தேடுதல்

Vatican News
புதன் மறைக்கல்வியுரையின்போது - 231019 புதன் மறைக்கல்வியுரையின்போது - 231019  (ANSA)

மறைக்கல்வியுரை : புறவினத்தாருக்கு நற்செய்தி அறிவிப்பு துவக்கம்

கிறிஸ்தவர்களிடையே காணப்படும் பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பதற்கு, மற்றவர்களுக்கு செவிமடுப்பதே சிறந்த வழி, அதுவும் தூய ஆவியாரின் வழிகாட்டுதலின் கீழ் இது இடம்பெறவேண்டும்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

இதமான குளிரும், வெப்பமும் கலந்ததாக, இப்புதன் காலை, உரோம் நகரின் தட்ப வெப்ப நிலை இருக்க, வத்திக்கான் புனித பேதுரு வளாகம், திருப்பயணிகள், மற்றும், சுற்றுலாப்பயணிகளால் நிரம்பி வழிந்தது. கடந்த சில வாரங்களாக, 'இயேசுவின் சீடர்களின் துவக்க கால மறைப்பணிகள்’ என்ற கருத்தை மையப்படுத்தி, ஒரு தொடரை வழங்கிவரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வாரம், விசுவாசக் கதவுகளை, இறைவன், புறவினத்தாருக்கும் திறந்துவிட்டார் என்பதை மையமாக வைத்து, தன் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார். முதலில், திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து ஒரு பகுதி வாசிக்கப்பட்டது.

நெடு நேர விவாதத்துக்குப்பின்பு பேதுரு எழுந்து அவர்களை நோக்கிக் கூறியது: “சகோதரரே, பிற இனத்தவர் என் வாய்மொழி வழியாக நற்செய்தியைக்கேட்டு அதில் நம்பிக்கைகொள்ளும்படி கடவுள் தொடக்கத்திலேயே உங்களிடமிருந்து என்னைத் தேர்ந்தெடுத்தார் என்பதை நீங்கள் அறிவீர்கள். உள்ளங்களை அறியும் கடவுள் நமக்குத் தூய ஆவியைக் கொடுத்ததுபோல் அவர்களுக்கும் கொடுத்து அவர்களை ஏற்றுக்கொண்டார்[…]. ஆண்டவர் இயேசுவின் அருளால் நாம் மீட்புப் பெறுவதுபோலவே அவர்களும் மீட்புப் பெறுகிறார்கள் என நம்புகிறோம்.”(தி.ப. 15, 7-11)

இந்த வாசகத்திற்குப் பின் திருத்தந்தையின் பகிர்வு ஆரம்பமானது.

அன்பு சகோதர சகோதரிகளே, திருத்தூதர் பணிகள் நூலில் காணப்படும் சீடர்களின் செயல்பாடுகள் குறித்த நம் தொடரில் இன்று, புனித பவுலின் முதல் மறைப்பணி பயணம் குறித்து நோக்குவோம். பல்வேறு தீவிர துன்பங்களுக்குப்பின், பவுலும் பர்னபாவும் தூய ஆவியாரால் தூண்டப்பட்டவர்களாக, வெளியிடங்களில் நற்செய்தியை அறிவிக்க புறப்பட்டுச் சென்றனர். இதன் விளைவாக, புறவினத்தாருக்கும் நற்செய்தி அறிவிக்கப்பட்டது.

இப்பணி துவங்கிய காலத்தில், ஓர் உயிரோட்டமான வாதம் துவங்கியது. புறவினத்திலிருந்து கிறிஸ்தவ மறையைத் தழுவியவர்கள், மோசேயின் சட்டங்களை, தீவிரமாகக் கடைபிடிக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறதா என்பதே அந்த வாதம். இது தொடர்பான விடயங்களில் இறைவனின் விருப்பத்தை அறிந்துகொள்ளும் நோக்கத்தில், சீடர்கள், எருசலேமில் ஒன்றுகூடி, ஒரு புதிய புரிந்துகொள்ளலை தங்களுக்குள் பகிர்ந்துகொண்டனர். கிறிஸ்தவர்களிடையே காணப்படும் பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பதற்கு, மற்றவர்களுக்கு செவிமடுப்பதே சிறந்த வழி என்பதையம், அதுவும் தூய ஆவியாரின் வழிகாட்டுதலின் கீழ் இது இடம்பெறவேண்டும் என்பதையும், இந்த எருசலேம் பொதுச்சங்கம் நமக்கு உணர்த்துகிறது. நாமும் கலந்துரையாடலின் பாதையைப் பின்பற்றவும், ஒருவருக்கொருவர் பொறுமையுடன் செவிமடுக்கவும், இறைவனின் குரலுக்கு செவிசாய்க்கவும் நம்முள் உருவாகும் விருப்பத்தை பலப்படுத்த வேண்டுமென, இறைவனை நோக்கி செபிப்போம்.

இவ்வாறு, தன் புதன் மறைக்கல்வி உரையை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்,  அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.

23 October 2019, 11:29