"நமது பூமித்தாய். சுற்றுச்சூழல் விடுக்கும் சவாலை ஒரு கிறிஸ்தவ கண்ணோட்டத்துடன் வாசித்தல்" - திருத்தந்தையின் புதிய நூல் "நமது பூமித்தாய். சுற்றுச்சூழல் விடுக்கும் சவாலை ஒரு கிறிஸ்தவ கண்ணோட்டத்துடன் வாசித்தல்" - திருத்தந்தையின் புதிய நூல் 

பூமித்தாயை மையப்படுத்தி திருத்தந்தையின் புதிய நூல்

"நமது பூமித்தாய். சுற்றுச்சூழல் விடுக்கும் சவாலை ஒரு கிறிஸ்தவ கண்ணோட்டத்துடன் வாசித்தல்" என்ற தலைப்பில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் எழுதியுள்ள ஒரு நூல், அக்டோபர் 24ம் தேதி வெளியாகும்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

திருத்தூதர் பணிகள் நூலையும், அந்நூலில், திருத்தூதர்களை தூய ஆவியார் வழிநடத்தி வந்ததையும் மையப்படுத்தி கடந்த சில வாரங்களாக புதன் மறைக்கல்வி உரைகளை வழங்கிவரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மறைக்கல்வி உரையில் பகிர்ந்துகொண்ட ஒரு கருத்தை, தன் டுவிட்டர் செய்தியாக வெளியிட்டுள்ளார்.

"கடவுள் வழங்கும் ஆச்சரியங்களால் நாம் வியந்து மகிழும் வரத்திற்காக இன்று வேண்டுகிறோம். அவரது படைப்பாற்றலை தடை செய்யாமல், இறைவனை சந்திப்பதற்கு பிறர் மனங்களை ஊக்குவிக்கும் வரத்திற்காகவும் செபிப்போம்" என்ற சொற்கள் திருத்தந்தையின் டுவிட்டர் செய்தியாக வெளியாயின.

அக்டோபர் 24 - திருத்தந்தையின் புதிய நூல்

மேலும், பூமித்தாயை மையப்படுத்தி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் எழுதியுள்ள ஒரு நூல், "நமது பூமித்தாய். சுற்றுச்சூழல் விடுக்கும் சவாலை ஒரு கிறிஸ்தவ கண்ணோட்டத்துடன் வாசித்தல்" என்ற தலைப்பில், அக்டோபர் 24ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வத்திக்கான் நூலகம் வெளியிடும் இந்நூலுக்கு, கிறிஸ்தவ ஒன்றிப்பு முதுபெரும் தந்தை, முதலாம் பார்த்தலோமேயு அவர்கள் அணிந்துரை வழங்கியுள்ளார்.

இந்நூலில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பதிவு செய்துள்ள சில பகுதிகளை, Corriere della Sera என்ற இத்தாலிய நாளிதழ், அக்டோபர் 16 இப்புதனன்று வெளியிட்டுள்ளது.

பேராசை கலாச்சாரத்தின் ஆட்சி

இவ்வுலகம் நமக்கு வழங்கப்பட்டுள்ள ஒரு கொடை என்பதை மறந்து, பேராசையால், உலகத்தை அபகரிக்கும் கலாச்சாரம் ஆட்சி செய்வதால், நாம் அனைவரும் மன்னிப்பு கேட்கவேண்டியுள்ளது என்று, திருத்தந்தை, இந்நூலில் கூறியுள்ளார் என்று, இந்த நாளிதழ் சுட்டிக்காட்டியுள்ளது.

வாழ்வை அச்சுறுத்தும் பிரச்சனைகளை, வெறும் சுற்றுச்சூழல் பிரச்சனைகளாக மட்டும் கண்ணோக்கி, மேலோட்டமான தீர்வுகளைக் காண்பதற்குப் பதில், ஒட்டுமொத்த மனித சமுதாயமும், உள்ளார்ந்த மனமாற்றம் பெறவேண்டும் என்றும், இந்த மனமாற்றம் மன்னிப்பு வேண்டுவதில் துவங்க வேண்டும் என்றும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இந்நூலில் வலியுறுத்தியுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

16 October 2019, 15:13