தேடுதல்

Vatican News
புதிய கர்தினால்கள் திருவழிபாடு புதிய கர்தினால்கள் திருவழிபாடு 

கடவுளின் பரிவன்பைப் பெற்றவர் என்ற உணர்வு அவசியம்

அந்த அல்லது இந்த சகோதரர், சகோதரி மீது, அந்த ஆயர், அந்த அருள்பணியாளர் மீது பரிவுடன் நடந்துகொள்கிறேனா? அல்லது, எனது தீர்ப்பு மற்றும், புறக்கணிப்புப் போக்கால் அவர்களைத் தொடர்ந்து துன்புறுத்துகிறேனா?

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

அக்டோபர் 5, இச்சனிக்கிழமை மாலையில், 13 புதிய கர்தினால்களை உயர்த்திய திருவழிபாட்டில் வாசிக்கப்பட்ட, பெருந்திரளான மக்கள் ஆயரில்லா ஆடுகளைப்போல் இருந்ததால், இயேசு அவர்கள் மீது பரிவு கொண்டு, அவர்களுக்குப் பலவற்றைக் கற்பித்து பின்னர் உணவளித்த மாற்கு நற்செய்தியை (மாற்.6:30-37) மையப்படுத்தி, மறையுரைச் சிந்தனைகளை வழங்கினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்நற்செய்தி பகுதியில், இயேசுவின் பரிவே, மையமாக உள்ளது, பரிவே, நற்செய்தியில் மையச் சொல்லாகும், கிறிஸ்துவின் இதயத்தில் எழுதப்பட்டுள்ள இச்சொல், கடவுளின் இதயத்தில் என்றென்றும் எழுதப்பட்டுள்ளது என்று கூறினார், திருத்தந்தை.

இயேசுவின் பரிவு வெளிப்படும் நற்செய்திப் பகுதிகளையும், பழைய ஏற்பாட்டில் மோசேயை கடவுள் அழைத்த நிகழ்வு தொடங்கி, பல்வேறு நிகழ்வுகளில் கடவுளின்  பரிவு வெளிப்படும் பகுதிகளையும் சுட்டிக்காட்டி மறையுரையாற்றிய திருத்தந்தை, நம் வாழ்வில் கடவுளின் பரிவால், இரக்கத்தால், நாம் எப்போதும் வழிநடத்தப்பட்டுள்ளோம் என்ற விழிப்புணர்வு உள்ளதா? என்ற கேள்வியை, கர்தினால்களிடம் முன்வைத்தார்.  

கர்தினால்களின் சிவப்பு தொப்பி

கர்தினால்களின் தொப்பியின் நிறம், அவர்கள், தங்கள் சொந்த குருதியைச் சிந்துவதற்குத் தயாராக இருப்பதைக் குறித்துக் காட்டுகின்றது என்றும், தாங்கள் கடவுளின் இரக்கத்தைப் பெற்றவர்கள் மற்றும், அந்த இரக்கத்தை மற்றவருக்குக் காட்ட வேண்டியவர்கள் என்ற விழிப்புணர்வில் இருக்கையில், அந்நிலை பாதுகாப்பாக இருக்கும் என்றும், திருத்தந்தை கூறினார்.

இந்த ஒரு விழிப்புணர்வின்றி எவரும், தனது பணிக்கு விசுவாசமாக இருக்க இயலாது என்றும், திருஅவையின் அதிகாரிகளில் நிலவும் பல நேர்மையற்ற நடவடிக்கைகளுக்கு, பரிவிரக்கம் காட்டப்பட்டவர்கள் என்ற உணர்வு குறைவுபடுவதும், புறக்கணிப்புடன் நடந்துகொள்வதுமே காரணம் என்றும், திருத்தந்தை கூறினார்.

நம்மைச் சிறப்பாகத் தேர்ந்தெடுத்து, திருப்பொழிவுசெய்து, தமது மீட்பின் நற்செய்தியை அனைவருக்கும் அறிவிக்க நம்மை அனுப்பியுள்ள ஆண்டவருக்குச் சாட்சிகளாக வாழும்பொருட்டு, இரக்கமுள்ள இதயத்தைப் பெறுவதற்கு, திருத்தூதர் பேதுருவின் பரிந்துரையை இறைஞ்சுவோம் என, தனது மறையுரையை நிறைவு செய்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இத்திருவழிபாட்டில், புதிய கர்தினால் புதிய கர்தினால் Miguel Ángel Ayuso Guixot அவர்கள், திருத்தந்தைக்கு நன்றியுரையாற்றினார்.

05 October 2019, 15:35