தேடுதல்

Vatican News
நான்கு புதிய ஆயர்கள் திருப்பொழிவு நான்கு புதிய ஆயர்கள் திருப்பொழிவு   (Vatican Media)

புதிய ஆயர்களிடம் - மந்தையை அன்போடு கவனித்து வாருங்கள்

செபமும், இறைவார்த்தையை அறிவிப்பதும் ஆயரின் முக்கிய பணிகளாகும் என்று, புதிய ஆயர்களிடம் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

அக்டோபர் 4, இவ்வெள்ளி மாலை 5 மணிக்கு, வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்கா பேராலயத்தில், அந்துவான் கமிலெரி, பவ்லோ ருதெல்லி, பவ்லோ போர்ஜியா, மைக்கிள் ஜெர்னி ஆகிய நான்கு அருள்பணியாளர்களை, ஆயர்களாகத் திருநிலைப்படுத்தினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

புதிய ஆயர்களை திருப்பொழிவு செய்த திருப்பலியில், திருஅவையில் ஆயர்களின் பொறுப்புணர்வுகள் பற்றிய சிந்தனைகளை மறையுரையில் பகிர்ந்துகொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், முதல் திருத்தூதர்கள் தொடங்கி, ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு ஆற்றப்பட்டுவரும் திருத்தூதுப் பணியைத் தொடர்ந்து ஆற்றுமாறு கேட்டுக்கொண்டார்.

கிறிஸ்துவே

ஆயரின் திருப்பணியில், கிறிஸ்துவே மீட்பின் நற்செய்தியைத் தொடர்ந்து போதிக்கிறார், மற்றும், விசுவாசத்தின் அருள்சாதனங்கள் வழியாக, விசுவாசிகளைப் புனிதப்படுத்துகிறார் என்றுரைத்த திருத்தந்தை, ஆயரின் ஞானம் மற்றும், விவேகத்தில், கிறிஸ்துவே, இறைமக்களை, விண்ணக மகிழ்வை நோக்கிய இவ்வுலகப் பயணத்தில் தொடர்ந்து வழிநடத்துகிறார் என்றும் தெரிவித்தார்.  

புதிய ஆயர்களாகிய நீங்கள், ஆண்டவரால் தேர்ந்துகொள்ளப்பட்டவர்கள், ஆயர் பதவி, மதிப்பு அல்ல, மாறாக பணியாகும் எனவும், ஆதிக்கம் செலுத்துவதைவிட பணியாற்றுவதற்கு அதிகப் பொறுப்பு ஆயருக்கு உள்ளது என்றும், திருத்தந்தை கூறினார்.

மந்தை மீது அக்கறை

தங்களிடம் ஒப்படைக்கப்பட்டவர்களை, குறிப்பாக, அருள்பணியாளர்கள் மற்றும், திருத்தொண்டர்களையும், அதேநேரம், ஏழைகள், பாதுகாப்பற்றோர், தேவையில் இருப்போர், உபசரிக்கப்பட வேண்டியவர்கள் போன்றோரையும் அன்புகூர வேண்டும் என்றும் திருத்தந்தை கூறினார்.

ஆயர், தனது மந்தை முழுவதையும், அன்போடு பராமரிக்க வேண்டும், இறைத்தந்தையின் பெயரில் அக்கறை காட்ட வேண்டும் என்றுரைத்த திருத்தந்தை, திருஅவைக்கு வாழ்வளிக்கும் தூய ஆவியார் தம் வல்லமையால் நம் பலவீனத்தில் நம்மைப் பேணி காக்கிறார் என்று மறையுரையாற்றினார்.

கடந்த செப்டம்பர் 3ம் தேதி திருப்பீடத் தூதர்களாக நியமிக்கப்பட்ட, அருள்பணியாளர்கள்  Antoine Camilleri, Paolo Rudelli மற்றும், Paolo Borgia ஆகிய மூவரும், இன்னும், புதிய கர்தினாலாக அறிவிக்கப்பட்டுள்ள, இயேசு சபை அருள்பணி Michael Czerny அவர்களும் ஆயர்களாகத் திருப்பொழிவு செய்யப்பட்டனர்.

05 October 2019, 15:05