தேடுதல்

புதிய ஆயர்களுக்கென நடைபெற்ற கருத்தரங்கில் கலந்துகொண்டவர்கள் சந்திப்பு புதிய ஆயர்களுக்கென நடைபெற்ற கருத்தரங்கில் கலந்துகொண்டவர்கள் சந்திப்பு 

ஆயர்களிடம்: கடவுளுக்கும், மக்களுக்கும் நெருக்கமாக இருங்கள்

ஆயரின் தனித்துவமும், பணியும் என்ற தலைப்பில், திருஅவையின் ஒன்றிணைந்த வாழ்வை மையப்படுத்தி, புதிய ஆயர்களுக்கென, உரோம் நகரில், செப்டம்பர் 4ம் தேதி துவங்கிய கருத்தரங்கு, செப்டம்பர் 11, இப்புதனன்று நிறைவடைந்தது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

அலுவலகத்திற்குள்ளே முடங்கிவிடாமல், மக்களோடு நேரம் செலவழியுங்கள், ஆண்டவரோடு நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள், பாலங்களை உடைக்காமல், மற்றும், அனைத்திற்கும் ‘ஆமாம்’ போடும் மனிதர்களால் சூழப்பட்டிராமல் இருக்குமாறு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஆயர்கள் குழு ஒன்றிடம் இவ்வியாழனன்று கூறினார்.

கடந்த ஆண்டில் நியமனம் பெற்ற ஆயர்களுக்கு, குருக்கள் பேராயமும், கீழை வழிபாட்டுமுறை பேராயமும் நடத்திய கருத்தரங்கில் கலந்துகொண்ட 105 ஆயர்களை, செப்டம்பர் 12, இவ்வியாழனன்று திருப்பீடத்தில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஆயர்கள் வாழவேண்டிய வழிமுறைகளை எடுத்துரைத்தார்.

ஆயர்களின் பணிக்கு, கடவுளுக்கும், தன் சகோதரர்களுக்கும் நெருக்கமாய் இருப்பது மிகவும் தேவைப்படுகின்றது என்றும், தன் சகோதரர்களின் வாழ்வுக்காக, தன் கரங்களை அழுக்காக்குவதற்கு உண்மையிலே விருப்பம் தெரிவிப்பதோடு, இயேசுவுக்கும், மக்களுக்கும் இடையே எப்போதும் திறந்த வாய்க்கால்களாக வாழ்வதற்கு ஆயர்கள் அழைக்கப்பட்டுள்ளனர் என்றும் திருத்தந்தை கூறினார்.

இயேசு, ஆயர்களாகிய நம் வழியாக மக்களை நெருங்குவதை விரும்புகிறார் என்றும், உலகின் வாழ்வுக்கு உடைக்கப்பட்ட அப்பமாக மாறுவதில் ஆயர்களின் தனித்துவம் அடங்கியுள்ளது என்றும் உரைத்த திருத்தந்தை, மக்களுக்கு நெருக்கமாக வாழ்வது, நமது இன்றியமையாத கடமையாகும் என்று கூறினார். 

ஆயருக்கு மிக அருகில் இருக்கும் குருக்களுக்கு, அவர்கள் மிக நெருக்கமாக இருக்க வேண்டியது மிகவும் முக்கியம் எனவும், பணிச்சுமையால் சோர்ந்துள்ள குருக்களுக்கு உற்சாகப்படுத்துதல் தேவைப்படுகின்றது என்றும் திருத்தந்தை கூறினார். 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

12 September 2019, 15:58