அருளாளர் ஞோக்கி அறக்கட்டளையினரை சந்தித்த திருத்தந்தை அருளாளர் ஞோக்கி அறக்கட்டளையினரை சந்தித்த திருத்தந்தை 

அருளாளர் ஞோக்கி அறக்கட்டளையினரை சந்தித்த திருத்தந்தை

அருளாளர் ஞோக்கி அறக்கட்டளையைச் சேர்ந்தவர்கள், சமுதாயத்தில் நலிந்தோருக்கு, அருளாளரைப்போலவே, பணியாற்றி வருவதைக்குறித்து, திருத்தந்தை தன் பாராட்டுக்களை வெளியிட்டார்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

பேரார்வம் கொண்ட கல்வியாளராகவும், அருள்பணியாளராகவும் விளங்கிய, அருளாளர் தோன் கார்லோ ஞோக்கி (Blessed Don Carlo Gnocchi) அவர்கள், கிறிஸ்துவின் முகத்தை ஒவ்வொரு மனிதரின் உள்ளத்திலும் பதிக்க விழைந்தார் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தோன் கார்லோ ஞோக்கி அறக்கட்டளையைச் சேர்ந்தவர்களிடம் கூறினார்.

அருளாளர் தோன் கார்லோ ஞோக்கி அறக்கட்டளையைச் சேர்ந்தவர்களையும், அவர்களால் பராமரிக்கப்படுவோரையும், புனித ஆறாம் பவுல் அரங்கத்தில், அக்டோபர் 31, இவ்வியாழனன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் சந்தித்த வேளையில், இவ்வாறு கூறினார்.

இராணுவ ஆன்மீகப் பணியாளர் என்ற முறையில், இரண்டாம் உலகப்போரின் கொடுமைகளை நேரில் கண்ட அருளாளர் ஞோக்கி அவர்கள், போர்க்களத்தில் காயமுற்றோர் மற்றும் அந்தப் போரினால் அனாதையாக்கப்பட்ட குழந்தைகள் ஆகியோருக்கு பணியாற்றுவதில் தனிப்பட்ட அக்கறை கொண்டிருந்தார் என்பதை, திருத்தந்தை தன் உரையில் சிறப்பாகக் குறிப்பிட்டார்.

அருளாளர் ஞோக்கி அறக்கட்டளையைச் சேர்ந்தவர்கள், சமுதாயத்தில் நலிந்தோருக்கு, அவ்வருளாளரைப்போலவே, பணியாற்றி வருவதைக்குறித்து, திருத்தந்தை தன் பாராட்டுக்களை வெளியிட்டார்.

நோயாலும், வாழ்வின் இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டதாலும், வாழ்க்கையை ஒரு போர்க்களமாகக் காண்போருக்கு உறுதுணையாக விளங்கும் இவ்வறக்கட்டளையின் உறுப்பினர்கள், அக்கறையற்ற இன்றைய உலகினருக்கு ஒரு மாற்று அடையாளமாகத் திகழ்கின்றனர் என்று எடுத்துரைத்தார், திருத்தந்தை.

துன்புறுவோரை வரவேற்கவும், பாதுகாக்கவும், அவர்களுக்கு நம்பிக்கையூட்டவும் இயலாத ஒரு சமுதாயம், தன் மனிதாபிமானத்தையும், கருணையையும் இழந்துவிட்ட சமுதாயம் என்று சுட்டிக்காட்டியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அருளாளர் ஞோக்கி அறக்கட்டளை, சமுதாயத்தில் மிகவும் நலிவுற்றோருடன் தன்னையே அடையாளப்படுத்திக் கொள்வதற்கு தன் பாராட்டுக்களைத் தெரிவித்தார்.

துன்புறுவோருடன் பயணம் செய்யும் அருளாளர் ஞோக்கி அறக்கட்டளையின் உறுப்பினர்கள் அனைவரும், நற்செய்தியைப் பரப்பும் தூதர்கள் என்று கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இறைவனின் கருணைக்கு சாட்சிகளாக விளங்கும் இவ்வறைக்கட்டளையின் உறுப்பினர்கள் அனைவரையும் தான் ஆசீர்வதிப்பதாகக் கூறி, தன் உரையை நிறைவு செய்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

31 October 2019, 14:03