தேடுதல்

Vatican News
அமேசான் சிறப்பு மாமன்றத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அமேசான் சிறப்பு மாமன்றத்தில் திருத்தந்தை பிரான்சிஸ்  (Vatican Media)

துணிவுள்ளவர்களாக நம்மை உருவாக்கும் தூய ஆவியார்

"பகிர்விலும், திருத்தூதுப் பணியிலும் முன்னெப்போதும் இல்லாத வழிகளை நாம் உணரும் வேளையில், தூய ஆவியார், நம்மை துணிவுள்ளவர்களாக உருவாக்குவாராக" - திருத்தந்தையின் டுவிட்டர் செய்தி

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

நடைபெறும் அக்டோபர் மாதம், சிறப்பு திருத்தூதுப் பணி மாதமாக கடைபிடிக்கப்படுவதையொட்டி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அக்டோபர் 10, இவ்வியாழனன்று வெளியிட்ட டுவிட்டர் செய்தியில், திருத்தூதுப் பணியையும், தூய ஆவியாரின் வழிநடத்துதலையும் இணைத்து, தன் கருத்துக்களைப் பதிவு செய்துள்ளார்.

திருத்தந்தையின் டுவிட்டர் செய்தி

"உடன்பிறந்த தன்மையைக் கட்டியெழுப்பும் தூய ஆவியார், நாம் பிறரோடு இணைந்து நடைபயிலும் வரத்தை வழங்குவாராக. பகிர்விலும், திருத்தூதுப் பணியிலும் முன்னெப்போதும் இல்லாத வழிகளை நாம் உணரும் வேளையில், அவர் நம்மை துணிவுள்ளவர்களாக உருவாக்குவாராக" என்ற சொற்கள், திருத்தந்தையின் டுவிட்டர் செய்தியில் இடம் பெற்றன.

ஒவ்வொரு நாளும் @pontifex என்ற வலைத்தள முகவரியில் திருத்தந்தை வழங்கிவரும் டுவிட்டர் செய்திகள், இத்தாலியம், ஆங்கிலம், பிரெஞ்சு, இஸ்பானியம், போர்த்துகீசியம், ஜெர்மன், போலந்து, இலத்தீன் மற்றும் அரேபியம் ஆகிய ஒன்பது மொழிகளில் வெளியாகின்றன.

அக்டோபர் 10, இவ்வியாழன் முடிய, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்திகள், 2,153 என்பதும், அவரது டுவிட்டர் பதிவுகளை, ஆங்கில மொழியில் பின்பற்றுவோரின் எண்ணிக்கை மட்டும், 1 கோடியே 81 இலட்சம் என்பதும் குறிப்பிடத்தக்கன.

திருத்தூதுப் பணி ஞாயிறு

மேலும், திருவழிபாட்டு பொதுக்காலத்தின் 29ம் ஞாயிறான அக்டோபர் 20ம் தேதியன்று சிறப்பிக்கப்படும் அனைத்துலகத் திருத்தூதுப் பணி ஞாயிறன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், காலை, 10.30 மணிக்கு, வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்கா பேராலய வளாகத்தில் சிறப்புத் திருப்பலியை தலைமையேற்று நடத்துவார் என்று, திருப்பீட வழிபாட்டுத் துறையின் தலைவர், அருள்பணி குயிதோ மரீனி அவர்கள் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.

10 October 2019, 14:45