தேடுதல்

Vatican News
2019.10.16 திருத்தந்தையின் புதன் மறைக்கல்வியுரை 2019.10.16 திருத்தந்தையின் புதன் மறைக்கல்வியுரை  (Vatican Media)

மறைக்கல்வியுரை: கடவுள் தரும் மீட்பு எல்லாருக்கும் உரியது

கடவுள் ஆள் பார்த்துச் செயல்படுவதில்லை என்பதை நான் உண்மையாகவே உணர்கிறேன். எல்லா இனத்தவரிலும் அவருக்கு அஞ்சி நடந்து நேர்மையாகச் செயல்படுபவரே அவருக்கு ஏற்புடையவர்

மேரி தெரேசா: வத்திக்கான்

அக்டோபர் 16, இப்புதன் காலையில் உரோம் நகரில் காலநிலை இதமாக இருக்க, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் வழக்கமான புதன் பொது மறைக்கல்வியுரை, வத்திக்கான் புனித பேதுரு வளாகத்தில் நடைபெற்றது. திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து கடந்த பல வாரங்களாக, தனது மறைக்கல்வியுரையை வழங்கி வரும் திருத்தந்தை, இயேசு கொணர்ந்த மீட்பு, உலகினர் எல்லாருக்கும் உரியது என்பதை உணர்த்தும், அந்நூலின் பத்தாம் பிரிவிலிருந்து, பல மொழிகளில் உரையை வழங்கினார். முதலில் திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து அப்பகுதி வாசிக்கப்பட்டது.

திருத்தூதர் பணிகள் (தி.ப.10,34-36)

அப்போது பேதுரு பேசத் தொடங்கி, “கடவுள் ஆள் பார்த்துச் செயல்படுவதில்லை என்பதை நான் உண்மையாகவே உணர்கிறேன். எல்லா இனத்தவரிலும் அவருக்கு அஞ்சி நடந்து நேர்மையாகச் செயல்படுபவரே அவருக்கு ஏற்புடையவர். இயேசு கிறிஸ்து வாயிலாக அமைதி உண்டு என்றும் நற்செய்தியை அவர் இஸ்ரயேல் மக்களுக்கு அனுப்பினார். அவரே அனைவருக்கும் ஆண்டவர்(தி.ப.10,34-36) என்று உரையாற்றினார்.

பின்னர், திருத்தூதர் பணிகள் நூலில், புனித லூக்கா விவரித்திருக்கும் இவ்வுலகில் நற்செய்திப் பயணம், வியப்புக்குரிய வழியில் வெளிப்படுத்தப்படுகின்ற, கடவுளின் மிக உன்னத படைப்பாற்றலுடன் சேர்ந்தே செல்கின்றது, தாம் கொணர்ந்த மீட்பு குறிப்பிட்ட சிலருக்கே உரியது என்ற எண்ணத்திலிருந்து, தம் பிள்ளைகள் வெளியேறி, மீட்பின் உலகளாவியதன்மைக்கு தங்களைத் திறக்க வேண்டும் என கடவுள் விரும்புகிறார் என்று, இத்தாலிய மொழியில் முதலில் தன் மறைக்கல்வியைத் துவக்கினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

மறைக்கல்வியுரை

அன்புச் சகோதரர், சகோதரிகளே, கிறிஸ்துவில், கடவுள் வழங்கும் மீட்பு எனும் கொடை, அனைத்து நாடுகளின் மக்களுக்கும் உரியது. இந்த உண்மையை, தொடக்ககாலத் திருஅவை உணர்வதற்கு, தூய ஆவியார், எவ்வாறு தம் அருள்கொடைகளை அதன்மீது ஏராளமாகப் பொழிந்து வழிநடத்தி வந்தார் என்பதை, நம் மறைக்கல்வியில் அறிந்து வருகிறோம். இந்தப் பயணத்தில் இக்கட்டான நிகழ்வு ஒன்று இடம்பெற்றது. கடவுளின் கண்களில் எந்த ஓர் உணவும் தூய்மையற்றது அல்ல என்பதை, புனித பேதுருவுக்கு, கடவுள் கனவில் உணர்த்தியபோது, அது ஏறத்தாழ உடனடியாகவும் நடைபெற்றது. உரோமைப் படைப்பிரிவில், நூற்றுவர் தலைவராகப் பணியாற்றிய, யூதரல்லாத கொர்னேலியு என்பவர், பேதுருவிடம் வந்து, அவர் போதித்த நற்செய்தியைக் கேட்டு, குடும்பத்துடன் தூய ஆவியின் கொடையைப் பெற்று, திருமுழுக்கு பெற்றபோது(cf. தி.ப. 10), அது நடைபெற்றது. கடவுள் இஸ்ராயேலுக்கு வாக்குறுதியளித்த அனைத்து ஆசீர்வாதங்களும், எல்லா மக்களுக்கும் வழங்கப்படுகிறது என்ற கடவுளின் படைப்பாற்றலுக்கு, பேதுருவின் மனமும், இதயமும் திறப்பதற்கு இந்த நிகழ்வு இட்டுச் சென்றது. கடவுளின் மீட்பு, உலகில் எல்லாருக்கும் உரியது என்பதை, பேதுரு தேர்ந்துதெளிந்தது, நற்செய்தியின் மகிழ்வை, எல்லாருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகின்ற, உண்மையான நற்செய்தி அறிவிப்பாளரைக் குறித்து நிற்கின்றது. பேதுருவின் எடுத்துக்காட்டு, நமக்கும் சவால் விடுக்கின்றது. அதாவது, உயிர்த்த ஆண்டவரில் வழங்கப்படும் மீட்பை நோக்கி, இக்காலத்திலும், எல்லா மக்களையும் தூய ஆவியார் கவர்ந்திழுக்கிறார் என்ற, கடவுளின் வியத்தகு படைப்பாற்றலுக்குத் திறந்த மனத்தவராய் இருக்கின்றோமா என்பதை பரிசோதித்துப் பார்ப்பதற்கு, நாம் சவால் விடுக்கப்படுகின்றோம்.

இவ்வாறு இப்புதன் காலையில் தன் மறைக்கல்வியுரையை நிறைவு செய்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மலேசியா, இந்தோனேசியா, பிலிப்பீன்ஸ் உட்பட, இந்நிகழ்வில் கலந்துகொண்ட அனைத்து நாடுகளின் திருப்பயணிகளையும் வாழ்த்தி, தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் வழங்கினார்.

16 October 2019, 14:45