தேடுதல்

ஆயர்கள் மாமன்ற துவக்க விழா திருப்பலியின்போது.... ஆயர்கள் மாமன்ற துவக்க விழா திருப்பலியின்போது.... 

தூய ஆவியாரின் தூண்டுதல்களுக்கு விசுவாசமாக இருக்க...

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அமேசான் பற்றிய, சிறப்பு உலக ஆயர்கள் மாமன்றத்தை, அக்டோபர் 06, இஞ்ஞாயிறன்று திருப்பலி நிறைவேற்றி துவக்கி வைத்தார்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான் செய்திகள்

அமேசான் பகுதியிலுள்ள திருஅவை, விசுவாசம் எனும் நெருப்பால் புதுப்பிக்கப்படுவதற்கு உதவும்பொருட்டு, அப்பகுதி பற்றிய உலக ஆயர்கள் மாமன்றத்தில் பங்கெடுக்கும் ஆயர்களுக்கு, விவேகம், மெய்யறிவு, மற்றும், தெளிந்து தேர்தலை, தூய ஆவியார் வழங்குமாறு செபித்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

அமேசான் பற்றிய, சிறப்பு உலக ஆயர்கள் மாமன்றத்தை, அக்டோபர் 06, இஞ்ஞாயிறன்று வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்கா பேராலயத்தில் திருப்பலி நிறைவேற்றி துவக்கி வைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்,  இத்திருப்பலியின் 2வது வாசகமான, புனித பவுல் அடிகளார், திமொத்தேயுவுக்கு எழுதிய இரண்டாவது மடலை மையப்படுத்தி மறையுரைச் சிந்தனைகளை வழங்கினார்.

திமொத்தேயுவுக்கு பவுல்

திருஅவை வரலாற்றில் மாபெரும் திருத்தூதுப் பணியாளராக விளங்கிய புனித பவுல், இந்த மாமன்றத்தில், இந்த ஒன்றுசேர்ந்த பயணத்தில், நமக்கு உதவுவாராக என்று செபித்த திருத்தந்தை, தூய ஆவியார் ஆற்றும் புதிய புதிய செயல்களுக்கு விசுவாசமாக இருங்கள் என்றும், மாமன்றத் தந்தையரிடம் கூறினார்.

கரங்கள்

“உன் மீது என் கைகளை வைத்துத் திருப்பணியில் அமர்த்தியபோது உனக்குள் எழுந்த கடவுளின் அருள்கொடையினைத் தூண்டி எழுப்புமாறு நினைவுறுத்துகிறேன் (2திமொ.1:6)” என புனித திமொத்தேயுவுக்கு எழுதினார். மாமன்றத்தந்தையரின் தலைகளில் கரங்கள் வைக்கப்பட்டுள்ளன. அதன் வழியாக அவர்கள், தங்கள் கரங்களை இறைத்தந்தையை நோக்கிச் செபிக்கவும், தங்கள் சகோதரர், சகோதரிகளுக்கு உதவுவதற்கு தங்கள் கைகளை நீட்டவும் இயலும் என்றும் திருத்தந்தை கூறினார்.

அருள்கொடைகள், பணி மனப்பான்மை

நாம் அருள்கொடைகளாக மாறும்பொருட்டு, அருள்கொடைகளைப் பெற்றுள்ளோம். இக்கொடைகள் வாங்கப்பட்டவையோ, வரத்தகம் செய்யப்பட்டவையோ அல்லது விற்கப்பட்டவையோ அல்ல, மாறாக, அவை பெறப்பட்டவை மற்றும் வழங்கப்பட வேண்டியவை. அவற்றை நமக்கெனவே வைத்துக்கொண்டால், நாம் ஆயர்களாக அல்ல, மாறாக, அதிகார மனப்பான்மையுடையவர்களாக இருப்பவர்கள் என்று திருத்தந்தை கூறினார்.

விவேகம்

மாமன்றத் தந்தையர், எதையும் எதிர்த்து நிற்பதற்கு அஞ்சாத விவேகத்தைப் பெறுவதற்கு, தூய ஆவியாரிடம் மன்றாடுவதாகவும் திருத்தந்தை தெரிவித்தார்.

விவேகம் என்பது, தீர்மானம் எடுக்காமல் கோழை உள்ளத்தைக் கொண்டிருப்பது அல்ல, அது, தற்காப்பு எண்ணமும் அல்ல, மாறாக, விவேகத்தோடு பணியாற்றுவதற்கும், தெளிந்து தேர்வு செய்யும் திறனைக் கொண்டிருப்பதற்கும், தூய ஆவியாரின் புதியன செய்யும் செயலைப் பெறுவதற்கும், மேய்ப்பருக்கு இருக்க வேண்டிய புண்ணியமாகும் என்று திருத்தந்தை கூறினார்.

நெருப்பு

அருள்கொடைகளை வழங்கும் தூய ஆவியாரை நெருப்போடு ஒப்பிட்டுப் பேசிய திருத்தந்தை, கடவுள் நமக்குக் கோழையுள்ளத்தினை அல்ல, வல்லமையும் அன்பும் கட்டுபாடும் கொண்ட உள்ளத்தையே வழங்கியுள்ளார் என்று புனித பவுல், திமொத்தேயுவுக்குக் கூறியதைச் சுட்டிக்காட்டினார்.

விவேகம், எல்லாச் சூழல்களிலும் நமது உண்மையான நன்மையைத் தெளிந்து தேர்வு செய்வதற்கும், அதை எட்டுவதற்கு, சரியான வழிகளைத் தேர்ந்துகொள்வதற்கும் உள்ள புண்ணியமாகும் என்றும் திருத்தந்தை கூறினார்.

அமேசானில் தீ

அமேசான் மழைக் காடுகளில் அண்மையில் ஏற்பட்ட தீ பற்றிக் குறிப்பிட்டார் திருத்தந்தை. அது நற்செய்தியின் தீ அல்ல. கடவுளின் நெருப்பு, ஆதாயங்களால் அல்ல, மாறாக, பகிர்வால் ஊட்டம் பெறுகிறது. எல்லாரையும், எல்லாவற்றையும் ஒரேமாதிரியாக அமைப்பதற்கு முயற்சிக்கையில், மக்கள் தங்களின் சொந்த எண்ணங்களை மட்டுமே ஊக்குவிக்க விரும்புகையில், அழிக்கின்ற நெருப்பு கொளுந்துவிட்டு எரிகிறது. அது கடவுளின் நெருப்பு அல்ல, ஆனால் அது, உலகின் நெருப்பு என்றார் திருத்தந்தை பிரான்சிஸ்.

புதிய வடிவ காலனி ஆதிக்கத்தின் பேராசையிலிருந்து கடவுள் நம்மைப் பாதுகாப்பாராக, மக்களும், கலாச்சாரங்களும், அன்பின்றியும், மதிக்கப்படாமலும் பேரழிவுக்கு உள்ளாகின்றனர். அமேசானில் வாழ்கின்ற நம் சகோதரர், சகோதரிகள், கனமான சிலுவைகளைச் சுமக்கின்றனர். நற்செய்தியின் விடுதலையளிக்கும் ஆறுதலுக்காகவும், திருஅவையின் அன்புநிறைந்த பராமரிப்புக்காகவும் ஆவலோடு காத்திருக்கின்றனர். அமேசானில் பல நம் சகோதரர், சகோதரிகள், தங்கள் உயிரையே அளித்துள்ளனர். நம் அன்புக்குரிய கர்தினால் Hummes அவர்கள், அமேசானில் சிறு நகரங்களிலுள்ள கல்லறைகளைப் பார்வையிட தவறாமல் செல்கிறார். அங்கு, சற்று விவேகத்துடன், அங்கு உயிரைக் கையளித்தவர்கள் புனிதர்களாக அறிவிக்கப்பட வேண்டியவர்கள், அவர்களை மறவாதீர்கள் எனவும் சொல்லி வருகிறார். அமேசானில் இப்போது தங்கள் வாழ்வை இழப்பவர்கள், ஏற்கனவே இழந்தவர்கள் ஆகியோருடன் இணைந்து நம் பயணத்தைத் தொடர்வோம் என்று கூறினார் திருத்தந்தை.

மாமன்றத் தந்தையர் பெற்றுள்ள அருள்கொடையினைத் தூண்டி எழுப்பும் நெருப்பு, தூய ஆவியாரிடமிருந்து வருகிறது, இவர்கள் இம்மாமன்றத்திற்கு அழைக்கப்பட்டிருப்பது பணிவிடை புரியவும், அவர்களின் பணியில் கடவுளை மையமாக வைக்கவும் அழைக்கப்பட்டுள்ளனர் என்பதை நினைவுபடுத்தினார் திருத்தந்தை.

இந்த உலக ஆயர்கள் மாமன்றத் தந்தையர், ஒருங்கிணைந்த சூழலியல் பாதுகாப்பிற்கு ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுப்பார்கள் என நம்புவோம், அவர்களுக்காக கடவுளிடம் மன்றாடுவோம் எனவும் விசுவாசிகளைக் கேட்டுக்கொண்டார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

06 October 2019, 12:15