தேடுதல்

அருளாளர் Victoire Rasoamanarivo கல்லறையில் செபம் அருளாளர் Victoire Rasoamanarivo கல்லறையில் செபம் 

அருளாளர் Victoire Rasoamanarivo கல்லறையில் செபம்

மடகாஸ்கரில் 1848ம் ஆண்டு பிறந்த அருளாளர் Victoire Rasoamanarivo அவர்கள், ஏழைகள் மற்றும், தொழுநோயாளிகளுக்குப் பணியாற்றுவதற்குத் தன்னை அர்ப்பணித்திருந்தார்

மேரி தெரேசா - வத்திக்கான்

அருளாளர் Victoire Rasoamanarivo (1848–ஆக.21,1894) அவர்கள், 1848ம் ஆண்டு, மடகாஸ்கர் நாட்டின் தலைநகரான Antananarivoவில், மிகவும் செல்வாக்குமிக்க குடும்பத்தில் பிறந்தார். இவருக்கு, அவரின் பூர்வீக இன மூதாதையரின் மரபில் கல்வி வழங்கப்பட்டது. ஆயினும், 1861ம் ஆண்டில், சில பிரெஞ்ச் இயேசு சபை மறைப்பணியாளர்கள், மடகாஸ்கர் நாட்டிற்கு வந்ததன் பயனாக, இளம்பெண் விக்டுவா, கத்தோலிக்கப் பள்ளியில் சேர்ந்தார். 1863ம் ஆண்டில் திருமுழுக்குப் பெற்றார். இதனால் கோபமடைந்த பெற்றோர், இவரை பிரிந்த கிறிஸ்தவ சபை பள்ளியில் சேர்த்தனர். அதற்கு அவர் மறுப்பு தெரிவித்ததால், புறக்கணித்துவிடுவதாக பெற்றோர் இவரை அச்சுறுத்தினர்.     

கடினமான திருமண வாழ்வு

விக்டுவா, துறவு வாழ்வில் ஈர்க்கப்பட்டிருந்தாலும், அவரது பெற்றோர், அவரை, அவரது உறவினரான ஓர் இராணுவ உயர் அதிகாரிக்குத் திருமணம் செய்து வைத்தனர். அந்த அதிகாரி வன்முறையாளர் மட்டுமல்ல, ஒரு குடிகாரரும்கூட. அவரது வாழ்வும் தாறுமாறாக இருந்தது. விக்டுவாவின் நெருங்கிய நண்பர்கள், திருமணத்தை முறிக்கச்சொல்லி தொடர்ந்து வலியுறுத்திவந்தபோதிலும், அவர், திருமண வாழ்வுக்குப் பிரமாணிக்கமாக, கணவருடன் சேர்ந்தே இருந்தார். விக்டுவா, தன் கணவருக்காகச் செபித்தார்.

பிறரன்பு

1883ம் ஆண்டில், பிரெஞ்ச்காரர்களுக்கும், மலகாசி மக்களுக்கும் இடையே மோதல் தொடங்கியது. கத்தோலிக்க மறைப்பணியாளர்கள் நாட்டைவிட்டு வெளியேற்றப்பட்டனர். கத்தோலிக்கர், தேசதுரோக குற்றம் சுமத்தப்பட்டனர். எனினும், விக்டுவா, தொடர்ந்து கத்தோலிக்க விசுவாசத்தில் உறுதியாயிருந்தார். செபத்தில் நிலைத்திருந்த அவர், மரியாவின் ஆன்மீகத்தை மையப்படுத்திய, கத்தோலிக்க கழகத்தை முன்னின்று நடத்தினார். 1886ம் ஆண்டில், மறைப்பணியாளர்கள் மடகாஸ்கர் திரும்பினர். விக்டுவா, ஏழைகள், தொழுநோயாளர்கள், மற்றும், ஏனைய நோயாளிகளுக்குப் பணியாற்றுவதற்குத் தன்னை அர்ப்பணித்திருந்தார். இவர்களின் தேவைகளுக்கு உதவிய நேரம் தவிர, மற்ற நேரங்களில் செபத்தில் செலவிட்டார். 1888ம் ஆண்டில் அவரது கணவர் இறந்தார். இறக்குமுன், தனது மனைவியிடம் அவர் மன்னிப்பு கேட்டார். கணவரின் மரணத்திற்குப் பின்னும் அப்பணிகளைத் தொடர்ந்தார் விக்டுவா. இவர், 1894ம் ஆண்டு ஆகஸ்ட் 21ம் தேதி, தனது 46வது வயதில் உயிரிழந்தார். இவரின் பரிந்துரையால் ஒரு புதுமை நடந்தது. 1989ம் ஆண்டில் இவர் அருளாளர் என அறிவிக்கப்பட்டார்.  

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

08 September 2019, 14:00