அமேசான் மாமன்றத்தின் இறுதி ஏடு வழங்கப்பட்டது அமேசான் மாமன்றத்தின் இறுதி ஏடு வழங்கப்பட்டது 

அமேசான் மாமன்றத்தின் இறுதி ஏடு குறித்த வாக்கெடுப்பு

அக்டோபர் 26, சனிக்கிழமை மாலை 4.30 மணிக்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் பிரசன்னத்தில் ஆரம்பிக்கும் 16வது பொது அமர்வில், அமேசான் மாமன்றத்தின் இறுதி ஏடு பற்றிய வாக்கெடுப்பு நடைபெறுகின்றது

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

அமேசான் பகுதியை மையப்படுத்தி, அக்டோபர் 6ம் தேதி வத்திக்கானில் துவங்கிய, உலக ஆயர்கள் சிறப்பு மாமன்றத்தை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இஞ்ஞாயிறன்று திருப்பலி நிறைவேற்றி நிறைவு செய்கிறார்.

அக்டோபர் 27, இஞ்ஞாயிறு காலை பத்து மணிக்கு, வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்கா பேராலயத்தில், மாமன்றப் பிரதிநிதிகளுக்குத் திருப்பலி நிறைவேற்றி, மாமன்றத்தை அதிகாரப்பூர்வமாக நிறைவு செய்கிறார், திருத்தந்தை பிரான்சிஸ்.

மேலும், அக்டோபர் 25, இவ்வெள்ளி மாலையில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் பிரசன்னத்தில் துவங்கிய 15வது பொது அமர்வில், மாமன்றத்தின் இறுதி ஏடு பிரதிநிதிகளுக்கு வழங்கப்பட்டது. 182 பிரதிநிதிகள் கலந்துகொண்ட இந்த அமர்வில், இந்த மாமன்றத்தின் தீர்மானங்களை நிறைவேற்றுவதற்கென, 13 பேர் அடங்கிய குழு ஒன்றும் தேர்ந்தெடுக்கப்பட்டது.

இவர்களில் நால்வர் பிரேசில் நாட்டவர். பொலிவியா, கொலம்பியா, பெரு, என ஒவ்வொரு நாட்டையும் சேர்ந்த இருவர், மற்றும், பெரு, ஆன்டில்ஸ், வெனெசுவேலா, ஈக்குவதோர் என, ஒவ்வொரு நாட்டையும் சேர்ந்த ஒருவர் என தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்களுடன் மேலும் மூவரை, திருத்தந்தை நியமித்தார்.

16வது பொது அமர்வு

அக்டோபர் 26, இச்சனிக்கிழமை காலையில், இம்மாமன்றப் பிரதிநிதிகள், மாமன்றத்தின் இறுதி ஏடு பற்றி வாசித்து, மாலை 4.30 மணிக்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் பிரசன்னத்தில் ஆரம்பிக்கும் 16வது பொது அமர்வில், அதற்கு தங்களின் இசைவைத் தெரிவிக்கின்றனர்.

உலக ஆயர்கள் மாமன்ற மரபுப்படி, இந்த அமர்வின் இறுதியில், பிரதிநிதிகள் அனைவருக்கும், மாமன்றத்தின் சிறப்புப் பரிசாக, 2019ம் ஆண்டு பாப்பிறைப் பணியைக் குறிக்கும் பதக்கத்தை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்குகிறார். இந்த பதக்கத்தில் அமேசான் பகுதி சித்தரிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

26 October 2019, 15:24