தேடுதல்

Vatican News
மூவேளை செப உரையில் திருத்தந்தை பிரான்சிஸ் மூவேளை செப உரையில் திருத்தந்தை பிரான்சிஸ்  (Vatican Media)

திருத்தந்தையின் மூவேளை செப உரை

"தீங்கிழைக்கப்பட்டோரின் மன்றாட்டைக் கேட்பார். கைவிடப்பட்டோரின் வேண்டுதலைப் புறக்கணியார்" என்று சீராக்கின் ஞானம் கூறுவது, அமேசான் மாமன்றத்தின் ஆரம்ப புள்ளியாக அமைந்தது - திருத்தந்தை பிரான்சிஸ்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

"தீங்கிழைக்கப்பட்டோரின் மன்றாட்டைக் கேட்பார். கைவிடப்பட்டோரின் வேண்டுதலைப் புறக்கணியார்" என்று இஞ்ஞாயிறு வழங்கப்பட்டிருந்த முதல் வாசகமான சீராக்கின் ஞானம் கூறுவது, அமேசான் மாமன்றத்தின் ஆரம்ப புள்ளியாக அமைந்தது என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இஞ்ஞாயிறு வழங்கிய மூவேளை செப உரையில் கூறினார்.

அக்டோபர் 27, இஞ்ஞாயிறன்று, புனித பேதுரு பசிலிக்கா பேராலயத்தில் அமேசான் சிறப்பு மாமன்றத்தின் நிறைவுத் திருப்பலியை நிறைவேற்றியபின், பேராலய வளாகத்தில் கூடியிருந்தோருக்கு நண்பகல் மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை, அமேசான் பகுதியில் வாழும் ஏழைகளின் குரல், பூமிக்கோளத்தின் குரலோடு இணைந்து, மாமன்ற தந்தையரின் செவிகளில் இந்நாள்களில் ஒலித்தது என்று கூறினார்.

இஞ்ஞாயிறு வழங்கப்பட்ட இரண்டாம் வாசகத்தில், திருத்தூதர் பவுல் கடுமையான போராட்டங்களுக்குப் பின் அடைந்த வெற்றியை, தனக்காக அடையவில்லை என்றும், நற்செய்தியைப் பரப்புவதற்கு அடைந்த வெற்றி என்றும் கூறியதை, தன் மூவேளை செப உரையில் சுட்டிக்காட்டியத் திருத்தந்தை, நற்செய்தியை அறிவிப்பது, மாமன்றத்தின் முக்கிய இலக்குகளில் ஒன்று என்பதையும் எடுத்துரைத்தார்.

நற்செய்தி அறிவிப்புப்பணி என்ற கடல் பயணத்தில், பாதுகாப்பான கரைகளையும் துறைமுகங்களையும் விட்டு, கடலில் பயணம் மேற்கொள்ள நாம் அழைக்கப்பட்டுள்ளோம் என்ற கருத்தை, மாமன்றம் தெளிவாக உணர்த்தியது என்பதையும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் மூவேளை செப உரையில் ஓர் அழைப்பாக வழங்கினார்.

அமேசான் பகுதியின் அரசியான அன்னை மரியா, அப்பகுதியில் வாழும் மக்களையும், நம் அனைவரையும் காத்து, வழிநடத்துவாராக என்ற செபத்துடன், திருத்தந்தை தன் மூவேளை செப உரையை நிறைவு செய்தார்.

27 October 2019, 12:40