தேடுதல்

Vatican News
இலத்தீன் அமெரிக்க பிரச்னைகளை விவாதிக்கும் பன்னாட்டு கருத்தரங்கு பிரதிநிதிகளுடன் இலத்தீன் அமெரிக்க பிரச்னைகளை விவாதிக்கும் பன்னாட்டு கருத்தரங்கு பிரதிநிதிகளுடன்  (ANSA)

Puebla இலத்தீன் அமெரிக்க ஆயர்கள் பேரவை பற்றிய நினைவுகள்

Puebla பேரவை முடிந்த நாற்பது ஆண்டுகளுக்குப்பின், இலத்தீன் அமெரிக்கத் திருஅவையில் ஏற்பட்டுள்ள வளர்ச்சிகள் பற்றிய பன்னாட்டு கருத்தரங்கு

கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான் செய்திகள்

மெக்சிகோ நாட்டின் Puebla நகரில் நடைபெற்ற, மூன்றாவது இலத்தீன் அமெரிக்க ஆயர் பேரவையின் நாற்பதாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு, உரோம் நகரில் இடம்பெறும் பன்னாட்டு கருத்தரங்கில் கலந்துகொள்ளும் ஏறத்தாழ முப்பது பிரதிநிதிகளை, அக்டோபர் 3, இவ்வியாழனன்று சந்தித்து உரையாற்றினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

1979ம் ஆண்டு சனவரியில், மெக்சிகோ நகரின் தென்கிழக்கிலுள்ள Puebla நகரில் ஏறத்தாழ 400 ஆயர்கள் கூடி, “இலத்தீன் அமெரிக்காவில், தற்போதைய மற்றும், வருங்கால நற்செய்தி அறிவிப்பு” பற்றிச் சிந்தித்தனர். புனித திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்கள், தனது முதல் வெளிநாட்டுத் திருத்தூதுப் பயணத்தில், இப்பேரவையில் துவக்கயுரையாற்றி, அதனை ஆரம்பித்து வைத்தார். 

இந்த வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வின் முக்கியத்துவம், மற்றும் அது முன்வைக்கும் சவால்கள் பற்றி கலந்துரையாடல்களை நடத்திவரும் இப்பிரதிநிதிகளிடம், இந்தப் பேரவையை, புனித திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்கள் ஆரம்பித்து வைத்தபோது ஆற்றிய உரை பற்றியும் குறிப்பிட்டார், திருத்தந்தை பிரான்சிஸ்.

சொந்த நினைவுகள்

அச்சமயத்தில் அர்ஜென்டீனா இயேசு சபை மாநிலத்திற்கு, தான் தலைவராக இருந்தது பற்றியும், அந்தப் பேரவைக்கு இடம்பெற்ற தயாரிப்புகளை, மிகுந்த ஆர்வமுடன் தான் உன்னிப்பாகக் கவனித்து வந்தது பற்றிய பழைய நினைவுகளையும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பகிர்ந்துகொண்டார்.

இலத்தீன் அமெரிக்காவில், திருஅவையில் ஏற்பட்ட புதிய கூறுகள் பற்றிய விழிப்புணர்வு, இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்தின் பாதையில் இறைமக்களை வழிநடத்திச்செல்லும் நல்ல திருஅவை, மரியியலை பண்பாட்டுமயமாக்களோடு நன்றாக இணைத்தல், இலத்தீன் அமெரிக்காவின் பொதுவான பக்தி மற்றும், கலாச்சாரத்தோடு ஒத்திணங்கும் வகையில் நற்செய்தி அறிவித்தல், அங்கீகரிக்கப்படாத மனித உரிமைகளைத் துணிச்சலுடன் எடுத்துக் கூறுதல், இளையோர், ஏழைகள் மீது கவனம், போன்ற தலைப்புகள் Puebla பேரவையில் இடம்பெற்றன என்று கூறினார், திருத்தந்தை.

40ம் ஆண்டை நினைவுகூரும் இந்நிகழ்வில், கடந்த காலத்தைத் திரும்பிப் பார்ப்பதோடு நில்லாமல், இக்காலத்தை நோக்கியும் சிந்திக்குமாறு திருத்தந்தை கேட்டுக்கொண்டார்.

03 October 2019, 15:29