Soamandrakizay மைதானத்தில் இளையோர் பகிர்வு Soamandrakizay மைதானத்தில் இளையோர் பகிர்வு 

Soamandrakizay மைதானத்தில் இளையோர் சந்திப்பு

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருத்தூதுப் பயணம் மேற்கொண்டுவரும் மடகாஸ்கர் தீவு நாடு, எட்டு கோடியே எண்பது இலட்சம் ஆண்டுகளுக்குமுன்பு, இந்திய தீபகற்பத்திலிருந்து பிரிந்தது என, வரலாற்றுக் குறிப்புகள் கூறுகின்றன

மேரி தெரேசா - வத்திக்கான்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தனது 31வது வெளிநாட்டுத் திருத்தூதுப் பயணத்தில், இரண்டாவது நாடாக, செப்டம்பர் 6, இவ்வெள்ளி மாலையில் மடகாஸ்கர் நாட்டுத் தலைநகரான Antananarivo சென்றார்.

செப்டம்பர் 7, இச்சனிக்கிழமை காலையில், Antananarivoவில் அரசுத்தலைவர், முக்கிய அதிகாரிகள், மற்றும், ஆழ்நிலை தியான அருள்சகோதரிகளைச் சந்தித்து உரைகள் வழங்கினார். மாலையில், மடகாஸ்கர் ஆயர்களைச் சந்தித்து உரையாற்றினார். பின்னர் உள்ளூர் நேரம் மாலை 5.10 மணிக்கு, அதாவது, இந்திய இலங்கை நேரம், இச்சனிக்கிழமை இரவு 7.40 மணிக்கு, அந்நகரின் பேராலயம் சென்று, அங்கிருக்கும், அருளாளர் Victoire Rasoamanarivo கல்லறையில் செபித்தார் திருத்தந்தை.

உள்ளூர் நேரம் மாலை ஆறு மணிக்கு, ஆந்தனனரிவோ புறநகரிலுள்ள Soamandrakizay மறைமாவட்ட மைதானத்தில், மடகாஸ்கர் நாட்டு இளையோரைச் சந்திக்கச் சென்றார், திருத்தந்தை பிரான்சிஸ். இந்த சந்திப்பு, திருவிழிப்பு நிகழ்வு என அறிவிக்கப்பட்டிருந்தாலும், ஏறத்தாழ இரண்டு இலட்சம் இளையோர் கூடியிருந்த அந்த நிகழ்வு பெரிய திருவிழாவாகவே காணப்பட்டது. முதலில் நடனம், பின்னர், 27 வயது நிரம்பிய Rova Sitraka Ranarison என்ற இளைஞரின் பகிர்வு, பின்னர் பாடல், பின்னர் 21 வயது நிரம்பிய Vavy Elyssa என்ற இளம்பெண்ணின் பகிர்வு, பின்னர் பாடல் என இந்த இளையோர் நிகழ்வு துவங்கி நடைபெற்றது. இவ்விரு இளையோரும், தங்களின் சிறைப்பணி மற்றும், மறைப்பணி அனுபவங்களை திருத்தந்தையிடம் விளக்கினர். பின்னர் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், இந்த இரு இளையோரின் பகிர்வுகளை மையப்படுத்தி, மடகாஸ்கர் இளையோருக்குத் தான் சொல்ல விரும்பியதை எடுத்துரைத்தார். திருத்தந்தையின் உரைக்குப் பின்னர் நடனம் இடம்பெற்றது. வருங்கால மடகாஸ்கரைக் கட்டியெழுப்ப இளையோர் அழைக்கப்பட்டுள்ளனர் என்று அவர்களை ஊக்கப்படுத்தி, ஆசீர்வதித்து இந்நிகழ்வை நிறைவு செய்தார், திருத்தந்தை பிரான்சிஸ். Antananarivo வில், முதல் நாள் நிகழ்வுகள் இத்துடன் நிறைவடைந்தன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

08 September 2019, 14:04