தேடுதல்

Vatican News
லெபனான் நாட்டில்  போராட்டம் லெபனான் நாட்டில் போராட்டம்  (ANSA)

லெபனான் நாட்டு அமைதிக்காக திருத்தந்தையின் செபம்

லெபனான் நாட்டில் நிலவும் சமுதாய, பொருளாதார மற்றும் நன்னெறி சிக்கல்களை எதிர்கொள்ளும் அனைத்து அன்பு மக்களுக்கும், குறிப்பாக, அந்நாட்டு இளையோருக்கும் தன் சிறப்பான செபங்களை அனுப்புவதாக திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

கடந்த பத்து நாட்களாக நாடெங்கும் நடைபெற்றுவரும் போராட்டங்களால் முடங்கிப்போயிருக்கும் லெபனான் நாட்டில், அனைத்து மக்களுக்கும் உண்மையான விடுதலை கிடைக்க மக்கள் செபிக்குமாறு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இஞ்ஞாயிறு மூவேளை செப உரையின் இறுதியில் அழைப்பு விடுத்தார்.

அக்டோபர் 27, இஞ்ஞாயிறன்று, வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்கா வளாகத்தில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான மக்களுக்கு நண்பகல் மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை, இவ்வுரையின் இறுதியில், லெபனான் நாட்டிற்காக செபிக்குமாறு மக்களிடம் கேட்டுக்கொண்டார்.

லெபனான் நாட்டில் நிலவும் சமுதாய, பொருளாதார மற்றும் நன்னெறி சிக்கல்களை எதிர்கொள்ளும் அனைத்து அன்பு மக்களுக்கும், குறிப்பாக, அந்நாட்டு இளையோருக்கும் தன் சிறப்பான செபங்களை அனுப்புவதாக திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.

மோதல்களைத் தவிர்த்து, உரையாடல்களை மேற்கொள்ள, லெபனான் நாட்டில் உள்ள அனைவரும் முன்வர வேண்டும் என்று அழைப்பு விடுத்த திருத்தந்தை, துன்பங்களைச் சந்தித்து வரும் மத்தியக் கிழக்குப் பகுதியின் நன்மையை மனதில் கொண்டு, லெபனான் தன் பிரச்சனைகளை விரைவில் தீர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

பன்னாட்டு குழுமங்களின் ஆதரவுடன், லெபனான் நாடு அமைதியை மீண்டும் நிலைநாட்ட, லெபனான் நாட்டு அரசியான, அன்னை மரியாவிடம் செபிப்போம் என்று அழைப்பு விடுத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வளாகத்தில் கூடியிருந்தோர் அனைவரோடும் இணைத்து செபித்தார்.

நாட்டின் பொருளாதாரம் சீர்குலைவு, ஊழல் ஆகியவற்றை மையப்படுத்தி, லெபனான் நாட்டின் மக்கள் தொகையில் 20 விழுக்காட்டினர், போராட்டங்களில் ஈடுபட்டுள்ளதாக ஊடகங்கள் கூறுகின்றன.

தொலைத்தொடர்புகளைப் பயன்படுத்த லெபனான் நாட்டு மக்கள் செலவழிக்கும் தொகை, எகிப்து நாட்டைக் காட்டிலும் ஐந்து மடங்காகவும், ஜோர்டான் நாட்டைக் காட்டிலும் 20 மடங்காகவும் உள்ளது என்ற புள்ளிவிவரம், தற்போதைய போராட்டங்களைத் துவக்கி வைத்துள்ளது என்று கூறப்படுகிறது.

27 October 2019, 14:05