தேடுதல்

போர்ட் லூயிஸ் அரசியாம் அன்னை மரியா நினைவிடத்தில் திருப்பலி போர்ட் லூயிஸ் அரசியாம் அன்னை மரியா நினைவிடத்தில் திருப்பலி 

போர்ட் லூயிஸ் அரசியாம் அன்னை மரியா நினைவிடத்தில் திருப்பலி

எனக்குக் கடிதம் எழுதியுள்ள கைதிகளுக்கு, எனது இனியநல் வாழ்த்துக்களையும், ஆசீரையும் அனுப்புகிறேன். மொரீஷியஸ் நாட்டினர் எல்லாருக்கும் நெஞ்சார்ந்த நன்றி - திருத்தந்தை

மேரி தெரேசா - வத்திக்கான்

செப்டம்பர் 09, இத்திங்கள் உள்ளூர் நேரம் பகல் 11.45 மணிக்கு, போர்ட் லூயிஸ் நகர், அரசியாம் அன்னை மரியா நினைவிடத்தில் திருத்தந்தை திறந்த காரில் வந்தபோது, ஏறத்தாழ ஒரு இலட்சம் மக்களும், மஞ்சளும், வெண்மையும் கொண்ட வத்திக்கான் கொடி நிற ஆடைகளை அணிந்து, பெரிய பெரிய குருத்தோலைகளை அசைத்துக்கொண்டிருந்தனர். இதைக் கண்டபோது, குருத்து ஞாயிறோ என்ற எண்ணத் தோன்றியது. முதல் உலகப் போரில் மொரீஷியஸ் காப்பாற்றப்பட்டதற்கு நன்றியாக, 1940ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி, ஒரு குன்றின் மீது இந்த நினைவிடம் எழுப்பப்பட்டது. இவ்விடத்தின் மேற்கூரையில், உலக உருண்டைமீது அன்னை மரியா நிற்பது போன்று, 3 மீட்டரில் பளிங்கு அன்னை மரியா திருவுருவம் உள்ளது. ஏறத்தாழ எண்பதாயிரம் பேர் அமரக்கூடிய பெரிய வளாகமும், இவ்விடத்திற்கு முன்புறமுள்ளது. இந்த நினைவிடத்தின் வளாகத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் திருப்பலி நிறைவேற்றினார். அதில் அவர் மறையுரையும் ஆற்றினார். மொரீஷியஸ் நாட்டு திருத்தூதர் என அழைக்கப்படும் அருளாளர் ஜாக் தெசியெ லவல் அவர்களின் புனிதப்பொருளும், திருப்பலி மேடையில் வைக்கப்பட்டிருந்தது. திருப்பலியின் இறுதியில், கர்தினால் மௌரிஸ் பியட் அவர்கள், திருத்தந்தைக்கு நன்றியுரையாற்றினார். திருத்தந்தையும், மொரீஷியஸ் திருஅவைக்கு, ஓர் அழகான திருப்பலி பாத்திரத்தை அன்பளிப்பாக அளித்தார். “பிரான்செஸ்கோ ஒன்பது” என எழுதப்பட்டிருந்த கால்பந்தாட்ட பனியன் ஒன்றை, சிறுமி ஒருவர் திருத்தந்தையிடம் கொடுத்து மகிழ்ந்தார். அச்சிறுமியும் அதையே அணிந்திருந்தார்.

மேலும், திருப்பலியின் இறுதியில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், நன்றியுரையாற்றினார்.

திருத்தந்தையின் நன்றியுரை

மொரீஷியஸ் அரசுத்தலைவர், பிரதமர், ஏனைய அரசு அதிகாரிகள், ஆயர்கள், அருள்பணியாளர்கள், துறவியர், மற்றும், தன்னார்வலர்கள் எல்லாருக்கும் நெஞ்சார்ந்த நன்றி. மேலும், சிறையில், ஆல்ஃபா திட்டத்திலுள்ள கைதிகளையும் நினைக்கின்றேன். எனக்குக் கடிதம் எழுதியுள்ள கைதிகளுக்கு, எனது இனியநல் வாழ்த்துக்களையும், ஆசீரையும் அனுப்புகிறேன். இங்கு வந்திருக்கும் அனைத்து இறைமக்களுக்கும், குறிப்பாக, Seychelles, Réunion, Comoros, Chagos, Agaléga, Rodrigues மற்றும், Mauritius தீவுகளின் மக்களுக்கும், எனது ஆழ்ந்த நன்றியைத் தெரிவிக்கிறேன். உங்கள் எல்லாரின் நியாயமான ஆசைகள் நிறைவேற, உங்களுக்குத் தேவையான அனைத்து ஞானத்தையும், சக்தியையும் இறைவன் தொடர்ந்து வழங்குவாராக. எனக்காகச் செபிக்குமாறும் கேட்கிறேன். நன்றி.

இத்திருப்பலியில் இவ்வாறு எல்லாருக்கும் நன்றி சொல்லி, போர்ட் லூயிஸ் ஆயர் இல்லம் சென்று, ஆயர்களுடன் மதிய உணவருந்தி சிறிதுநேரம் ஓய்வெடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ். மொரீஷியஸ் நாட்டில் இரு மறைமாவட்டங்களில், 93 அருள்பணியாளர்கள், 186 அருள்சகோதரிகள் மற்றும், 1,335 வேதியர்கள் இறையாட்சிப் பணியாற்றுகின்றனர். மேலும், நல்ல கிறிஸ்தவர்களாக வாழ்வதற்கு, இயேசு மலைப்பொழிவில், பேறுபெற்றவர்கள் என்பதில் கூறியவற்றை, ஒவ்வொருவரும் அவரவர்க்குரிய வழியில் கடைப்பித்தாலே போதுமானது என்று, தன் டுவிட்டர் செய்தியில், ஹாஸ்டாக் (#ApostolicJourney #Mauritius) குடன் பதிவு செய்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

09 September 2019, 16:05