தேடுதல்

Vatican News
புதன் பொது மறைக்கல்வியுரை 250919 புதன் பொது மறைக்கல்வியுரை 250919  (Vatican Media)

அன்பின் சக்தியால் வன்முறைக்கு எதிராகப் போராட முடியும்

மறைசாட்சிகள், அன்பின் இதமான சக்திக்கும், தூய ஆவியாரின் குரலுக்கும் விசுவாசமாக இருந்தவர்கள். இவர்கள், தம் சகோதரர் சகோதரிகளுக்கு, ஒவ்வொரு நாள் வாழ்விலும், சுதந்திரமாக, கடவுளை அன்புகூர்வதற்கு உதவியவர்கள்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

மறைசாட்சிகளின் வீரத்துவ வாழ்வு, ஒவ்வொரு நாளும் நற்செய்தியின்படி வாழ்வதற்கு எவ்வாறு உதவுகின்றது என்பது பற்றி சிந்திக்குமாறு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், செப்டம்பர் 25, இப்புதன் பொது மறைக்கல்வியுரையை மையப்படுத்தி, ஹாஸ்டாக் (#GeneralAudience) குடன், வெளியிட்ட தன் டுவிட்டர் செய்தியில் கேட்டுக்கொண்டுள்ளார்.

திருத்தொண்டரும், மறைசாட்சியுமான புனித ஸ்தேவான் அவர்களின் மறைசாட்சியம் பற்றிக் கூறும், திருத்தூதர் பணிகள் நூல் பகுதியை (6,8-10.15) மையப்படுத்தி, மறைக்கல்வியுரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், “ஒவ்வொரு நாளும் நற்செய்திக்கு விசுவாசமாக வாழ்வதைக் கற்றுக்கொள்வதற்கு, இக்கால மற்றும்,  வருங்கால மறைசாட்சிகள் பற்றித் தியானிப்பதற்கு ஆண்டவரிடம் மன்றாடுவோம்” என்ற சொற்களை, தன் டுவிட்டர் செய்தியில் பதிவு செய்துள்ளார்.

மேலும், இப்புதன் காலையில், வத்திக்கான் புனித பேதுரு வளாகத்தில் கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான திருப்பயணிகளுக்கு, பல மொழிகளில் மறைக்கல்வி வழங்கி, வாழ்த்திய திருத்தந்தை, அரபு மொழி பேசும் விசுவாசிகளிடம், குறிப்பாக, மத்திய கிழக்குப் பகுதியின் மாணவப் பிரதிநிதிகளிடம், நம் ஒவ்வொரு நாள் வாழ்விலும், சுதந்திரமாக, கடவுளையும், நம் சகோதரர் சகோதரிகளையும் அன்புகூரும் வழிகளைத் தேடுவதற்கு மறைசாட்சிகள் உதவுகின்றனர் என்று கூறினார்.

அன்பு, தாழ்ச்சி ஆகிய சக்திகளுடன், அட்டூழியங்கள், வன்முறை, போர் ஆகியவற்றுக்கெதிராய்ப் போராடவும், பொறுமையுடன் அமைதியை எட்டவும் மறைசாட்சிகள் நமக்குக் கற்றுத் தருகின்றனர் எனவும் கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

25 September 2019, 16:22