தேடுதல்

Vatican News
Community Care நடத்திய கருத்தரங்கில் கலந்துகொண்டவர்கள் Community Care நடத்திய கருத்தரங்கில் கலந்துகொண்டவர்கள்  (ANSA)

நலவாழ்வைப் பேணுதல், உலகளாவிய மனித உரிமை

நலவாழ்வு பிரச்சனைகளை எதிர்கொள்ளும் வறியோர் மற்றும், சமுதாயத்தில் கடைநிலையில் உள்ளவர்களுக்கு, SOMOS குழுமத்தின் ஏறத்தாழ 2500 மருத்துவர்கள் இலவச சிகிச்சை அளித்து வருகின்றனர்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

இக்காலத்தில், மனிதரின் நலவாழ்வைப் பேணுதல், உலகளாவிய மனித உரிமையாகவும், ஒருங்கிணைந்த மனித முன்னேற்றத்திற்கு இன்றியமையாத கூறாகவும் அங்கீகரிக்கப்பட்டிருப்பினும், இந்த உரிமை, உலக அளவில், சிலருக்கே உறுதியளிக்கப்படுகிறது மற்றும் பலர், இதிலிருந்து புறக்கணிக்கப்படுகின்றனர் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்,  இவ்வெள்ளியன்று கூறினார்.

அமெரிக்க ஐக்கிய நாட்டின் நியு யார்க்கை மையமாகக் கொண்ட, “SOMOS – Community Care” எனப்படும் புலம்பெயர்ந்தோர்க்கு உதவும் அமைப்பு, “புலம்பெயர்ந்த குடும்பங்களும், அவர்களின் நலவாழ்வுத் தேவைகளும்” என்ற தலைப்பில் நடத்திய கருத்தரங்கில் கலந்துகொண்ட ஏறத்தாழ 650 உறுப்பினர்களை, செப்டம்பர் 20, இவ்வெள்ளியன்று திருப்பீடத்தில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்,  இவ்வாறு கூறினார்.

இக்கருத்தரங்கின் தலைப்பை மையப்படுத்தி தன் எண்ணங்களைப் பகிர்ந்துகொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை, பல நேரங்களில், மனிதரை மையப்படுத்தாமல், தொழில்நுட்பத்தால் ஆதிக்கம் செலுத்தப்படுகின்றது, இறுதியில், நோயாளர் பராமரிப்பு என்பதன் ஆழமான அர்த்தத்தையே அது திசை திருப்புகின்றது என்றும் கூறினார்.

அனைத்து மருத்துவச் செயல்பாடுகளும், மனிதரின் உடல்நலத்தைக் குணப்படுத்துவதாய் இல்லாதிருப்பினும், உள்ளார்ந்த அன்போடு பராமரிக்கப்படுகையில், அது நோயாளிகளின்  வாழ்வுக்கு நன்மைகளைக் கொணரும் என்றும் திருத்தந்தை கூறினார்.

SOMOS குழுமத்தினர், சமுதாயத்தின் விளிம்புநிலையில் உள்ளவர்களுக்கு, நியு யார்க் நகரில் பல ஆண்டுகளாக ஆற்றிவரும் நற்பணிகளைப் பாராட்டி அவர்களை ஊக்குவித்து, தனது நன்றியையும் தெரிவித்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

20 September 2019, 15:36