Puthenchiraவில் செல்வக் குடும்பத்தில் பிறந்த  அருளாளர் அன்னை மரியம் தெரேசியா அவர்கள், 1909ம் ஆண்டில் ஐந்துகாய வரம் பெற்றிருந்தார். ஆழ்நிலை தியான யோகியாகிய இவர், சாத்தானின் சோதனைகளால் கடுமையான துன்பங்களை அனுபவித்தவர். 1914ம் ஆண்டு மே மாதம் 14ம் தேதி, இவர் ஆரம்பித்த திருக்குடும்ப அருள்சகோதரிகள் சபை, தற்போது 176 இல்லங்களில், 1,500 அருள்சகோதரிகளைக் கொண்டிருக்கின்றது. ஏழைகள், நோயாளிகள், தனிமையில் வாடுவோர் போன்றோர் மீது மிகுந்த அக்கறை காட்டிய இவர், தனது 50வது வயதில், 1926ம் ஆண்டு ஜூன் 8ம் தேதி இறைவனடி சேர்ந்தார்.

அருளாளர் கர்தினால் Newman

பிரித்தானியாவைச் சேர்ந்த அருளாளர் கர்தினால் John Henry Newman (21,பிப்.1801– 11 ஆக.1890) அவர்கள், இறையியலாளர் மற்றும், கவிஞர். இங்கிலாந்து ஆங்லிக்கன் சபையில் முதலில் இணைந்து, பின்னர் கத்தோலிக்க அருள்பணியாளராகி, பின்னர் கர்தினாலாக உயர்த்தப்பட்ட இவ,ர் இங்கிலாந்தில் பிலிப்புநேரி போதகர் சபையைத் தொடங்கியவர். 

அருளாளர் Marguerite Bays

19ம் நூற்றாண்டு சுவிட்சர்லாந்து நாட்டு பொதுநிலை விசுவாசியான அருளாளர் Marguerite Bays அவர்கள், திருமணம் செய்துகொள்ளாமலும், துறவு சபையில் இணையாமலும், பிரான்சிஸ்கன் மூன்றாம் சபையில் சேர்ந்து, மறைக்கல்வி ஆசிரியராகப் பணியாற்றினார். ஆடைகள் நெய்யும் தொழில் செய்த இவர், 1879ம் ஆண்டு தனது 63வது வயதில் இறைபதம் சேர்ந்தார்.

அருளாளர் Vannini 

19ம் நூற்றாண்டில் உரோம் நகரில் பிறந்த அருளாளர் அன்னை Giuseppina Vannini அவர்கள், நோயாளிகள் மற்றும், துன்புறுவோர்க்கென, புனித கமில்லஸ் புதல்வியர் சபையை ஆரம்பித்தவர். கடந்த 400க்கும் அதிகமான ஆண்டுகளுக்குப்பின், உரோம் நகரில் பிறந்த ஒருவர் புனிதராக அறிவிக்கப்படவிருப்பது இதுவே முதன்முறையாகும்.

அருளாளர் Lopes

1914ம் ஆண்டில் பிரேசிலின் Salvador de Bahiaல் பிறந்த அருள்சகோதரி அருளாளர் Dulce Lopes அவர்கள், இரண்டுமுறை நொபெல் அமைதி விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டவர். தனது 16வது வயதிலேயே தனது இல்லத்தில் வயதானவர்களையும், நோயாளிகளையும் பராமரித்து வந்தவர். அருளாளர் Lopes அவர்கள், முப்பது ஆண்டுகளாக மூச்சுத்திணறல் பிரச்சனையால் துன்புற்று, 1992ம் ஆண்டு இறைபதம் சேர்ந்தார். பிரேசிலில் பிறந்த பெண் ஒருவர் புனிதராக உயர்த்தப்படுவது இதுவே முதன்முறையாகும். இவரது உடல் அழியாமல் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டபின், 2011ம் ஆண்டில் இவர் அருளாளராக அறிவிக்கப்பட்டார்.

12 October 2019, 15:16