இத்தாலிய புனித செசிலீயா கழகத்தின் இசைப் பள்ளி இத்தாலிய புனித செசிலீயா கழகத்தின் இசைப் பள்ளி 

திருவழிபாடு, முதல் மறைக்கல்வி ஆசிரியர்

இக்கால திருஇசை அமைப்பாளர்கள், கடந்தகால இசை மரபை மறக்காமல், புதிய இசைகளோடு அதைப் புதுப்பித்து அதிகரிக்கவேண்டும் என, முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார் - திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

திருவழிபாடுகளில் இறைமக்கள் அனைவரும் உள்ளார்ந்த உணர்வோடு, உயர்த்துடிப்புடன் பாடுவதற்கு, பாடகர் குழு உதவ வேண்டும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இத்தாலிய செசிலீயா பாடகர் கழகத்தினரிடம் கேட்டுக்கொண்டார்.

இத்தாலிய புனித செசிலீயா கழகத்தின் இசைப் பள்ளியின் ஏறத்தாழ மூவாயிரம் பேரை, செப்டம்பர் 28, இச்சனிக்கிழமை நண்பகலில், புனித திருத்தந்தை ஆறாம் பவுல் அரங்கத்தில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கடந்த 140 ஆண்டுகளாக, இக்கழகம், திருஅவைக்கு ஆர்வத்துடன் பணியாற்றி வருவதைப்  பாராட்டினார்.

திருவழிபாடுகளில் இறைமக்கள் அனைவரோடும் நெருக்கமாக இருப்பது முக்கியமானது என்றும், புதிய மெல்லிசைகளை உருவாக்குவது, பங்குத்தள பாடகர் குழுக்கள், திருஇசை பள்ளிகள், இளையோர், குருத்துவ மற்றும், துறவற பயிற்சி மையங்களில் பாடுவதை ஊக்குவிப்பது போன்ற பல்வேறு பணிகளை இந்தக் கழகம் ஆற்றி வருவதையும் குறிப்பிட்டார்.

ஆலயத்தில் பாடுதல், இசைக்கருவிகளை மீட்டல், மக்களைப் பாடுவதற்கு ஊக்குவித்தல் போன்றவை, இறைவனைப் புகழும் மிக அழகான காரியங்களாக உள்ளன, இசையின் கலையை வெளிப்படுத்துதல் மற்றும், இறைப் பேருண்மைகளில் பங்குபெற உதவுதல், கடவுளிடமிருந்து பெறும் கொடையாகும் என்றும் திருத்தந்தை கூறினார்.

மறைக்கல்வி ஆசிரியர்

திருவழிபாடு, முதல் மறைக்கல்வி ஆசிரியர் எனவும், திருவழிபாட்டில், கிரகோரியன் இசை, மரபு இசை மற்றும், தற்கால இசை போன்றவற்றை, கிறிஸ்தவ வரலாற்றில் இணைக்கும் பணியை திருஇசை கொண்டிருக்கின்றது எனவும், திருஇசை, எல்லா தரப்பினருக்கும் நற்செய்தி அறிவிக்கும் வழியைக் குறித்து நிற்கின்றது எனவும்,   திருத்தந்தை கூறினார். 

அது மட்டுமல்ல, திருஇசையும், பொதுவாகவே இசையும், நாடு, இனம், நிறம் போன்றவற்றுக்கு எல்லைகளைக் கொண்டிருப்பதில்லை, இது மொழிகளையும் கடந்து எல்லா மக்களையும் ஈடுபடுத்துகின்றது மற்றும், ஒன்றிணைக்கின்றது என்றும் கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சிலவேளைகளில், அருகில் இருக்கவில்லை என உணரும் நம் சகோதரர் சகோதரிகளையும்கூட, திருஇசை நெருக்கத்தில் கொணர்கின்றது என்றும் கூறினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

28 September 2019, 14:39