பரகுவாய் திருப்பயணத்தின்போது திருத்தந்தை (கோப்பு படம்) பரகுவாய் திருப்பயணத்தின்போது திருத்தந்தை (கோப்பு படம்) 

மொரீஷியஸ் மக்களுக்கு திருத்தந்தையின் காணொளி செய்தி

கத்தோலிக்க திருஅவை அனைத்து மொழிகளையும் பேசினாலும், நற்செய்தியின் மொழி அன்பு என்பது அனைவருக்கும் தெரியும்

விக்டர்தாஸ் – வத்திக்கான் செய்திகள்

மொரீஷியஸ் திருத்தூதுப் பயணத்திற்குமுன் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அந்நாட்டு மக்களுக்கு, செப்டம்பர் 03, இச்செவ்வாயன்று, காணொளிச் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்

அழகிய தீவு மொரீஷியஸ்க்கு திருத்தூதுப் பயணம் செல்வதற்கான நேரம் அருகில் உள்ள நிலையில், உரோம் நகரில் இருந்து மொரீஷியஸ் மக்களுக்கு, பாசத்துடன் வாழ்த்துக்களை, காணொளி வழியாகத் தெரிவித்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்த சந்திப்புக்கு சில காலமாக தயாராகிக் கொண்டிருக்கும் மொரிஷியஸ் மக்களுக்கு நன்றியையும் தெரிவித்தார்.

வெவ்வேறு இனக்குழுக்களின் சந்திப்பால் உருவான, மற்றும், பல்வேறு கலாச்சார, மத மரபுகளின் செழுமையை அனுபவித்து கொண்டிருக்கும் மக்களிடையே நற்செய்தியை அறிவிப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது என, அச்செய்தியில் கூறும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கத்தோலிக்க திருஅவை, ஆரம்பத்தில் இருந்தே, எல்லா மக்களுக்கும் அனுப்பப்பட்டு, உலகின் அனைத்து மொழிகளையும் பேசினாலும், நற்செய்தியின் மொழி அன்பு என்பது உங்களுக்குத் தெரியும் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

அன்னை மரியாவின் பரிந்துரையின் வழியாக, தூய ஆவியாரின் சக்தியுடன் அனைவரும் நற்செய்தியைப் புரிந்துகொண்டு, அதை வரவேற்கும் விதத்தில் மக்களுக்கு நற்செய்தியை அறிவிக்க இறைவன் தனக்கு உதவுவார் என்ற நம்பிக்கையையும் தெரிவித்துள்ளார் திருத்தந்தை.

இந்த நாட்களில் மொரீஷியஸ் மக்களை மனதில் சுமந்து, அவர்களுக்காகச் செபிக்கும் அதேவேளையில், தன் திருப்பயணத்தின்போது தனக்காக அதிகம் அதிகமாக செபிக்கவும் வேண்டி, தன் காணொளிச் செய்தியை நிறைவுசெய்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

03 September 2019, 15:21