தேடுதல்

உலக ஆயர்கள் மாமன்றத்தில் துவக்கவுரையாற்றுகிறார் திருத்தந்தை உலக ஆயர்கள் மாமன்றத்தில் துவக்கவுரையாற்றுகிறார் திருத்தந்தை 

அமேசான் மாமன்றத்தை இயக்குபவர் தூய ஆவியார்

இத்திங்கள் காலையில் முதல் நிகழ்வாக, அமேசான் உலக ஆயர்கள் மாமன்றப் பிரதிநிதிகள், வத்திக்கான் பசிலிக்காவில் செபித்தபின், புனித திருத்தந்தை ஆறாம் பவுல் அரங்கத்திற்குப் பவனியாகச் சென்றனர்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான் செய்திகள்

உலக ஆயர்கள் மாமன்றம் என்பது, தூய ஆவியாரின் தூண்டுதல் மற்றும், வழிகாட்டுதலில் ஒன்றுசேர்ந்து நடப்பதாகும், இம்மான்றத்தின் முக்கிய கதாநாயகர் தூய ஆவியாரே, அவரைத் தயவுசெய்து, இந்த அரங்கைவிட்டு வெளியேற்றாமல் இருப்போம் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இத்திங்களன்று மாமன்றப் பிரதிநிதிகளிடம் கேட்டுக்கொண்டார்.

அக்டோபர் 07, இத்திங்கள் காலையில், அமேசான் பகுதி பற்றிய உலக ஆயர்கள் மாமன்றப் பிரதிநிதிகள், வத்திக்கான் பேதுரு பசிலிக்காவில் விசுவாசிகளுடன் சேர்ந்து செபித்தபின், புனித திருத்தந்தை ஆறாம் பவுல் அரங்கத்திற்குப் பவனியாக வந்தனர். காலை செபம் மற்றும், திருத்தந்தையின் துவக்க உரையுடன் இந்த மாமன்றம் துவங்கியது.

இஸ்பானிய மொழியில் துவக்கவுரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தூய ஆவியாரின் பணியை உறுதிசெய்யும்பொருட்டு நிறையச் செபிக்குமாறும், சிந்தித்து, கலந்துரையாடி, தாழ்மையுடன் உற்றுக்கேட்குமாறும், மாமன்றப் பரிதிநிதிகளிடம் கூறினார்.

மாமன்ற நடைமுறைகள்

துவக்க உரையில், மாமன்ற நடைமுறைகள் பற்றி விளக்கிய திருத்தந்தை, புதிதாகப் பிறந்த குழந்தையைப் பராமரிப்பது போன்ற அக்கறையும், உடன்பிறந்த உணர்வு மற்றும், மதிப்புநிறை சூழலும், நெருக்கமான உறவுக் காற்றும், இக்காற்று அடிக்கையிலேயே, அதை வெளியேற்றாமல் இருப்பதும், இதற்குத் தேவைப்படுகின்றது என்றும் கூறினார்.

இம்மான்றம் பற்றி செய்தியாளர்களுக்கு அறிவிப்பதற்குப் பொறுப்பானவர்கள் அதை ஆற்றுவார்கள், அதேநேரம், இந்த அரங்கத்திற்கு வெளியே, மக்கள் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தினால், மாமன்ற நடைமுறை சிறிது சேதப்படுத்தப்படும் என்றும் திருத்தந்தை எச்சரித்தார்.

அமேசானில் வாழும் மக்கள் மீது, மேய்ப்புப்பணி இதயத்தையும், அம்மக்களின் வரலாறு, கலாச்சாரங்கள், வாழ்வுமுறை ஆகியவற்றை மதிக்கும் அணுகுமுறையையும் கொண்டிருக்குமாறு கூறியத் திருத்தந்தை, கருத்தியல் காலனி ஆதிக்கப் போக்கிற்கு எதிராய் தனது கண்டனத்தைத் தெரிவித்தார்.  

மாமன்றம், வட்டரங்கு கலந்துரையாடலோ, பாராளுமன்றமோ, தொலைபேசி அழைப்பு மையமோ அல்ல, மாறாக, அது, மக்களைப் புரிந்துகொள்தலும், அவர்களுக்குப் பணியாற்றுவதுமே மாமன்ற நடைமுறையாகும் என்றும் திருத்தந்தை கூறினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

07 October 2019, 15:49