தேடுதல்

Vatican News
திருப்பயணத்தை நிறைவு செய்து விடைபெற்ற திருத்தந்தை 100919 திருப்பயணத்தை நிறைவு செய்து விடைபெற்ற திருத்தந்தை 100919  (Vatican Media)

31வது வெளிநாட்டுத் திருத்தூதுப் பயணத்தின் நிறைவு

மடகாஸ்கர் அரசுத்தலைவர், அரசியல் அதிகாரிகள், ஆயர்கள் மற்றும் பொதுநிலை விசுவாசிகள் பலர், Antananarivo விமான நிலையத்தில் திருத்தந்தைக்குப் பிரியாவிடை கொடுத்து வழியனுப்பி வைத்தனர்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

மொசாம்பிக், மடகாஸ்கர் மற்றும், மொரீஷியஸ் நாடுகளில், தனது 31வது வெளிநாட்டுத் திருத்தூதுப் பயணத்தை நிறைவுசெய்து, மடகாஸ்கர் நாட்டுத் தலைநகர் Antananarivoவிலிருந்து,  செப்டம்பர் 10, இச்செவ்வாய் உள்ளூர் நேரம் காலை 9.20 மணிக்கு, உரோம் நகருக்குப் புறப்பட்டார், திருத்தந்தை பிரான்சிஸ்.

மடகாஸ்கர் அரசுத்தலைவர், அரசியல் அதிகாரிகள், ஆயர்கள் மற்றும் பொதுநிலை விசுவாசிகள் பலர், விமான நிலையத்தில் திருத்தந்தைக்குப் பிரியாவிடை கொடுத்து வழியனுப்பி வைத்தனர். இராணுவ அணிவகுப்பு மரியாதையும் திருத்தந்தைக்கு வழங்கப்பட்டது.

A340 மடகாஸ்கர் நாட்டு விமானத்தில் ஏறிய திருத்தந்தை, அந்நாட்டு அரசுத்தலைவருக்கு நன்றியும், செபமும், வாழ்த்தும் நிறைந்த தந்திச் செய்தியையும் அனுப்பினார்.

10 மணி 40 நிமிடங்கள் கொண்ட இந்த விமானப் பயணத்தில், டான்சானியா, கென்யா, தென் சூடான், எத்தியோப்பியா, சூடான், எகிப்து, கிரீஸ், இத்தாலி ஆகிய நாடுகளின் அரசுத்தலைவர்களுக்கு, செபமும், வாழ்த்தும் கலந்த தந்திச் செய்திகளையும் திருத்தந்தை அனுப்பினார்.

ஆப்ரிக்காவின் தெற்கில் அமைந்துள்ள, மொசாம்பிக் நாட்டிற்குத் தேவைப்படும் நீடித்த நிலைத்த அமைதிக்கும், ஒப்புரவுக்கும் அழைப்பு விடுத்த திருத்தந்தை, வருங்காலத்தை கட்டியெழுப்புவதில் நம்பிக்கையை மட்டும் இழக்க வேண்டாமெனக் கேட்டுக்கொண்டார்.

மூன்றாவது நாடாக, திருத்தூதுப் பயண நிகழ்வுகளை நிறைவேற்றிய மொரீஷியஸ் நாட்டில், பல்வேறு இன, மத, மற்றும் கலாச்சாரங்களைக் கொண்ட மக்கள் நல்லிணக்கத்துடன் வாழ்வதைப் பாராட்டிய திருத்தந்தை, அந்நாட்டுத் திருஅவையில் புதிய வாழ்வைக் கொணருமாறு கத்தோலிக்கரிடம் கூறினார். போர்ட் லூயிஸ் நகரில், அரசுத்தலைவர் மாளிகையில், அரசுத்தலைவர், பிரதமர், அரசு மற்றும், தூதரக அதிகாரிகள், பல்சமயப் பிரதிநிதிகள் போன்றோரைச் சந்தித்தபின், பல்வேறு மரக்கன்றுகளை ஆசீர்வதித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மேலும், செப்டம்பர் 9, இத்திங்கள் மாலையில், மொரீஷியஸ் நாட்டிற்குப் பிரியாவிடை சொல்லி, மடகாஸ்கர் நாட்டிற்குப் புறப்பட்டவேளையில், ஹாஸ்டாக் (#ApostolicJourney) குடன் டுவிட்டர் செய்தி ஒன்றை வெளியிட்டார், திருத்தந்தை பிரான்சிஸ். அதில், “உங்களின் இனிய வரவேற்பிற்கு நன்றி. கடவுள் உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. அவரின் அன்பும், இரக்கமும், உங்களோடு எப்போதும் உடனிருந்து, பாதுகாப்பதாக” என்ற சொற்களைப் பதிவு செய்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

10 September 2019, 14:24