தேடுதல்

உலக மறைபரப்புப்பணி நாள் திருப்பலியில் திருத்தந்தையின் மறையுரை உலக மறைபரப்புப்பணி நாள் திருப்பலியில் திருத்தந்தையின் மறையுரை 

உலக மறைபரப்புப்பணி நாள் – திருத்தந்தையின் மறையுரை

உலக மறைபரப்புப்பணி நாள் திருப்பலியில், மலை, ஏறிச்செல்லுதல், அனைவரும் என்ற மூன்று சொற்களை மையப்படுத்தி தன் மறையுரையைப் பகிர்ந்துகொண்டார் திருத்தந்தை.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

அக்டோபர் 20 இஞ்ஞாயிறன்று சிறப்பிக்கப்பட்ட உலக மறைபரப்புப்பணி நாளன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்கா பேராலயத்தில் தலைமையேற்று நடத்திய திருப்பலியில், மலை, ஏறிச்செல்லுதல், அனைவரும் என்ற மூன்று சொற்களை மையப்படுத்தி தன் மறையுரையைப் பகிர்ந்துகொண்டார்.

மலைகள், இறைவனைச் சந்திக்கும் இடங்கள்

மக்களை சந்திக்க இறைவன் மலைகளைப் பயன்படுத்தினார் என்பதை விவிலியத்தில் பல இடங்களில் நாம் காண்கிறோம் என்று கூறியத் திருத்தந்தை, கிறிஸ்துவின் வாழ்வில், பேறுபெற்றோர் அறிவுரைகள் வழங்கியது, தோற்றமாற்றம் பெற்றது, மற்றும் சிலுவையில் அறையப்பட்டது ஆகிய நிகழ்வுகள், மலைகள் மீது நடைபெற்றதைக் காண்கிறோம் என்று எடுத்துரைத்தார்.

மலைகள் நம்மை மேலே உயர்த்தி, இறைவனைச் சந்திக்கவும், செபிக்கவும் வழிவகுக்கும் அதே நேரம், நாம் அனைவரும் இந்த உன்னத நிலைக்கு அழைக்கப்பட்டுள்ளோம் என்ற எண்ணத்தையும் உருவாக்குகின்றன என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் மறையுரையில் எடுத்துரைத்தார்.

நம் மறைபரப்புப்பணியும் மலையில் துவங்குகிறது என்பதை வலியுறுத்திய திருத்தந்தை, நாம் வாழ்வில் எந்தெந்த மலைச்சிகரங்களை அடைவதற்கு அழைக்கப்பட்டுள்ளோம் என்பதை ஆய்வு செய்யவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

'ஏறிச்செல்வதற்கு' அழைக்கப்பட்டுள்ளோம்

மலையோடு தொடர்புடைய ஒரு முக்கியமான வினைச்சொல், 'ஏறிச்செல்லுதல்' என்பதை தன் மறையுரையின் இரண்டாவது கருத்தாக பகிர்ந்துகொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நாம் இவ்வுலகைச் சார்ந்த சாதாரண விடயங்களிலிருந்து மேலெழுந்து, இறைவனைச் சந்திக்க ஏறிச்செல்வதற்கு அழைக்கப்பட்டுள்ளோம் என்பதை வலியுறுத்திக் கூறினார்.

ஏறிச்செல்லுதல் என்பது, கடினமான ஒரு செயல் எனினும், அந்த முயற்சியை மேற்கொள்ளம்போது, இறைவனைச் சந்திக்கவும், இவ்வுலகைக் குறித்து பரந்துபட்ட கண்ணோட்டம் பெறவும் நம்மால் இயலும் என்று திருத்தந்தை எடுத்துரைத்தார்.

இவ்வுலகம் சார்ந்த விடயங்கள் என்ற பாரத்தால் நாம் தரையிலேயே தங்கிவிடுகிறோமா, அல்லது, இந்த பாரங்களை இறக்கிவைத்துவிட்டு, இறைவனைச் சந்திக்க நம்மையே உயர்த்திக்கொள்கிறோமா என்ற கேள்வியை ஓர் ஆன்ம ஆய்வாக மேற்கொள்ளும்படி, திருத்தந்தை தன் மறையுரையில் விண்ணப்பித்தார்.

மறைபரப்புப்பணி நாளின் முக்கிய சொல் - 'அனைவரும்'

உலக மறைபரப்புப்பணி நாளன்று நாம் சிந்திக்கவேண்டிய முக்கியமானதொரு சொல், 'அனைவரும்' என்பதை, தன் மறையுரையின் மூன்றாவது கருத்தாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பகிர்ந்துகொண்டார்.

'எல்லா மக்களினங்கள்' (எச. 2:2), எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள் (மத். 28:19), எல்லா மனிதரும் மீட்புப் பெற (1 திமோ 2:4) என்று, விவிலியத்தின் பல இடங்களில் மக்கள் அனைவரையும் ஒன்றிணைக்கும் சொற்களைக் காண்கிறோம் என்பதைக் குறிப்பிட்டுப் பேசியத் திருத்தந்தை, நம்மை நாமே மையப்படுத்தும் போக்கிலிருந்து விடுதலை பெற்று, அனைவரையும் ஏற்றுக்கொள்ளும் மனநிலையைப் பெறுவதற்கு, உலக மறைபரப்புப்பணி நாள் நம்மை அழைக்கிறது என்று கூறினார்.

உலகெங்கும் சென்று மக்களை சீடராக்குங்கள் என்று இயேசு பணித்தபோது, மக்கள் அனைவரையும், இறைவனின், இயேசுவின் சீடர்களாக்க பணித்தார் என்பதை மறந்துவிடக்கூடாது என்று, மறைபரப்புப்பணி நாளன்று வழங்கிய மறையுரையின் இறுதியில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

20 October 2019, 12:28