தேடுதல்

Luján அன்னை மரியாவின் இரு திருவுருவங்கள் Luján அன்னை மரியாவின் இரு திருவுருவங்கள்  

Luján அன்னை மரியா திருவுருவங்களை திருத்தந்தை அர்ச்சித்தார்

1982ம் ஆண்டில் நடைபெற்ற Falkland போரின்போது, பிரித்தானிய படைகள், அர்ஜென்டீனாவின் Luján அன்னை மரியா திருவுருவத்தை பிரித்தானியாவுக்கு எடுத்துச் சென்றன

மேரி தெரேசா: வத்திக்கான்

இப்புதன் பொது மறைக்கல்வியுரையின்போது, அர்ஜென்டீனாவின் Luján அன்னை மரியாவின் இரு திருவுருவங்களை திருத்தந்தை அர்ச்சித்தார். 1982ம் ஆண்டில் நடைபெற்ற Falkland போரின்போது, பிரித்தானிய படைகள், Luján அன்னை மரியா திருவுருவத்தை பிரித்தானியாவுக்கு எடுத்துச் சென்றன. Luján அன்னை மரியா திருவுருவத்தின் மூலப்படிவம் அர்ஜென்டீனா ஆயர்களிடமும், அத்திருவுருவத்தைப் போன்ற மற்றொரு திருவுருவத்தை பிரித்தானிய ஆயர்களிடமும் இன்று ஒப்படைக்கப்பட்டன. இந்நடவடிக்கை வழியாக, அர்ஜென்டீனாவின் பாதுகாவலரான Luján அன்னை மரியா திருவுருவம், அதன் சொந்த நாட்டிற்கு எடுத்துச் செல்லப்படுகிறது.  இங்கிலாந்தின் Aldershot புனிதர்கள் மிக்கேல் மற்றும், ஜார்ஜ் கத்தோலிக்க இராணுவ பேராலயத்திற்கு அந்த அன்னை மரியா திருவுருவம் வழங்கப்பட்டுள்ளது.  

1982ம் ஆண்டு ஏப்ரலில் Falkland தீவுகளை அர்ஜென்டீனா படைகள் ஆக்ரமித்தபோது, தங்களுடன் இத்திருவுருவத்தையும் எடுத்துச் சென்றன.

Luján அன்னை மரியா திருவுருவம், 1630ம் ஆண்டில் பிரேசிலில் உருவாக்கப்பட்டு, அர்ஜென்டீனாவிற்கு வழங்கப்பட்டு, அந்நாட்டின் Luján நகர பசிலிக்காவில் வைக்கப்பட்டது.

ஈராக் மக்களுக்காக திருத்தந்தை

இன்னும், ஈராக்கில், மனித மாண்பு மற்றும், அமைதியான வாழ்வுக்காக விண்ணப்பிக்கும் மக்களின் குரல்களுக்கு, அதிகாரிகள் செவிமடுக்குமாறு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அக்டோபர் 30, இப்புதன் பொது மறைக்கல்வியுரைக்குப்பின் அழைப்பு விடுத்தார். இம்மாதத்தில் ஈராக்கில் இடம்பெற்ற போராட்டங்களில் எண்ணற்றவர்கள் இறந்தனர், மற்றும், காயமுற்றனர் என்று கூறியத் திருத்தந்தை, அந்நாட்டின் பிரச்சனைகள் மற்றும் சவால்களுக்கு நீதியான தீர்வுகள் காணப்பட, உலகளாவிய சமுதாயத்தின் ஆதரவோடு, உரையாடல் மற்றும் ஒப்புரவு வழிகளைத் தேடுமாறும் கேட்டுக்கொண்டார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

30 October 2019, 15:20