தேடுதல்

வத்திக்கான் தோட்டத்தில் மரம் நடுகிறார் திருத்தந்தை பிரான்சிஸ் வத்திக்கான் தோட்டத்தில் மரம் நடுகிறார் திருத்தந்தை பிரான்சிஸ்  

அக்டோபர் 4ல் சிந்தூர மரக்கன்றை நட்டார் திருத்தந்தை

பறவைகள், Holms சிந்தூர மரங்களில் அமர்ந்துதான், அசிசி நகர் புனித பிரான்சிஸ் அவர்களின் போதைனைகளைக் கேட்டதாகச் சொல்லப்படுகின்றது

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

அக்டோபர் 4, இவ்வெள்ளி பகல் 12.30 மணியளவில், வத்திக்கான் தோட்டத்தில், படைப்பின் காலம் என்ற நிகழ்வை நிறைவுறச் செய்த நிகழ்வில், சூழலியல் பாதுகாப்பைக் குறிக்கும் முறையில், இலையுதிர்க்காத சீமை ஆல்வகையைச் சார்ந்த (Holms Oak) சிந்தூர மரக்கன்று ஒன்றை நட்டார், திருத்தந்தை பிரான்சிஸ்.

அசிசி நகரிலிருந்து கொண்டுவரப்பட்ட இந்த வகை சிந்தூர மரங்களில் அமர்ந்துதான், பறவைகள், அசிசி நகர் புனித பிரான்சிஸ் அவர்களின் போதைனைகளைக் கேட்டதாகச் சொல்லப்படுகின்றது. holm என்ற சொல், “holly” – “holy” என்ற ஆங்லோ-சாக்சன் சொல்லிலிருந்து மருவி வந்த தாகச் சொல்லப்படுகின்றது.

இந்நிகழ்வில், உலகளாவிய கத்தோலிக்க சூழலியல் இயக்கத்தின் இயக்குனர் Tomás Insua,

அமேசான் பகுதி திருஅவை அமைப்பின் செயலர் Mauricio López Oropeza (REPAM), பிரான்சிஸ்கன் சபையின் துணைத் தலைவர் அருள்பணி Julio Bunader, உலகளாவிய கத்தோலிக்க சூழலியல் இயக்கத்தின் ஐரோப்பிய இயக்குனர் Cecilia Dall’Oglio ஆகியோரும், பூர்வீக இனங்களின் தலைவர்களும் கலந்துகொண்டனர். 

புனித திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்கள், அசிசி நகர் புனித பிரான்சிஸ் அவர்களை, சூழலியல் ஆர்வலர்களின் பாதுகாவலர் என, 1979ம் ஆண்டு நவம்பர் 29ம் தேதி அறிவித்தார்.

கர்தினால் டர்க்சன்

மேலும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் பிரசன்னத்தில், அக்டோபர் நான்கு, இவ்வெள்ளியன்று வத்திக்கான் தோட்டத்தில் நடைபெற்ற, "படைப்பின் காலம்" என்ற நிகழ்வின் நிறைவு நிகழ்வில் உரையாற்றினார், திருப்பீட ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற அவைத் தலைவர் கர்தினால் பீட்டர் டர்க்சன்.

மரம் நடும் இன்றைய நிகழ்வில், சில ஆண்டுகளுக்குமுன், வத்திக்கான் தோட்டத்தில், படைப்பைப் பாதுகாப்பதில் மிகுந்த ஆர்வமுடைய இருபெரும் சமயத் தலைவர்களும், அமைதி ஆர்வலர்களும் ஒலிவ மரக்கன்று நட்டதை நினைத்துப் பாரக்கிறேன் என்றும் கர்தினால் டர்க்சன் அவர்கள் கூறினார்.

2014ம் ஆண்டு ஜூன் 8ம் தேதி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், கான்ஸ்தாந்திநோபிள் கிறிஸ்தவ ஒன்றிப்பு முதுபெரும்தந்தை முதலாம் பர்த்தலோமேயோ அவர்களும், இஸ்ரேல் அரசுத்தலைவர் ஷிமோன் பேரெஸ் அவர்களும், பாலஸ்தீனியத் தலைவர் Abu Mazen அவர்களும் சேர்ந்து வத்திக்கான் தோட்டத்தில், ஒலிவ மரக்கன்று ஒன்றை நட்டனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

04 October 2019, 15:16