தேடுதல்

இந்திய ஆயர்களின் முதல் குழுவுடன் திருத்தந்தை இந்திய ஆயர்களின் முதல் குழுவுடன் திருத்தந்தை 

இந்தியாவின் 38 ஆயர்கள் திருத்தந்தையை சந்தித்தனர்

இந்தியாவின் இலத்தீன் வழிபாட்டுமுறை ஆயர்கள், மூன்று குழுக்களாக, திருத்தந்தையைச் சந்திக்கின்றனர். முதல் குழுவினரின் சந்திப்பு, இவ்வெள்ளியன்று இடம்பெற்றது

மேரி தெரேசா– வத்திக்கான்

அத் லிமினா நிகழ்வையொட்டி, செப்டம்பர் 13, இவ்வெள்ளி காலை 11 மணியளிவில், இந்தியாவின் 38 ஆயர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை திருப்பீடத்தில் சந்தித்து கலந்துரையாடினர்.

ஆந்திரா, ஆக்ரா, போபால், கட்டக்-புவனேஸ்வர், பாட்னா, ரெய்ப்பூர், இராஞ்சி ஆகிய ஆறு, இலத்தீன் வழிபாட்டுமுறை திருஅவை ஆட்சிப்பீடங்களைச் சேர்ந்த 38 ஆயர்கள் திருத்தந்தையைத் திருப்பீடத்தில் சந்தித்தனர்.

இந்த ஆயர்கள், பீஹார், சட்டீஸ்கர், ஜார்க்கண்ட், ஒடிசா, மத்திய பிரதேசம், இராஜஸ்தான், உத்தர பிரதேசம், உத்தராகண்ட் ஆகிய மாநிலங்கள் மற்றும், அந்தமான் நிகோபார் யூனியன் பகுதியில் இறையாட்சிப் பணியாற்றுகின்றவர்கள்.

இந்தியாவின் இலத்தீன் வழிபாட்டுமுறை ஆயர்கள், மூன்று குழுக்களாக, திருத்தந்தையைச் சந்திக்கின்றனர். முதல் குழுவினரின் சந்திப்பு இவ்வெள்ளியன்று இடம்பெற்றது. மேலும், இரு குழுவினர், செப்டம்பர் 17, 26, ஆகிய தேதிகளிலும், அக்டோபர் 3ம் தேதி சீரோ மலபார் வழிபாட்டுமுறை ஆயர்களும் திருத்தந்தையைத் திருப்பீடத்தில் சந்திப்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

திருத்தந்தையின் டுவிட்டர்

மேலும், இயேசுவின் நட்புறவில் வளர விரும்பும் சீடர்கள் எத்தகைய மனநிலையைக் கொண்டிருக்க வேண்டும் என்பது பற்றி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், செப்டம்பர் 13, இவ்வெள்ளியன்று, தன் டுவிட்டர் செய்தியில் வெளியிட்டிருந்தார்.

“இயேசுவின் சீடர்கள் அவரின் நட்புறவில் வளர விரும்பினால், அவர்கள் புகார் சொல்லாமல், தங்களின் அகவாழ்வை நோக்க வேண்டும். ஆண்டவர், தங்களுக்கு ஆதரவாக இருப்பார் மற்றும், உடன்வருவார் என்ற உறுதியில், அவர்கள் செயல்பட வேண்டும் மற்றும், தங்களையே அர்ப்பணிக்க வேண்டும்” என்ற சொற்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டர் செய்தியில் இவ்வெள்ளியன்று இடம்பெற்றிருந்தன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

13 September 2019, 15:17