வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்கா பேராலயத்தில், மாலை திருப்புகழ்மாலை வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்கா பேராலயத்தில், மாலை திருப்புகழ்மாலை  

திருத்தந்தை - சான்று பகர்வதற்கு ஆண்டவர் அழைக்கிறார்

பயணம் செய்துகொண்டிருக்கும் ஒரு திருஅவையே, திருத்தூது திருஅவையாகும், அவ்வாறு செயல்படுகையில், அது, காரியங்கள் தவறாகச் சென்றுகொண்டிருக்கின்றன என்று துயரப்பட்டு காலத்தை வீணாக்கிக்கொண்டிருக்காது

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

அக்டோபர் 1, இச்செவ்வாய் மாலை 6 மணிக்கு, வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்கா பேராலயத்தில், மாலை திருப்புகழ்மாலை திருவழிபாடு நிறைவேற்றி, சிறப்பு திருத்தூது மாதத்தைத் துவக்கி வைத்த, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், எப்போதும் பயணம் செய்யும், திருத்தூது திருஅவையில் சாட்சிகளாக வாழுங்கள் எனக் கேட்டுக்கொண்டார்.  

சிறுமலர் என அன்போடு நாம் அழைக்கும் புனித குழந்தை தெரேசாவின் விழா, அக்டோபர் 1, இச்செவ்வாயன்று சிறப்பிக்கப்பட்டது. கார்மேல் ஆழ்நிலை தியான சபை இல்லத்திலிருந்து ஒருபோதும் வெளியே வராத இப்புனிதை, புனித பிரான்சிஸ் சவேரியாருடன், திருத்தூது நாடுகளுக்குப் பாதுகாவலர் என அறிவிக்கப்பட்டுள்ளார்.

புனித குழந்தை தெரேசாவை தனது மறையுரையில் குறிப்பிட்ட திருத்தந்தை, இப்புனிதை, உலகில் திருத்தூதுப்பணிக்கு செபத்தை ஒரு கருவியாகப் பயன்படுத்தினார், அதேநேரம், புனித பிரான்சிஸ் சவேரியார், புனித பவுலடிகளாருக்குப்பின், எல்லாக் காலத்திலும் மாபெரும் திருத்தூதுப்பணியாளராக இருக்கக்கூடும் என்று கூறினார்.

சிறப்பு திருத்தூது மாதம், நன்மை செய்வதில் உயிர்த்துடிப்புள்ளவர்களாக நம்மைத் தூண்ட வேண்டும், விசுவாசத்தைப் பாதுகாப்பவர்களாக அல்லாமல், திருத்தூதுப்பணியாளராக ஆக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார், திருத்தந்தை பிரான்சிஸ்.

திருத்தூதுப்பணியாளராக இருப்பது என்பது, சான்றுகளாக வாழ்வதாகும், உண்மையில், சான்று என்ற சொல், மறைசாட்சி என்ற சொல்லோடு தொடர்புடையதாகும், மறைசாட்சிகள், இயேசுவின் மீது கொண்டுள்ள அன்பால், எல்லாரையும், ஏன், தங்கள் பகைவர்களையும் அன்புகூர்ந்து, அமைதி மற்றும் மகிழ்வைப் பரப்புவர்களாக வாழ வேண்டும் எனவும், திருத்தந்தை கூறினார்.

மகிழ்வைப் பரப்ப நாம் தவறுகையில், தூதுரைக்கு எதிராகப் பாவம் செய்கிறோம் என்றும், எவரும் என்னை அன்புகூரவில்லை அல்லது புரிந்துகொள்ளவில்லை என, நம்மை பலிகடாக்களாக நினைக்கையில் தூதுரைக்கு எதிராகப் பாவம் செய்கிறோம் என்றும், திருத்தந்தை கூறினார்.

2017ம் ஆண்டு அக்டோபர் 22ம் தேதி ஞாயிறன்று சிறப்பிக்கப்பட்ட உலக திருத்தூது ஞாயிறன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஆற்றிய மூவேளை செப உரையில்,  2019ம் ஆண்டு அக்டோபர் மாதம் முழுவதும், சிறப்பு திருத்தூது மாதமாகச் சிறப்பிக்கப்படும் என அறிவித்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

02 October 2019, 15:57