தேடுதல்

மறைக்கல்வியுரையின்போது -021019 மறைக்கல்வியுரையின்போது -021019 

மறைக்கல்வியுரை : பிலிப்புவின் எடுத்துக்காட்டை பின்பற்ற.....

எத்தியோப்பிய அதிகாரிக்கும், பிலிப்புவுக்கும் இடையே இடம்பெற்ற சந்திப்பின் உரையாடல்கள், விவிலியத்தை வாசிப்பதற்குரிய திறவுகோலை நமக்கு வெளிப்படுத்துகின்றன

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

திருத்தூதர் பணிகள் நூலில் காணப்படும் துவக்க கால கிறிஸ்தவத்தின் வளர்ச்சிப் பற்றி தன் புதன் மறைக்கல்வி உரையில், ஒரு புதியத் தொடரைத் துவக்கி, தொடர்ந்து அது குறித்து தன் சிந்தனைகளை வழங்கிவரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வாரம்,  பிலிப்புவின் நற்செய்தி அறிவிப்பு குறித்து எடுத்துரைத்தார். முதலில், திருத்தூதர் பணிகள் நூலின் 8ம் பிரிவிலிருந்து ஒரு பகுதி வாசிக்கப்பட்டது. 

பிலிப்பு சமாரியா நகர் சென்று அங்குள்ள மக்களுக்கு மெசியாவைப்பற்றி அறிவித்தார். பிலிப்பு சொன்னவற்றைக் கேட்டும் அவர் செய்த அரும் அடையாளங்களைக் கண்டும் வந்த திரளான மக்கள் ஒரு மனத்தோடு அவருக்குச் செவிசாய்த்தனர். ஏனெனில் பலரைப் பிடித்திருந்த தீய ஆவிகள் அவர்களிடமிருந்து உரத்தக் குரலுடன் கூச்சலிட்டுக் கொண்டே வெளியேறின. முடக்குவாதமுற்றோர், கால் ஊனமுற்றோர் பலரும் குணம் பெற்றனர். இதனால் அந்நகரில் பெரும் மகிழ்ச்சி உண்டாயிற்று. (தி.ப. 8,5-8)

அதன்பின், தன் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்

.அன்பு சகோதரர், சகோதரிகளே, திருத்தூதர் பணிகள் நூல் குறித்த நம் தொடர் மறைக்கல்வி உரையில் இன்று, நற்செய்தி அறிவிப்பு பணியில் எவ்வாறு புதிய அத்தியாயம் துவங்கியது என்பது குறித்து நோக்குவோம். தூய ஆவியாரால் தூண்டப்பட்ட திருத்தொண்டர் பிலிப்பு, இறைவனுக்கு தன் இதயத்தைத் திறந்த ஒரு மனிதரைச் சந்திக்கிறார். இந்த வெளிநாட்டவர், அதாவது, எத்தியோப்பிய அரசியின் உயர் அதிகாரியான இவர், இறைவாக்கினர் ஏசாயாவின்  நூலிலிருந்து ஒரு பகுதியை வாசித்துக் கொண்டிருந்தார். ஆயினும், பிறரின் வழிகாட்டுதலின்றி அவரால் அப்பகுதியை முழுவதுமாகப் புரிந்துகொள்ள முடியவில்லை. பிலிப்புவோ, அவரிடம், பழைய ஏற்பாட்டின் இறைவாக்குகள் இயேசுவில் நிறைவைக் காண்பது குறித்து விளக்குகிறார். இதன் விளைவாக, அந்த எத்தியோப்பியர் இயேசு கிறிஸ்துவில் தன் நம்பிக்கையை வெளியிட்டு, திருமுழுக்கு வழங்கும்படி கேட்கிறார். திருமுழுக்குத் தண்ணீரிலிருந்து அவர் வெளியே வரும்போது, அவர் ஓர் அந்நியராக அல்ல, மாறாக, இயேசுவின் மறையுடலின் ஓர் அங்கத்தினராக வெளிவருகிறார். எத்தியோப்பிய அதிகாரிக்கும், பிலிப்புவுக்கும் இடையே இடம்பெற்ற இந்த சந்திப்பின் உரையாடல்கள், விவிலியத்தை, அதாவது இயேசுவை வாசிப்பதற்குரிய திறவுகோலை நமக்கு வெளிப்படுத்துகின்றன. நற்செய்தியின் மீட்பளிக்கும் வல்லமைக்குச் சாடசியாக விளங்கி, ஏனையோரையும் இயேசுவுக்குள் கொணரும் பிலிப்புவின் எடுத்துக்காட்டைப் பின்பற்ற அனைத்து திருமுழுக்குப் பெற்றோருக்கும் தேவையான பலத்தை தூய ஆவியார் வழங்க வேண்டும் என வேண்டுவோம்.

இவ்வாறு, இப்புதன் மறைக்கல்வி உரையை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்,   இந்திய தேசத்தந்தை மகாத்மா காந்தியின் பெயரால் திருப்பீட பல்சமய உரையாடல் அவை ஏற்பாடு செய்த கருத்தரங்கில் பங்குபெற்றோருக்கு தன் வாழ்த்துக்களை வெளியிட்டார். இப்புதனன்று திரு அவையில் சிறப்பிக்கப்பட்ட காவல் தூதர்களின் திருவிழாவையும் நினைவூட்டி, அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

02 October 2019, 12:00