தேடுதல்

Vatican News
2019.10.18 'உலகின் ஆன்மா' என்ற கண்காட்சி 2019.10.18 'உலகின் ஆன்மா' என்ற கண்காட்சி  (Vatican Media)

அழகும், கலையும், மனித உடன்பிறந்தநிலையை வளர்க்கின்றன

அமேசான் பற்றிய கண்காட்சி, மக்கள் மற்றும், நாடுகளுக்கிடையே, நல்லிணக்கம் மற்றும், அமைதியின் மதிப்பை நினைவுபடுத்துவதாக – திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

“இயேசுவின் இதயத்தையும், அவரின் இரக்கத்தையும் வெளிப்படுத்தியிருக்கின்ற புனித லூக்கா, நாம் ஆண்டவரின் நன்மைத்தனத்திற்குச் சாட்சிகளாகவும், கிறிஸ்தவர்களாக இருப்பதன் மகிழ்வையும் கண்டுணர்வதற்கு உதவுவாராக” என்ற சொற்களை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வெள்ளியன்று, தன் டுவிட்டர் செய்தியில் பதிவுசெய்துள்ளார்.

அக்டோபர் 18, இவ்வெள்ளியன்று, நற்செய்தியாளர் புனித லூக்காவின் விழா சிறப்பிக்கப்பட்டதையொட்டி, #SaintOfTheDay என்ற ‘ஹாஷ்டாக்’உடன் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், இவ்வாறு அப்புனிதரிடம் செபித்துள்ளார்.  

‘உலகின் ஆன்மா’ கண்காட்சி

மேலும், அக்டோபர் 18, இவ்வெள்ளி மாலையில், வத்திக்கான் அருங்காட்சியகத்தில், அமேசான் பற்றிய கண்காட்சியைத் திறந்து வைத்து, இதற்குப் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்கள் உள்ளிட்ட எல்லாருக்கும் நன்றி கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த கண்காட்சிக்கு, ‘Anima Mundi' அதாவது 'உலகின் ஆன்மா’ என்ற தலைப்பு தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதற்கு தன் பாராட்டுதல்களைத் தெரிவித்த திருத்தந்தை, மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் இந்தக் கலைவேலைப்பாடுகள், திறந்த மனம் மற்றும், நன்மைத்தன உணர்வுடன், நாம் எப்போதும் மற்றவரின் கலாச்சாரத்தை நோக்க வேண்டும் என்ற செய்தியைத் தருகின்றன என்று கூறினார்.

அழகு, நம்மை ஒன்றிணைக்கிறது, இது, வெறுப்பு, இனப்பாகுபாடு, தேசியவாதம் போன்ற முரண்பட்ட கலாச்சாரத்திலிருந்து விடுபட்டு, மனித உடன்பிறந்தநிலையில் வாழ்வதற்கு நமக்கு அழைப்பு விடுக்கின்றது என்றும், திருத்தந்தை கூறினார்.

அமேசான் பற்றிய இக்கண்காட்சிக்கு, அப்பகுதியில் மறைப்பணியாற்றும், கொன்சலாத்தா, சலேசிய, கப்புச்சின், சவேரியன் ஆகிய துறவு சபைகள் உதவியுள்ளதற்கு நன்றியும் தெரிவித்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்தக் கண்காட்சி, மக்கள் மற்றும், நாடுகளுக்கிடையே, நல்லிணக்கம் மற்றும், அமைதியின் மதிப்பை நினைவுபடுத்தும் என்ற நம்பிக்கையைத் தெரிவித்த  திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இதைப் பார்வையிடும் அனைவர் இதயங்களிலும், கடவுளின் குரல் ஒலிக்கட்டும் என்று, தன் நல்வாழ்த்தையும் வெளிப்படுத்தினார்.

அமேசான் மாமன்றம் நிறைவு

அக்டோபர் 27, ஞாயிறு காலை பத்து மணிக்கு, வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்கா பேராலயத்தில் திருப்பலி நிறைவேற்றி, அமேசான் சிறப்பு உலக ஆயர்கள் மாமன்றத்தை நிறைவு செய்வார், திருத்தந்தை பிரான்சிஸ்.

“திருஅவைக்கும், ஒருங்கிணைந்த சூழலியலுக்கும் புதிய பாதைகள்” என்ற தலைப்பில், வத்திக்கானில், அக்டோபர் 6ம் தேதியிலிருந்து இந்த மாமன்றம் நடைபெற்று வருகிறது.

18 October 2019, 15:06