தேடுதல்

இயேசு-மரியா துறவு சபையின் 37வது பொதுப் பேரவையில்  பிரதிநிதிகள் சந்திப்பு இயேசு-மரியா துறவு சபையின் 37வது பொதுப் பேரவையில் பிரதிநிதிகள் சந்திப்பு 

கடவுள் உலகை நோக்குவது போல் நோக்குங்கள்

இயேசு-மரியா துறவு சபையின் 37வது பொதுப் பேரவையில் கலந்துகொள்ளும் பிரதிநிதிகளை, திருத்தந்தை திருப்பீடத்தில் சந்தித்து உரையாற்றினார்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

கடவுளின் இரக்கத்தின் நன்மைத்தனத்திற்குச் சான்றுகளாக இருங்கள், உடன்பிறந்தநிலை மற்றும், தோழமையுணர்வு வாழ்வுப் பாதையில் நடங்கள், தெளிந்து தேர்ந்து செயல்படுங்கள் மற்றும், முன்னோக்கிச் செல்வதற்குத் துணிச்சலைக் கொண்டிருங்கள் என்று, இயேசு-மரியா துறவு சபை அருள்சகோதரிகளிடம் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.

இயேசு-மரியா துறவு சபையின் 37வது பொதுப் பேரவையில் கலந்துகொள்ளும் ஏறத்தாழ எழுபது பிரதிநிதிகளை, அக்டோபர் 5, இச்சனிக்கிழமை காலையில் திருப்பீடத்தில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அச்சபை அருள்சகோதரிகள் செல்ல வேண்டிய மூன்று பாதைகளைச் சுட்டிக்காட்டினார்.

அன்னை மரியா, எலிசபெத்தம்மாளைச் சந்திக்கச் சென்ற நிகழ்வை (cf.லூக்.1:39-56) மையப்படுத்தி, ‘திருத்தூது குடும்பமாக, நம்பிக்கையுடன் முன்னோக்கிச் செல்ல’ என்ற தலைப்பில் இப்பொதுப் பேரவையை நடத்திவரும் இச்சகோதரிகளை வாழ்த்திய திருத்தந்தை, திருஅவையிலும், உலகிலும், இவர்கள் ஆற்றிவரும் நற்பணிகளுக்கு நன்றி தெரிவித்தார்.

புனித Claudine Thévenet அவர்கள் ஆரம்பித்த, சிறிய, ஏழைகளுக்கான திருத்தூதுப் பணி, கடந்த 200 ஆண்டுகளில் உலகெங்கும் பலனுள்ள முறையில் பரவி, இன்று, நான்கு கண்டங்களில், 28 நாடுகளில் நற்பணியாற்றி வருவதைக் குறிப்பிட்ட திருத்தந்தை, அச்சம் மற்றும், முற்சார்பெண்ணமின்றி, கடவுள் பார்ப்பது போன்று, நம் உலகை, பரிவுடனும், துணிச்சலுடனும் நோக்க வேண்டும் என்று கூறினார்.

உடன்பிறந்தநிலை

குழு வாழ்வில் உடன்பிறந்தநிலை வாழ்வு, உலகுக்கு இறைவாக்கு உரைப்பதாகும் என்றும், அதேமாதிரியான உணர்வை நம் ஏனைய சகோதரர்களிடமும் காட்ட வேண்டும் என்றுரைத்த திருத்தந்தை, இன்று கடவுள் உங்களிடம் விரும்புவதற்கு, மிக நன்றாகப் பதிலளிக்கும்பொருட்டு, தேர்ந்து தெளிதல், மதிப்பீடு செய்தல் மற்றும் தெரிவுசெய்தல் ஆகிய பாதைகளில் நடக்குமாறு ஊக்கப்படுத்துகிறேன் என்று கூறினார்.

புனித இஞ்ஞாசியாரின் ஆன்மீகத்தை அடிப்படையாக வைத்து, 1818ம் ஆண்டு அக்டோபர் 6ம் தேதி, பிரான்ஸ் நாட்டின் லியோன் நகரில், புனித Claudina Thévenet அவர்களால், இயேசு-மரியா சபை தோற்றுவிக்கப்பட்டது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

05 October 2019, 14:59